முடிந்தது! விடிந்தது!!
சின்னச் சின்னச் செய்திகள் எண்:8

வாரத்தின் முதலாம் நாள், விடிந்து முடிப்பதற்குள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடந்து முடிந்துவிட்டது (மத்தேயு 28:1). இதற்காக கல்லறையின் கல்லைப் புரட்டித்தள்ள JCB என்ற கனரக வாகனம் போன்றதொரு எந்திரங்களின் உதவி தேவையில்லாமல் போனது. பூட்டிய அறைக்குள் நுழைபவருக்கு (யோவான் 20:19,26), மூடிவைக்கப்பட்ட கல்லறையிலிருந்து வெளியேவர முடியாதா என்ன?
அந்த வாரத்தின் முதலாம் நாள், கல்லறையின் வாசலில் சாவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. மரணத்திற்கு மரண அடி விழுந்தது. மரணத்தின் கூர் ஒடிக்கப்பட்டது. பாதாளத்தின் வல்லமை பறிமுதல் செய்யப்பட்டது.
கர்த்தரை வைத்திருந்த கல்லறை இன்றைக்கும் காலங்களைக் கடந்து சத்தமின்றி ஊழியம் செய்துகொண்டிருக்கிறது. இதற்காக
சர்வவல்லவரால் சத்தமின்றி திறந்து வைக்கப்பட்டது.
அப்போது, இஸ்ரவேல் தேசத்தின் தலைவர்களோ, பிஷப்மார்களோ, அந்த திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பதினோரு சீஷர்களில் ஒருவர்கூட அதில் பங்கேற்க வில்லை.
அந்தக் கல்லறைக்கு கதவு இல்லை. பெரியதொரு கல்லை புரட்டித்தள்ளி அடைத்திருந்தார்கள். பிரகாசமான தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து அதைப் புரட்டித் தள்ளி அதன்மேல் உட்கார்ந்து, தேடிவந்த மரியாள்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கல்லறை உலகத்திற்கே தினமும் பைசா செலவில்லாமல் சுவிஷேசம் சொல்லிக்கொண்டிருக்கிறது. கல்லறை சம்பாதித்துத் தரும் சில்லறை இருக்கிறதே, அது தேசத்தின் வருமான நீரோடைகளில் கலந்து தேசமெங்கும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.
இயேசுவை மூன்று நாட்கள் மட்டுமே தன் வசமாக வைத்து பாதுகாத்த அரிமத்தியு ஊரானாகிய யோசேப்பின் கல்லறை, வாரத்தின் முதலாம் நாளில் அதிக இருட்டோடே உலக மக்கள் விசுவாசிப்பதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இனியும் உலகம் உள்ளவரை, இயேசு மறுபடியும் வருகிறவரை இந்த கல்லறை திறந்தே வைக்கப்பட்டிருக்கும்.

இதை மூட நினைத்தவர்கள் மூழ்கிப்போனார்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14