பலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன?

இந்திய வரலாற்றின் இருண்ட நாள். மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் மறுபக்கம்
இந்திய வரலாற்றில் இந்த நாள் ஒரு இருண்ட தினம். ஆம் இந்தியரின் இதயங்கள் உடைந்த நாள். கிறிஸ்துவின் அருட்பணியாளர்களுக்கு சவாலைத் தந்த நாள் தான் 1999 ஜனவரி 22.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற தொழுநோயாளிகளின் நண்பனும், இரு சின்னஞ்சிறிய தூதர்களைப் போன்ற அவரது குழந்தைகளும் தீயில் உயிருடன் கருகிய நாள்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னலமில்லாமல் உயரிய நோக்கத்துடன் இந்திய திருநாட்டில் ஒரிசா (ஒடிசா) என்ற மாநிலத்தில் தொழுநோயாளிகளுக்கென அமைக்கப்பட்ட அந்த மையத்திற்கு 1965 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தார்.
கடவுளின் அன்பை தொழுநோயாளிகளுக்கு காட்டி, அவர்கள் வாழ்வுக்கு (1941 – 1999) மறுவாழ்வு கொடுத்து வந்தார் என்று இன்றளவும் பேசப்படுகிறது. இளமையிலேயே ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்த இவர் 1983ம் ஆண்டு நற்குணசாலியான சகோதரி கிளாடிஸ் என்ற ஆஸ்திரேலிய பெண்மணியை மணந்தார்.

இருவரும் இணைந்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி இந்தியாவில் கிறிஸ்துவின் அன்பை தன் நடைமுறை வாழ்க்கை மூலம் பறைசாற்றினர்.
தீயகுணம் நிறைந்த திருட்டு மனிதர் கூட்டம் ஒருநாள் திட்டமிட்டு (23.1. 1999) அவர்களைச் சூழ்ந்து கொண்டது. கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (10) மற்றும் தீமோத்தியூ (6) ஆகியோர் தங்கள் வாகனத்தில் இரவு உறங்கிக்கொண்டிருந்த வேளையில் உலகமே அதிர்ந்த அந்தக் கொடூரம் அரங்கேறியது.
வேடர் கைகளில் சிக்கிய மான்களைப் போல, முதுக்கு பின் பணியாற்றும் கயவர்களின் கைகளில் மாட்டி சிக்கிக்கொண்டனர் . அந்தோ பரிதாபம் சின்னஞ்சிறு பாலகர்கள் தங்கள் தந்தையை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு, கதறி அழ, காண்போர் நெஞ்சம் பதைபதைத்தது. ஐீப்பிற்குள்ளிருந்து ஜீசஸ் என்னும் தொனி கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. ஆம் நெஞ்சத்தில் ஈரமில்லாத ஈவு இரக்கமற்றவர்களால் மனசாட்சியேயில்லாமல் உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டனர். அழகிய மலர்கள் அன்று கருகிய மலர்களாக கிறிஸ்துவில் மலர்ந்தனர்..

ஜீப்பிலிருந்து கொப்பளித்த புகையை விட மிஷனெரியின் இரத்த மணம் உலகெங்கும் பரவியது. ஆங்காங்கே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. நீதிக்காக பலர் போராடினர். அதேநேரம் மிஷனெரியின் மனைவி கிளாடிஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “என் கணவரையும் பிள்ளைகளையும் பரலோகில் நிச்சயம் காண்பேன். தீங்கிழைத்தோரை நான் ஏற்கனவே மன்னித்துவிட்டேன்” என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கிரகாம் ஸ்டெயின் சகாப்தம் முடிந்தது என கயவர்கள் கொக்கரித்த அதே மண்ணில் அவரது மனைவி என் கணவர் விட்டு சென்ற பணியைவிட்டு என்னால் தாயகம் திரும்ப இயலாது. நான் மரிக்கும் வரை முன் வைத்த காலை பின்வைக்காது தொடர்ந்து இதே மண்ணில் இன்னமும் அதிக நேசத்தினை காண்பிக்கப்போகிறேன் என்றவாறு கண்காணிப்பில் இருந்த 80 தொழுநோயாளிகளையும் அள்ளி அணைந்து அவர் மனைவி கிளாடிசும், மகள் எஸ்தரும் கனிவாய் கவனித்து வருகின்றனர்.
நம் காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த அற்புதமான இந்த சரித்திர நிகழ்வை நீங்கள் வாசிக்கும் போதே கண்கலங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். எதை எதையோ முந்திக்கொண்டு பகிரும் நாம் இது போன்ற நடைமுறை வாழ்க்கை பாடங்களை உள்ளடக்கிய பதிவுகளை பகிர்வது காலத்தின் அவசியம்.