அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை

Share this page with friends

1952ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அசரடிக்கும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் புருஷன் ?” என ஏளனமாய் விரட்டி விட்டனர். பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அந்தப் பெண் அந்த ஊரை நோக்கி நகரத் துவங்கினாள். முடியவில்லை பிரசவ நேரம். ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவளுக்குப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தன்னந் தனியனாய்ப் பெற்றெடுத்த அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பனி பொழிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மறு நாள் காலையில் அந்த வழியாக மிஷனரிகள் வந்தபோது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர். குரல் வந்த திசையில் சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறைந்து போன நிலையில் இறந்து கிடந்த தாயின் கரங்களில் ஒரு ஆண் குழந்தை. குழந்தை காப்பாற்றப்பட்டான். பையன் காப்பகத்தில் வளர்ந்தான். தனது பத்தாவது வயதில் அவனிடம் அந்த உண்மையை காப்பகத்தினர் சொன்னார்கள். அதற்கு அடுத்தநாள் காலையில் படுக்கையில் அந்தப் பையனைக் காணவில்லை. அவனை அவர்கள் தேடினார்கள். அதே பாலத்தின் அடியில் அவனைக் கண்டார்கள். கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அந்தப் பையன் அழுது கொண்டே “இந்தக் குளிரையெல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயாம்மா” என நடுங்கிக் கொண்டே அழுதான். பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

தாயின் அன்பு அளவிட முடியாதது. அந்தத் தாய் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என சொன்ன இயேசுவின் அன்பு அனைத்திலும் உயர்ந்தது. இதே போன்ற நிராகரிப்பு, இதே போன்ற குளிர், ஒரு தாயின் தவிப்பு, ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு, எல்லாம் நாம் அறிந்தது தானே ! கிறிஸ்மஸ் விழாவை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “அன்பு” எனலாம். மனுக்குலத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு ! “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ( மத் 4.4 ) என்கிறது விவிலியம். அத்தகைய வார்த்தை மனிதனாக அவதாரம் எடுத்த நாளைத் தான் கிறிஸ்தவம் கிறிஸ்து பிறப்பு என்கிறது !

கிறிஸ்மஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள் ? வண்ண வண்ண நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரம், குடில், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து, புத்தாடை, நல்ல சாப்பாடு, அலங்காரம், அப்புறம் ஆலய திருப்பலி, இயேசுவின் பிறப்பு ! அவ்வளவு தானே ? விழாக்கள் எல்லாமே இப்போது ஒரு வியாபார தளங்களாகி விட்டன. எந்த விழாவை எடுத்துக்கொண்டாலும் சரி, எப்படிடா ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றே புதுப் புது விஷயங்களுடன் கடை விரிக்கும். தீபாவளி போன்ற விழாக்களுக்கு எரிந்து தீரும் பட்டாசுகள் பல கோடி ரூபாய்களை அழித்து முடிக்கும். கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் சாக்லேட், ஆடைகள், அலங்காரங்கள் என பல விஷயங்களைக் காட்டி பொருளாதாரத்தின் பல்லைப் பிடுங்கும்.

உஷாராகிக் கொள்வது ரொம்ப நல்லது, ரொம்ப முக்கியமானது ! அலங்காரங்களே தேவையில்லையா ? மகிழ்ச்சியாய் எல்லோரும் இருக்க வேண்டாமா என மனசு குரல் கொடுக்கிறதா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மகிழ்ச்சிக்கும், நீங்கள் தேவையில்லாமல் செலவிடும் பல்வேறு விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ! கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாய் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல் என்றால் நான் இதைத் தான் சொல்வேன். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், “இயேசு என் இடத்தில் இருந்தால் என்ன செய்வார் ?” எனும் கேள்வியைக் கொண்டே தீர்மானியுங்கள். வாழ்க்கை ரொம்பவே அர்த்தமுள்ளதாகி விடும்.

சரி, இயேசுவின் பிறப்பையே கொஞ்சம் பார்க்கலாமே ! இந்த பிரபஞ்சத்திலேயே ‘தான் எங்கே எப்படிப் பிறக்க வேண்டும்’ என தீர்மானித்துப் பிறந்த ஒரே ஒரு நபர் இயேசு மட்டுமே ! அப்படிப்பட்ட இயேசு எப்படி அவதரித்தார் ? அவருடைய வம்சாவழிப் பட்டியலில் பாவிகளுக்கு இடம். அவர் நினைத்திருந்தால் குற்றமே இல்லாத ஒரு பரம்பரையில் வந்திருக்க முடியாதா ?

அவருடைய பிறப்பு விலங்குகளுடைய கொட்டிலில். ஏன், அவர் நினைத்திருந்தால் மாளிகையில் அரசனின் மகனாய் அவதரித்திருக்க முடியாதா ? அவர் பிறப்பு அறிவிக்கப் பட்டது சமூக அமைப்பின் கடைநிலையில் இருக்கும் இடையர்களுக்கு ! ஏன் மாளிகையில் பட்டாடைவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்க முடியாதா ? அவர் பிறந்த இடத்தில் அலங்காரம் இருந்ததா ? அலங்கோலம் தானே இருந்தது ! அவரைச் சுற்றிப் புத்தாடை இருந்ததா கந்தல் இருந்ததா ? அவருக்கு சாக்லேட் பந்தி நடந்ததா ? இப்படி இயேசுவின் உண்மையான பிறப்பு நிகழ்வு எப்படி நடந்தது என்பதையும், ஏன் நடந்தது என்பதையும் மனதில் அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை.


Share this page with friends