கல்லுக்கு முத்திரை போட்ட காவல் சேவகர்கள் வித்யா’வின் பார்வை

“அவர்கள் போய்
கல்லுக்கு முத்திரை போட்டு
காவல் வைத்து,
கல்லறையைப்
பத்திரப்படுத்தினார்கள்’’
(மத்தேயு 27: 66)
கன்மலையை வெட்டி
கல்லறையைக் கட்டி
மரித்த இயேசுவை வைத்து
கல்லைப் புரட்டி
மூடி வைத்தவன்
கனத்திற்குரிய
அரிமத்தியா ஊரானாகிய
யோசேப்பு என்பவன்
இவன் தனக்காக
வெட்டிவைத்த
புத்தம் புது கல்லறை
ஒருவரும் ஒருக்காலும்
ஏறியிராத கழுதையில்
பவனி வந்தவருக்கு
ஒருவரும் ஒருக்காலும்
வைக்கப்பட்டிராத
கல்லறையை
இந்தப் பணக்கார
அந்தரங்க சீஷன்
ஆயத்தம்பண்ணி
வைத்திருக்கிறான்!.
இந்த மென்மையான
மனிதனைப் பற்றி
பரிசுத்த வேதாகமத்தில்
நான்கு சுவிசேஷங்களிலும்
மேன்மையாக
எழுதப்பட்டுள்ளது.
இயேசுவை இதய வேந்தனாக,
அமைதியின் மன்னனாக,
உள்ளத்தின் நாயகனாக
ஏற்றுக்கொண்டு,
உள்ளத்தில் கீதம்பாடி
அந்தரங்கமாய்
உலா வந்த உத்தமன்.
இவன் இயேசுவுக்கு சீஷன்,
ஓர் ஐசுவரியவான் (மத்தேயு 27:57)
கனம் பொருந்திய
ஆலோசனைக்காரன்,
தேவனுடைய ராஜ்யம் வரக்
காத்திருந்தவன் (மாற்கு 15:43)
இவன் உத்தமனும்
நீதிமானுமாயிருந்தான்,
யூதர்களுடைய
ஆலோசனைக்கும்,
செய்கைக்கும்
சம்மதியாதவனுமாயிருந்தான்
(லூக்கா 23:50,51)
யூதருக்குப் பயந்தவன்,
இயேசுவுக்கு அந்தரங்க சீஷன்,
இயேசுவின் சரீரத்தை
எடுத்துக் கொண்டுபோகும்படி
பிலாத்துவிடம் உத்தரவு கேட்டவன்
(யோவான் 19:38)
சாகவேண்டிய சந்தர்ப்பம்
வந்தாலும் சாதனை படைப்பேன்
என்று மார்தட்டிய பேதுரு
வேதனையின் உச்சக்கட்டத்தில்
இயேசுவை விட்டுவிட்டு
தூரத்திற்குச் சென்றுவிட்டான்.
அந்தரங்க சீஷனாய்
இயேசுவை பின்பற்றி வந்த
யோசேப்பு என்ற நீதிமான்
இப்போது வெளியரங்க சீஷனாய்
களத்தில் குதித்துவிட்டார்.
மூன்றரை ஆண்டுகளாக
இயேசுவோடு
வெளியரங்கமாய் உலாவி,
உண்டு, உறங்கி,
ஊரெல்லாம் நடந்து ,
ஆறுகளைக் கடந்து,
அற்புத அடையாளங்களைக்
கண்ணாரக்கண்ட சீஷர்கள்
இப்போது தற்காலிகமாக
அந்தரங்க சீஷர்களாக
உருமாறிவிட்டார்கள்.
அந்த மேலறையின்
அனுபவத்தைப் பெறுகிறவரை
சீசனுக்கு சீசன் மாறுகிற
சீஷர்களாய் இருந்துள்ளார்கள்.
(அப்போஸ்தலர் 2:1-4)
இயேசு, பிதாவின் கைகளில்
தமது ஆவியை
ஒப்புக்கொடுத்து மரித்த
சில நிமிடங்களில்
அந்தரங்க சீஷனான யோசேப்பு
பிலாத்துவின் முன்
தைரியமாக நின்று
இயேசுவின் சரீரத்தைக் கேட்டு
உத்தரவுக்காக காத்திருந்தான்.
அவன், இவன் என்றெல்லாம்
பேசின பிலாத்து, மரியாதையாக,
“அவர் இதற்குள்ளே
மரித்தது நிச்சயமா?
என்று நூற்றுக்கு அதிபதியிடம்
கேட்டான்.
ஆம், என்று பதில் வந்தது.
உடனே உத்தரவும் பிறந்தது
(மாற்கு 15:44)
யோசேப்பு உயர்ந்த
மெல்லிய வஸ்திர துணிகளுடன்
அடக்கத்திற்கான அறிய பல
பொருட்களுடன்
சிலுவை மரத்தை நோக்கிச்
சென்றான்
யோவான் 3-ம் அதிகாரத்தில்
இரவில் வந்து,
மறுபடியும் பிறக்கவேண்டிய
விபரங்களை இயேசுவிடமே
கேட்டறிந்து,
மறுபடியும் வருகிறேன்
என்று சொல்லிவிட்டு
இரவோடு இரவாக
மறைந்துகொண்டவன் தான்
நிக்கொதேமு!
இவன் யூதருக்குள்ளே
அதிகாரியும்
பரிசேயனுமாய் இருந்தான்
இவனை இயேசு
போதகனாய் பார்த்தார்
திடீரென நீர்மூழ்கி கப்பல்
வெளியே எட்டிப்பார்ப்பதுபோல
கல்வாரி சிலுவையினருகில் வந்து
நிக்கொ.. எட்டிப்பார்த்தான்
(யோவான் 19:39)
வெள்ளைப் போளமும்
கரிய போளமும் கலந்து
ஏறக்குறைய 100 இராத்தல்
கொண்டுவந்திருந்தான்.
இயேசு உயிரோடிருக்கும்போது
நளதம் என்ற விலையேறப்பெற்ற
தைலத்தில் ஒரு இராத்தல்
கொண்டுவந்து
இயேசுவின் பாதத்தில் பூசின
லாசருவின் சகோதரி
மரியாளைப் போல,
எதைச் செய்தாலும்
இயேசு உயிரோடிருக்கும்போதே
செய்திருக்க வேண்டும்
(யோவான் 12:3)
இப்போது நூறு இராத்தல்
கொண்டுவந்து
என்ன பயன்?
இன்றைக்கும் சிலர்
அடக்கத்தில் மட்டும் வந்து
அடக்கமாய் நிற்பார்கள்.
மூன்றரை வருஷமாய்
போராடி ஊழியம் செய்தபோது
கப்பர் நகூமில் இருந்தபோது
கைகளை மூடிக்கொண்டு
பணத்தையெல்லாம் பக்கத்து
வங்கியில் போட்டுவிட்டு
மரித்தபின் வந்து
நூறு இராத்தல் செலவழித்து
என்ன பயன்?
அத்தனையும் அடக்கத்திற்கு
மட்டுமே உதவலாம்
ஊழியத்திற்கு அல்லவே
சரி, அடக்கம்
அமைதியாய் நடந்தது.
கல்லறை வாசலில்
கல்லைப்புரட்டித் தள்ளி
அடைத்துவிட்டு
யோசேப்பும்
நிக்கோதேமுவும்
சென்றுவிட்டார்கள்.
யோசேப்பு தன்னால்
இயன்றதைச் செய்தான்
இல்லையென்றால் கழுகுகள்
இயேசுவின் சரீரத்தை
சேதப்படுத்தியிருக்கும்
பிலாத்துவின்
அரண்மனையில்
ஓர் அவசரக் கூட்டம்
நடந்தது
பிரதான ஆசாரியரும்
பரிசேயரும் கூடி
புதிய உத்தரவு ஒன்றை
பிறப்பிக்க வேண்டி
ஆண்டவனே என்று
அடைமொழியிட்டு
நின்றார்கள்
ஆண்டவரை சிலுவையில்
அறைய ஒப்புக்கொடுத்தவன்
அவர்களுக்கு ஆண்டவன்!
பரபாசை விடுதலையாக்கி
பாவிக்குப் பச்சைக்கொடி
காட்டியவனெல்லாம்
ஆண்டவனாகிவிட்டான்!
இந்த பிரதான ஆசாரியரும்
பரிசேயரும் மறதிக்காரர்கள் அல்ல
ஆண்டவனே,
அந்த எத்தன்
உயிரோடிருக்கும்போது,
மூன்று நாளைக்குப் பின்
எழுந்திருப்பேன் என்று சொன்னது
எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
(சத்தியம் கேட்ட சத்தியவான்கள்
மறந்துவிட்டார்கள்)
ஆகையால், அவனுடைய
சீஷர்கள் இராத்திரியிலே வந்து,
அவனைக் களவாய்க்
கொண்டு போய்,
மரித்தோரிலிருந்து
எழுந்தானென்று
ஜனங்களுக்குச்
சொல்லாதபடிக்கும்,
முந்தின எத்தைப்பார்க்கிலும்
பிந்தின எத்து
கொடிதாகாதபடிக்கும்,
நீர் மூன்று நாள் வரைக்கும்
கல்லறையைப்
பத்திரப்படுத்தும்படி
கட்டளையிட வேண்டும்
என்றார்கள் (மத்தேயு 27:63,64)
அடிக்கடி உத்தரவு போட்டு
பழகின,
பாவிகளின் ஆண்டவன்
ஒருகனம் சிந்திக்கிறான்,
யூதர்களைப் பிரியப்படுத்தி
தன் பெயரைத் தக்கவைத்து
இயேசுவை நிற்கவைத்து
சிலுவையில் அறைய
ஒப்புக்கொடுத்து
உத்தரவு பிறப்பித்தவனால்
இப்போது யாரையும் பிரியப்படுத்தி
உத்தரவு போட முடியவில்லை.
நெஞ்சில் ஈரமில்லாதவனுக்கு
இப்போது நாக்கிலும்
ஈரமில்லாமல் போனது
எனவே
நாக்கு சுழலவில்லை
விரல்கள் அசையவில்லை
மனைவியானவள்,
இந்த நீதிமான்
நிமித்தம் சொப்பனத்தில்
வெகுபாடுபட்டேன்
என்று சொன்னது இப்போது
நினைவுக்கு வந்துவிட்டது
நீதிபரரை ஒப்புக்கொடுத்ததால்
தன்னையே நொந்துகொண்டிருந்த
பிலாத்து
உள்ளுக்குள்ளேயே
வெந்துகொண்டிருந்தான்
இயேசு மகா சத்தமாய்
கூப்பிட்டு ஜீவனை விட்டபோது
தேவாலயத்தின் திரைசீலை
மேலிருந்து கீழாக
கிழிந்ததையும் அவன்
மறந்துவிடவில்லை
நீதியின் சூரியன் மரித்த போது
மூன்று மணி நேரம்
சூரியன் தற்காலிகமாக
மறைந்துகொண்டு
தனது துக்கத்தை சொல்லாமல்
சொல்லிக்கொண்டிருந்தது
திடீரென பூமியெங்கும் அந்தகாரம்
சூழ்ந்துகொண்டதால்
பறவைகள் பாதியில்
தங்கள் கூடுகளுக்குத்
திரும்பிக்கொண்டிருந்தன
அந்த பிரதேசத்தில்
அந்தகாரம் சூழ்ந்துகொண்டதை,
கன்மலைகள் பிளந்துகொண்டதை,
கல்லறைகள் திறந்துகொண்டதை,
பரிசுத்தவான்களுடைய சரீரங்கள்
எழுந்திருந்ததை,
அவ்வளவு சீக்கிரம் அவன்
மறந்துவிடவில்லை
(மத்தேயு 27:51,52)
தனக்குத் தானே
கேடுண்டாக்கி
கேட்டின் மகனை
விடுதலையாக்கி
விடுதலை நாயகனை
சிறையாக்கி
அவரது புகழை
சின்னாபின்னமாகியவனால்
எப்படி உத்தரவு போட முடியும்?
பிலாத்து பீறிட்டுச் சொன்னது
என்னவென்றால்
உங்களுக்குக்
காவல்சேவகர் உண்டே;
போய், உங்களால் கூடியமட்டும்
பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்
முகத்தில் அறைந்தாற்போல
கூறிவிட்டு
உள்ளே போய்
முகங்குப்புற விழுந்து
குமுறியிருப்பான்
நீங்க போய் பாத்தீங்களா?
என்று கேட்கக் கூடாது.
பின்ன என்ன
அவனால் நிம்மதியாகவா
உறங்க முடியும்?
சமாதான கர்த்தரை
சிலுவையில் அறைய
ஒப்புக்கொடுத்தவனுக்கு
சமாதானம் ஏது?
அவர்கள் போய் கல்லுக்கு
முத்திரைபோட்டு,
காவல் வைத்து,
கல்லறையைப்
பத்திரப்படுத்தினார்கள்.
(மத்தேயு 27:66)
இவர்கள் காவல் காத்தது
கல்லறையை மட்டுமே,
கல்லறைக்குள்
இருப்பவரை
காவல் காக்க
யாரால் கூடும்?
இவர்கள் முத்திரை போட
முடிந்ததெல்லாம்
கல்லுக்குத் தான்
இயேசுவின்
சொல்லுக்கு
முத்திரை போட
யாரால் கூடும்?
கல்லுகளையும்
அப்பங்களாக்க
வல்லவருக்கு,
கல்லுகளாலே
ஆபிரகாமுக்குப்
பிள்ளைகளை
உண்டுபண்ண
வல்லவருக்கு,
முத்திரை போட
யாரால் கூடும்?
தேவாலயத்தின்
திரைச்சீலை
மேலிருந்து கீழாக
இரண்டாக
கிழிந்ததை போல
பிரதான ஆசாரியர்,
பரிசேயர்,
காவல் சேவகர்கள் என
அத்தனைபேரின்
முகத்திரையும்
மேலிருந்து கீழாக
இரண்டாக கிழிந்தது
இமைப்பொழுதில்
தூதன் இறங்கிவந்தான்
சீல் வைத்தவர்கள்
சிதறிப்போனார்கள்
தூதன் கல்லைப்
புரட்டித் தள்ளினான்
இயேசு உள்ளே இல்லை. ஆம்
அவர் ராஜாதி ராஜாவாக
வெற்றி வேந்தனாக
உயிர்த்தெழுந்தார்
பூட்டப்பட்ட அறைக்குள்
நுழைந்தவருக்கு
(யோவான் 20:26)
கல்லறையின் கல்லை
புரட்டித்தள்ளினால்தான்
வெளியே வர முடியும் என்றல்ல
புரட்டித்த தள்ளியது எதற்காக?
தேடிவந்தவர்களும்
ஓடிவந்தவர்களும்
காண்பதற்காக
சந்தேகப் பிராணிகளின்
பார்வைக்காக!
தலைகளைத் துலுக்கின
ஊர் வாயை
மூடுவதற்க்காக!
பாசமுள்ள பணக்காரர்களே
அன்புள்ள
அரிமத்தியா ஊரார்களே
பிலாத்துவைக் கூட
உடனடியாக சந்தித்து
பேசக்கூடிய யோசேப்புகளே
நீங்களும் ஆண்டவருக்குத் தேவை
ஈகையில் ஈரமுள்ள
வசனத்தில் சாரமுள்ள
யோவன்னாள்களே
சூசன்னாள்களே (லூக்கா 8:2)
அதிக இருட்டோடே எழுந்து
கல்லறையானாலும்
துணிந்து செல்லக்கூடிய
மகதலேனா மரியாள்களே
நீங்களும் ஆண்டவருக்குத் தேவை
அரிமத்தியா ஊரானாகிய
யோசேப்பு
தனது புது கல்லறையை
விட்டுக்கொடுத்தது போல,
இதயம் என்னும்
நல் அறையை
இல்லம் என்னும் நல் அறையை
உயிர்த்தெழுந்த இயேசுவுக்காக
விட்டுக்கொடுக்க ஆயத்தமா?

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
மதுரை -14