இறைச்சிக்காக நடந்த புரட்சி! பயண நிலவரம்

இறைச்சிக்காக நடந்த புரட்சி! பயண நிலவரம்

Share this page with friends

இறைச்சிக்காக நடந்த புரட்சி!

முறையிடுவதிலும்
முறைத்துப் பார்ப்பதிலும்
முன்னிலை வகித்தவர்கள்
இஸ்ரவேல் மக்கள்

அடம்பிடிப்பதிலும்
அழுவதிலும் கூட
அவர்களை மிஞ்ச
ஆட்களில்லை

எண்ணாகமம் பதினோராம் அதிகாரம்
ஆரம்பமே அக்கினிப்பொறியுடன்
ஆரம்பமாகிறது

முறையிட்ட ஜனங்களுக்குள்ளே
அக்கினி பாய்ந்தது

பாளையத்தின் கடைசியில் இருந்த
சிலரை பட்சித்துப்போட்டது

அந்தப் பாளையத்தின்
கடைசியில் இருந்தவர்கள் மீது
கர்த்தர் அதிரடி
நடவடிக்கை மேற்கொண்டார்

அங்கே, கர்த்தருக்குக்
கீழ்ப்படியாமல் ஆட்டம் போட்டவர்கள்
அடக்கம்பண்ணப்பட்டார்கள்

கர்த்தரைப் பரீட்சை
பார்த்தவர்கள் மீது
எஸ்மா சட்டம் அல்ல,
அக்னி பிழம்புகள் பாய்ந்தது

ஜனங்கள் மோசேயை
நோக்கி
கூப்பிட்டார்கள்
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்
அக்கினி அவிந்து போனது!

தங்கள் ஜீவனைக் கொடுத்து
அந்த இடத்துக்கு பட்டா
வாங்கிக்கொடுக்கவில்லை,
மாறாக தபேரா என்ற பெயரை
வாங்கிக்கொடுத்த பெருமை
அந்த முறுமுறுத்த
முன்னோர்களையேச் சாரும்

அக்கினி அவிந்தது போல,
கர்த்தரைபற்றிய பயம்
அதற்குப்பின் அவிந்து போனது

இஸ்ரவேல் புத்திரரும்
திரும்ப அழுது
நமக்கு இறைச்சியைப்
புசிக்கக் கொடுப்பவர் யார்?
என்று புலம்பினார்கள்

முறையிட்டவர்களின்
கணக்கு வழக்குகள்
முடிக்கப்பட்டுப் பெட்டிக்குள்
வைக்கப்பட்டதைக்
கண்டவர்கள், இப்போது
பயமின்றி அழுது,
முறையிடுகிறார்கள். ஏன்?

அவர்களுக்குள் இருந்த
பல ஜாதியான
அந்நிய ஜனங்கள் மிகுந்த
இச்சையுள்ளவர்களானார்கள்

இஸ்ரவேலரல்லாதோர்
இஸ்ரவேலருடன் கலந்து,
இணைந்து நடந்து வந்தார்கள்

அவர்களே துணிந்து
கர்த்தருக்கு விரோதமாக
முறையிடக் கற்றுக்கொடுத்தவர்கள்

இன்றைக்கும்
கர்த்தருக்கும், ஊழியக்காரருக்கும்
விரோதமாக முறையிடக்
கற்றுக்கொடுக்க,

சத்தியத்திற்கு
எதிர்த்து நிற்பது எப்படி?
என்பதைப் போதிக்க
யந்நேயும் யம்பிரேயும்
கண்டங்கள்தோறும்
முகாமிட்டிருக்கிறார்கள்

எகிப்தின் சாப்பாட்டை
நினைப்பூட்டி,
விசுவாசப் ப் பயணத்தை
மட்டுப்படுத்தி,
அடிமைத்தன வாழ்க்கையை
பெரிதுபடுத்தி,
இறைச்சி இல்லாத வாழ்க்கை,
ஒரு வாழ்க்கையா,
மன்னாவெல்லாம்
ஒரு ஆகாரமா என்று
சிந்திக்கவும் கர்த்தரை
நிந்திக்கவும்
தூண்டியவர்கள் அந்த
பல ஜாதியான அந்நிய மக்களே!

கர்த்தரை சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொண்டு
வேறுபிரிக்கப்பட்ட
ஜீவியம் செய்வேன் என்று
தீர்மானம் எடுத்துக்கொண்டு
ஆவிக்குரிய பயணம்
மேற்கொண்ட தேவ ஜனமே,

ஊமையாக்கப்பட்ட
இந்த ஊரடங்கின்
நாட்களிலே உங்கள் வாழ்க்கைப்
பயண நிலவரம் எப்படி உள்ளது?

ஒருவேளை உங்களோடிருக்கும்
இரட்சிக்கப்படாத,
அந்நிய ஜாதியான மக்கள்
உங்களை திசை திருப்பி விட்டார்களோ?

விட்டுவந்ததை நினைப்பூட்டி
கர்த்தரை விட்டு விலகச்
செய்துவிட்டார்களோ?

இல்லாத ஒன்றைச்சொல்லி,
அதற்காக முறையிடத்
தூண்டிவிட்டார்களோ?

மிகுந்த இச்சையுள்ள
அவர்களுடன்
Tie Up பண்ணிக்கொண்ட இஸ்ரவேலர்
இப்போது இறைச்சியை இச்சித்து
புரட்சியை மேற்கொண்டு
கர்த்தாரோடும் மோசேயோடும்
Tug of war -ல் இறங்கிவிட்டார்கள்

ஓ தீமோத்தேயுவே, (விசுவாசியே)
உன்னிடத்தில்
ஒப்புவிக்கப்பட்டதைக்
நீ காத்துகொண்டு, சீர்கேடான
வீண் பேச்சுகளுக்கும்,
ஞானமென்று பொய்யாய்ப்
பேர் பெற்றிருக்கிற
கொள்கையின்
விபரிதங்களுக்கும் விலகு

உன்னை அனல்மூட்டி
எழுப்புவதை விட்டு விட்டு,
ஆதி அன்பிலிருந்து
விலகச் செய்கிற ஒரு கூட்டமுண்டு!

கர்த்தரை மறக்கவும்
அவரது வழிகளைத் துறக்கவும்
கட்டளைகளை வெறுக்கவும்
சூழ்ச்சி பண்ணுவார்கள்

கர்த்தரைத் துக்கப்படுத்திவிட்டு,
அந்நிய ஜாதியான
மக்களுக்கு கீழ்படிந்தால்
அழுவது அவர்களல்ல,நீங்களே,
விளைவு ஜீவனல்ல, மரணமே!

கர்த்தரிடம் இறைச்சி கேட்டவர்களின்
பேச்சைப் பாருங்கள்;
“இப்பொழுது நம்முடைய
உள்ளம் வாடிப்போகிறது
இந்த மன்னாவைத் தவிர
நம்முடைய கண்களுக்கு முன்பாக
வேறொன்றும் இல்லையே’’
என்று அழுதார்கள்

அவர்கள் உள்ளம் தந்தூரி’யை
நினைத்து தூரியில்
ஆடிக்கொண்டிருந்தது!

உடை அழுக்கடையவில்லை
பாதரட்சை தேய்ந்துபோகவில்லை,
ஆனால் உள்ளமோ தேய்ந்துவிட்டது

ஆத்துமா தொய்ந்துபோனது
வயிறு வாடி வதங்கிப்போனது

தங்கள் தங்கள் வம்சத்தின்படி
கூடார வாசலில் நின்று அழுதார்கள்

அடுக்கடுக்காய்
வீட்டு வாசலில் நின்று
முறைப்படி
முறையிட்டிருக்கிறார்கள்!
ஆஹா, அழுவதில் கூட என்ன ஒழுங்கு?

அந்தந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
அவரவர் தங்கள் தங்கள்
கூடார வாசலில் நின்று,

தங்களை அதிசயமாய் காத்து,
வாதைகளால் பார்வோனையும்
ஜனங்களையும் வாதித்து,
பஸ்கா ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தினால்
விடுதலையாக்கி,
பார்வோனின் பிடியிலிருந்தும்
ஆளோட்டிகளின் பிடியிலிருந்தும்
இடும்புப் பிடியிலிருந்தும்
உடும்புப் பிடியிலிருந்தும்
விடுவித்த கர்த்தரை
வாசலில் நின்று வாயாற
துதிக்க மறந்துபோனார்கள்

தங்களின் இச்சையை நிறைவேற்ற,
இறைச்சிக்காக ஒரு புரட்சியை
உண்டுபண்ணிவிட்டார்கள்

மனம் வாடிப் போனதால்,
மன்னாவுக்கு
மாற்று ஏற்பாடு வேண்டி
உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டார்கள்

இறைச்சிக்காக நடந்த புரட்சி! பயண நிலவரம்

கொத்துமல்லி விதையம் மாத்திரம்
இருந்த மன்னாவின் நிறம்
முத்துப் போல இருந்ததாம்.
அதன் ருசி புது ஒலிவ எண்ணையின்
ருசி போலிருந்ததாம்

மன்னாவின் அளவு
அற்பமாயிருந்தாலும்
அது வானத்திலிருந்து வந்த
பொன்னிற மன்னா

கிழக்கு வெளுக்கும் நேரத்தில்
தினமும் பனியுடன் இறங்கும்
அதை தினமும் பொறுக்கி
அன்றைக்கே சாப்பிடவேண்டும்

நாற்பது ஆண்டுகளாக
மன்னாவைச் சாப்பிட்டு
ஜீவனம் செய்தார்கள்
கானான் தேசத்தில்
கால்வைத்த உடனே
சடுதியாய் மன்னா
நின்றுபோனது

நாற்பது வருஷமாய்
வனாந்தரத்தில்
இலவசச் சாப்பாடு!
வனாந்தரத்தில் கடையும் இல்லை,
காடைக்குப் பஞ்சமுமில்லை
வானத்தின் தானியத்தை
வருஷிக்கப்பண்ணி வாழ்வளித்தார்

இஸ்ரவேலர் அழுது
சாதித்துவிட்டார்கள், இல்லை
சோதித்துவிட்டார்கள்!
வனாந்தரத்தில் இருந்ததோ
ஆறு லட்சம் புருஷர்கள்
மனைவிமாரையும் பிள்ளைகளையும்
சேர்த்தால், இருபது இலட்சம்!

மோசேயின் கண்கள் அந்த
வனாந்தரத்தைச்
சுற்றிலும் உலாவியது
கர்த்தரின் கண்களோ
பூமியெங்கிலும் உலாவியது

கர்த்தர், காற்றுக்குக் கட்டளையிட்டார்
பாளயத்தைச் சுற்றிலும்
இரண்டு முழ உயரத்திற்கு
காடைகள் வந்த குவிந்துவிட்டது

கர்த்தருக்கு முன்பாக
பலத்த வேட்டைக்காரனான
நிம்ரோத் வேண்டுமானால்
ஆயிரம் காடைகளை
கொண்டுவரலாம். ஆனால்,
ஆயிரமாயிரம் காடைகளைக்
கொண்டுவர
தேவனால் மட்டுமே முடியும்!

கறி வெந்தது
அதை மென்று
திண்ணும்முன்னே
கர்த்தரின் கோபம் மூண்டது

கர்த்தர் ஜனங்களை
மகா பெரிய வாதையால்
வாதித்தார்

இச்சித்த ஜனங்களை அங்கே
அடக்கம்பண்ணினதால்
அந்த இடத்திற்கு
கிப்ரோத் அத்தாவா
என்று பெயரிட்டார்கள்

இச்சித்து, இறைச்சிக்காக
புரட்சி செய்த இஸ்ரவேலரின்
வாய்க்கு எட்டியது
வயிற்றிற்கு எட்டவில்லை

எட்டிப் பிடித்ததோ வாதை
ஏற்பட்டதோ மரணங்கள்
நடந்ததோ விபரீதங்கள்

அழுகையில் ஆரம்பித்த
பதினோராம் அதிகாரம்
அடக்கத்தில் முடிந்தது

கேட்டதோ இறைச்சி,
நடத்தியதோ அழுகைப் புரட்சி,
வாயிலே கறி,
வாழ்வோ அதோடு சரி!

மன்னாவை வெறுத்தவர்கள்
மண்ணுக்கு மண்ணாகிப்போன சரித்திரம்

எண்ணாகமத்தில் இடம்பெற்றுள்ளது.

கர்த்தரைப் பரீட்சை பார்த்து
அவரது வல்லமையை மட்டுப்படுத்தி
வாழத்தெரியாமல் வாழ்ந்துவிட்டவர்கள்
விட்டுச்சென்ற அடிச்சுவடுகளை விட்டு விட்டு

கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றிய
காலேப், யோசுவாவைப் போல
விசுவாச வார்த்தைகளைப் பேசி,

விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே

சகோதரி சாராள் நவரோஜி

என்று சகோதரி சாராள் நவரோஜி
அவர்கள் பாடியதைப் போலப் பாடிப் பாடி
பயணம் செய்வோம் வாருங்கள்.

விசுவாச விழிப்புணர்வை உண்டாக்கும் இந்தக் கவிக் கட்டுரையை வாசித்த உங்களை வாழ்த்துகிறேன்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை 14

“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்” என்றெழுது. (வெளிப்படுத்தின விசேஷம் 2 :17).


Share this page with friends