ஆலயமும், உபதேசமும்!

Share this page with friends

ஆலயமும், உபதேசமும்!

“அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்” (லூக். 21:37).

கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்லும்போது உங்களுக்குக் கிடைக்கிற ஒரு பெரிய ஆசீர்வாதம் கர்த்தருடைய போதனைகளாகும். ஒரு மனுஷன் ஆவிக்குரிய ஜீவியத்திலே நிலைத்திருக்க, அவனுக்குப் போதனைகள் அவசியம்.

அநேகர் போதனை மற்றும் உபதேசம் ஆகியவற்றின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளாமல் பெயர்க் கிறிஸ்தவர்களாகவே வாழுகிறார்கள். அஸ்திபார உபதேசங்களுண்டு; பிரச்சனைகளிலிருந்து பதில் பெறக்கூடிய விடுதலையின் போதனைகளுண்டு; ஆவிக்குரிய ஜீவியத்திலே முன்னேறிச் செல்லக்கடிய படிப்பினைகளுமுண்டு. அப். பவுலின் நிரூபங்களை வாசிக்கும்போது, எத்தனை அருமையான உபதேசங்களை கர்த்தர் அவர் மூலமாக கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறியலாம். அவை அனைத்தும் நம் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் பிரயோஜனமாக இருக்கிறது.

பல வேளைகளில் வேதத்தின் கருகலான சத்தியங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள். மறைபொருளான அநேக தீர்க்கதரிசனங்கள் உங்களுக்குப் புரியாமல் இருக்கின்றன. கர்த்தருடைய ஆலயத்திலே கர்த்தருடைய தாசர் அப்படிப்பட்ட வேதவசனத்தை எடுத்து அதை விளக்கி போதிக்கும்போது, அது உங்களுடைய ஆத்துமாவுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.

இன்றைக்கு ஆலயங்களின் நிலைமை என்ன? ஏராளமான ஆலயங்கள் பெயரளவிலேயே ஆலயங்களாய் இருக்கின்றன. ஆனால் அங்கே உபதேசம் இருப்பதில்லை. அஸ்திபார உபதேசங்களில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கை உறுதியாய்க் கிறிஸ்துவோடுகூட கட்டப்படுவதில்லை.

ஐரோப்பிய தேசத்திலே, அதிக செலவில் கட்டப்பட்ட பல பெரிய ஆலயங்கள் இன்று வெறுமையாய்க் கிடக்கின்றன. ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அவை இப்போது கேட்பாரற்று அனாதையாய் கிடக்கின்றன. ஜனங்கள் அங்கே வர பிரியப்படவில்லை. அது வெறும் கட்டடங்களாய் பாழடைந்து நிற்கின்றன. உபதேசமில்லாமல், போதனைகளில்லாமல் பாழாய்ப் போயின.

ஆனால் எந்த ஆலயத்தில் கிறிஸ்து இருக்கிறாரோ, அந்த ஆலயத்தில் அற்புதங்கள் நடக்கும். கர்த்தருடைய உபதேசங்கள் அங்கே கொடுக்கப்படும். பல சபைகள் எளிய சபைகளாய் இருந்தாலும், வெறும் கூரைகளின் கீழ் ஆராதிக்கக்கூடிய இடமாக இருந்தாலும் உபதேசங்கள் அங்கே நிரம்பி காணப்படும். வேதவசனத்தின் வல்லமைகளை அங்கே காணலாம். ஆதித் திருச்சபையை நோக்கிப் பாருங்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலே உறுதியாய் தரித்திருந்தார்கள்.

அந்தச் சபையில் ஊழியர்கள் இருந்தார்கள்; அவர்கள் வேத அறிவினால் நிரம்பியிருந்தார்கள். சபை மக்களுக்கு வேண்டிய உபதேசங்கள் ஏராளமாயும், தாராளமாயும் கொடுக்கப்பட்டன. ஆசாரியனுடைய உதட்டிலே ஜனங்கள் அறிவை எதிர்ப்பார்க்கிறார்கள், வேத அறிவை எதிர்பார்க்கிறார்கள், உபதேசங்களை எதிர்பார்க்கிறார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆலயத்தின் உபதேசத்தில் உறுதிப்படுவீர்களாக. கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறதே.

நினைவிற்கு:- “நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்” (மத். 26:55).


Share this page with friends