சிந்திக்கேயாளின் சிந்தை

Share this page with friends

பரலோக சிந்தனைகளைப்
பாதியில் நிறுத்திவிட்டு
பூலோக சிந்தனைகளை

உரம்போட்டு வளர்த்துவிட்டு
வெள்ளம் வரும்போதும்,

பூமியதிர்ச்சி வரும்போதும்
வானவரைப் பார்க்க

வெட்டவெளிக்கு விரைந்தோடும்
கால்களின் எண்ணிக்கை
பெருத்துவிட்டது.
அவர்களின் எண்ணங்களும்
கறுத்துவிட்டது (ரோமர் 1:21)

சிந்திக்கேயாளின் சிந்தை
மாறிவிட்டது – ஏனோ
எயோதியாளின் சிந்தையும்
மாற்றம் கண்டுவிட்டது
இதைப் பரிசுத்தப் பவுலடியாரின்
கண்கள் கண்டுவிட்டது.
இதனால், கர்த்தருக்குள்
ஒரே சிந்தையாயிருக்கவேண்டும்
என்ற கட்டளையும்
பிறந்துவிட்டது (பிலிப்பியர் 4:1,1)

சிந்தையைச் சில காலம்
அடகு வைத்துவிட்டு,
தேவனுடைய
மந்தையை மறந்துவிட்டு
வாழும் மக்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது.

சிறைச்சாலைக்குள்ளே
பவுலுக்கும் சீலாவுக்கும்
இருந்த சிந்தை (அப். 16:25)
சபைக்குள்ளே இருக்கிறவர்களிடம்
இல்லையே என்ற கவலை
பரிசுத்தவான்களுக்குப் பெருகிவிட்டது.

பெற்றுக்கொள்ளும் சிந்தை
பெருகிவிட்டது.
கற்றுக்கொள்ளும் சிந்தை
குறைந்துவிட்டது –
இதனால் வருத்தப்பட்டு
பாரஞ்சுமக்கிறவர்களின்
எண்ணிக்கைபெருகிவிட்டது (மத்தேயு 11:28).

தலைகளை எண்ணும்
உலகம் மனித வருத்தங்களை
எண்ணுவதற்குத் தவறிவிட்டது 

பணத்தை என்னும்
மனுக்குலம் நாட்களை
எண்ணத் தவறிவிடுகிறது (சங்கீதம் 90: 12)

என் நுகத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள் (மத்தேயு 11:29)
என்றவரின் முகத்தைப் பார்க்க
விரும்பாத மக்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது –
இதனால் இளைப்பாறுதலைப்
பெறுவதற்குப் பதிலாக
ஆத்துமாக்களில் இளைப்பைப்
பெற்றுக்கொள்ளுகிறவர்களின்
எண்ணிக்கையும்  பெருகிவிட்டது (சங்கீதம் 106:15)

இத்தனைக்கும் நடுவே,
இறை மக்கள்
இறை வார்த்தையை
இரையைப் பார்க்கிலும்
மேலானதாக உட்கொண்டு
சிந்தையில் பதியம் போட்டு
மதியம் என்று பாராமல்
முழங்கால்போட்டு
பரிசுத்த வேதத்தைக் கையில்
எடுத்துக்கொண்டு
பாரஞ்சுமந்து தவித்தாலும்,
போர்வையை (Life)
களைந்துபோட வேண்டும்
என்று விரும்பாமல் (2 கொரி. 5:4),

எலியாவைப் போல
போதும் கர்த்தாவே
என்று சொல்லாமல்
(1 இராஜாக்கள் 19:4).

இயேசுவைப்போல
என் சித்தமல்ல உம சித்தம் தேவா
உம் சித்தம் செய்ய
இதோ என்னை தத்தம் செய்கிறேன்
ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி,
மரணமானது ஜீவனாலே
விழுங்கபடுவதற்காக
போர்வை தரித்தவர்களாயிருக்க
விரும்புகிற கூட்டம் பெருகிவிட்டது

தரிசித்து நடக்க மறுத்த –
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல,
விசுவாசித்து நடக்கிற
பரிசுத்த கால்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள் – மதுரை -14


Share this page with friends