தட்டியும் திறக்காத பேராலய கதவு; புதிய பிஷப் காத்திருப்பு போராட்டம்!

Share this page with friends

தருமபுரியில் புதிய பிஷப்பை உள்ளே நுழைய விடாமல் பழைய பிஷப் சிஎஸ்ஐ பேராலயத்துக்கு பூட்டு போட்டார். இயேசுவின் வார்த்தைகள்படி தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் புதிய ஆயர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி நகர பகுதியை ஒட்டி பெரியார் சிலை அருகே 130 ஆண்டுகள் பழமையான சிஎஸ்ஐ பேராலயம் உள்ளது. இப்பேராலயத்தில் பேராயராக பிரபு சந்திரமோகன் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

இவரை கோத்தகிரி சர்ச்சுக்கு இடமாற்றம் செய்து கோவை மண்டல பிஷப் கமிட்டி ரவீந்தர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தருமபுரி சிஎஸ்ஐ பேராலயத்திற்கு தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பணியாற்றி வந்த அன்புராஜ் என்பவரை பணி மாற்றம் செய்துள்ளார்.

அதன்படி அன்புராஜ் கடந்த 7ம் தேதி ஒரு சில பணிகளுக்கு மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். இன்னும் சில பொறுப்புகளுக்கு மற்றும் ஞாயிறு வழிபாடு நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்க இன்று வந்தபோது இங்குள்ள பேராயர் பிரபு சந்திரமோகன் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு அன்புராஜை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

இதையடுத்து அன்புராஜ் சிஎஸ்ஐ ஆலயத்தின் வாசலிலேயே பதவி ஏற்றுக்கொண்டு காலையில் இருந்து மூன்று மணி நேரம் வாசலிலேயே காத்திருந்தார். ஆனால் பிரபு சந்திரமோகன் வாசலை மூடிவிட்டு அவருடைய ஆதரவாளர்களுடன் உள்ளேயே வழிபாடு செய்தார்.

தகவலறிந்து தருமபுரி நகர காவல் ஆய்வாளார் சரவணன் தலைமையில் காவல் துறையினர் விரைந்து வந்து சுமூக தீர்வு காணும் வகையில் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலயத்தில் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட பேராயருக்கு ஒரு பிரிவினர் ஆதரவாகவும், புதிய பேராயருக்கு மற்றொரு பிரிவினர் ஆதரவாகவும் உள்ளதால் இரண்டு பிரிவுகளுக்கும் கோஷ்டிப்பூசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆலயம் முன்பு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேராயர் அன்புராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் 48 பேராயர்களை இடம் மாற்றம் செய்து கோவை மண்டல பிஷப் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் என்னை தருமபுரிக்கும், இங்கு பணிபுரியும் பிரபு சந்திரமோகனை கோத்தகிரிக்கும் மாற்றம் செய்துள்ளனர். ஆனால் இவர் வரம்பை மீறும் வகையிலும், ஆலயத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குறிப்பு: சபைகளுக்குள் நடைபெறும் மோதல்கள் மாறவும், அரசியல் அதிகாரங்கள் ஒழிந்து, தேவ சமாதானம் பெற்று சமூகத்தில் நற்சாட்சியை காத்துக்கொள்ள ஜெபியுங்கள்

சமீபத்தில் வெளியானவைகள்:


Share this page with friends