ஊரார் செய்த ஊழியம்!

சின்னச் சின்ன செய்திகள்
கலிலேயா கடல் அருகே
நடந்து சென்ற இயேசுவானவர்
அருகே இருந்த ஒரு
மலையின்மேல் ஏறி அங்கே
உட்கார்ந்தார்(மத்தேயு 15:29).
இயேசுவின் இருப்பிடத்தை
அறிந்து கொண்ட ஜனங்கள்,
ஊருக்குள்ளே
முடங்கிக்கிடந்த
முடவர்களையும்,
சாய்ந்துகிடந்த
சப்பாணிகளையும்,
இருண்ட உலகத்திற்குள்
அசைந்து கொண்டிருந்த
குருடர்களையும்,
அமைதி ஊர்வலத்தில்
அங்கம் வகித்த
ஊமையர்களையும்,
தரைமட்டத்திற்குக்
கீழே தள்ளப்பட்டவர்களையும்
கூட்டிக்கொண்டுவந்து,
சிலரை சுமந்துகொண்டுவந்து
இயேசுவின் பாதத்தில்
வைத்தார்கள்.
அவர்கள் அனைவரையும்
இயேசுவானவர் சொஸ்தப்படுத்தினார்.
அந்த வனாந்திரத்தில்
சொஸ்தமானவர்களையும்
அவர்களைக் கூட்டிகொண்டுவந்த
ஜனங்களையும் வைத்து
மூன்று நாட்கள்
வருடாந்திர sorry
வனாந்திர கன்வென்ஷன் கூட்டங்களை
இயேசு ஒழுங்கு செய்தார்.
கன்வென்க்ஷன் கூட்டங்கள்
யாருக்கு?
ஆத்தும ஆதாயம்
செய்தவர்களுக்கும்
அற்புத சுகத்தைப்
பெற்றுக்கொண்டவர்களுக்குமே!
அந்த ஜனங்கள்
திடீர் கன்வென்ஷன்
கூட்டங்களைப் பற்றி
அறியாததால் உணவு ஏதும்
கொண்டுவரவில்லை.
கூட்ட ஒருங்கிணைப்பாளர்களும்
அதற்கான ஆயத்தங்களைச்
செய்யவில்லை.
இயேசுவிடமிருந்து புறப்பட்டுவந்த
வார்த்தையாகிய அப்பமும்,
வசனமாகிய ஜீவதண்ணீருமே
அவர்களை மூன்று நாட்கள்
தாக்குபிடிக்கவைத்தது.
இயேசுவையே பார்த்துக்கொண்டு
வசனம் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு
பசி தெரியவில்லை,
பசியெடுக்கவுமில்லை.
இறுதி நாள் கூட்டம் முடிந்தது.
இயேசு சீஷர்களைப் பார்த்து
ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன்.
இவர்கள் என்னிடத்தில்
மூன்று நாள் தங்கியிருந்து
சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.
இவர்களைப் பட்டினியாய்
அனுப்பிவிட எனக்கு மனதில்லை,
வழியில் சோர்ந்து போவார்களே ,
என்றார் (மத்தேயு 15:32)
இயேசு மனதுருக்கம் நிறைந்தவர்.
“ஜனத்தை போ” என்று சொல்லாமல்
“போ’ஜனத்தை” கொடுத்து
புன்னகையுடன் அனுப்பினார்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14