1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக விளங்கும் தனுஷ்கோடி கிறிஸ்தவ ஆலய சுவர் இடிந்து விழுந்தது

Share this page with friends

1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக தனுஷ்கோடியில் விளங்கிய கிறிஸ்தவ ஆலய சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.

பதிவு: டிசம்பர் 05,  2020

தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி பெரும் புயல் தாக்கியது. இதில் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ராமேசுவரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்து இருந்த தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது.

நகரமே மண் மூடிப்போன மேடாக மாறியது. புயலின் அடையாளமாக சிதிலமடைந்த கிறிஸ்தவ ஆலய சுவர்களும், சில கட்டிடங்களும் மட்டுமே எஞ்சி இருந்தன. இந்த கட்டிடங்களை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வந்து செல்வார்கள்.

தற்போது புரெவி புயலால் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடலோர போலீசாரின் பாதுகாப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் தனுஷ்கோடி கடற்கரையில் 1964-ம் ஆண்டு புயலை ஞாபகப்படுத்தி, நினைவுச்சின்னமாக நின்ற கிறிஸ்தவ ஆலயத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையறிந்த மீனவர்கள், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். மேலும் கடல் சீற்றம்காரணமாக அரிச்சல்முனை புறக்காவல் நிலையத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் ஒரு பகுதியும் இடிந்து கடலுக்குள் விழுந்தது. பலத்த சூறாவளி காற்றால் கம்பிபாடு பகுதியில் தற்காலிகமாக மீனவர்களால் அமைக்கப்பட்டு இருந்த சில சங்கு பாசி விற்பனை கடையின் குடிசைகளும் சேதமடைந்தன.


Share this page with friends