ஏழைகள்

ஆவிக்குரிய சபை அமைப்புகளில் களையெடுக்க வேண்டியவைகள்

Share this page with friends

கர்த்தரின் அபிசேசகம், கர்த்தரின் தரிசனம், கர்த்தரின் ஆத்தும பாரம், கர்த்தரின் இருதய ஏக்கத்தின் அடிப்படையில், அற்பமாக ஆரம்பிக்கப்பட்டு, நெருக்கடி, பலரது தியாகங்கள் மற்றும் போரட்டங்களில் வளர்ந்த இந்த ஆவிக்குரிய இயக்கங்களில் இருக்கும் களைகள் பெரும் சேதத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகளை இனம் கண்டு கொள்ள கர்த்தர் உதவி செய்வாராக!

A. அரசியல் செய்யும் வினோத நூதன புனித பிறவிகள்.

இவர்கள் தங்களை சார்ந்தவர்கள் தவறு செய்தால் நியாயம் பேசுவார்கள். ஆனால் அதுவே நிற்கதியற்றவர்கள் என்றால் அது அநியாயம் என்று சட்டம் பேசி சாதித்து விடுவார்கள்.

இவர்கள் எல்லாரிடமும் சிரித்து பேசுவது போல பேசி, ஆப்பு வைக்க வேண்டிய இடத்தில் சரியாக வைப்பார்கள். எல்லா சிரிப்பும் சிரிப்பு அல்லவே! தங்கள் காரியம் சாதிக்க பிறரை கவிழ்த்து என்ன வேண்டுமென்றாலும் செய்யும் புனிதர்கள்.

தங்கள் காரியம் நடக்க பிறரை தூண்டி விட்டு நன்றாக விளையாட கற்றவர்கள். பாலில் பழம் விழுவது போல தங்கள் காரியம் சாதிக்க நன்றாக பேசுவார்கள். தங்கள் முழு அநியாயத்தையும் மறைத்து பிறர் காண நல்லவர்கள் போல நடித்து பதவிகளை தக்க வைத்து கொள்ள வேண்டும், இல்லையெனில் பதவிகளை பெற வேண்டும் என்பதே.

பிறரை குறித்து பிறரிடம் கோள் மூட்டி, சண்டையை கிளப்பி, பழி சுமத்த வேண்டிய நேரத்தில் சரியாக பழி சுமத்தி, மாறி மாறி காட்டி கொடுத்து, தேவைப்படும் பட்சத்தில் கட்டியும் பிடித்து பரிசுத்த முத்தமும் தந்து, இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நிற்பார்கள் பாருங்கள். அது ஒரு கலை தான். அதற்கு அவர்கள் போடும் பெயர் தான் சார் ரொம்ப diplomatic. தங்கள் பெயர் ஒருபோதும் கெடாமல் பார்த்துகொண்டு காய் நகர்த்தும் அதி புத்திசாலிகள்.

இதற்கு தீர்வு!

வேதத்தில் கிறிஸ்துவோடு நடந்து கிறிஸ்துவோடும் பரிசேயர்களோடும் போக்குவரத்துமாக இருந்த யுதாசை கொஞ்சம் படித்தால் போதும்.

நீதியை நீதி என்றும், பாவத்தை பாவம் என்றும், பரிசுத்ததை பரிசுத்தம் என்றும், உலகத்தை உலகம் என்றும் கொஞ்சமாவது நிதானித்து பார்த்து அவற்றிர்க்காக நிற்க கற்று கொள்ள வேண்டும்.

2. அதி பரிசுத்தவான்கள் மற்றும் மிஞ்சின நீதிமான்கள்.

இவர்கள் தங்களுக்கு என்று ஒரு பிரமாணத்தை வைத்து கொண்டு தங்கள் சுய நீதியை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து தங்கள் ஊழியத்தில், வாழ்வில் நடந்த அனுபவ சங்கதிகளை சொல்லி தங்கள் பிரசங்கம் மற்றும் பேச்சை ஆரம்பிப்பார்கள்.

இவர்கள் வெளியில் get up மற்றும் கொஞ்சம் set up யையும் எதிர்பார்த்து தான் பழகுவார்கள். இவர்கள் தங்களுக்கு என்று சில வெளியரங்கமான standards வைத்து இருப்பார்கள். பாஸ்டர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி வேற சொல்லி கொண்டே இருப்பார்கள்.

தங்கள் ஊழியத்தை, தங்கள் அபிசேசகம், மற்றும் தங்கள் அழைப்பை அதிகமாக மேன்மை படுத்தி பிறரை மட்டம் தட்டி கொண்டே இருப்பார்கள். பிறரை தரக்குறைவாக பேசுவது தான் இவர்கள் பொழுது போக்கு. தங்கள் வெற்றி, வளர்ச்சியின் அடிப்படையில் தாங்கள் என்ன தப்பு பண்ணினாலும் கர்த்தர் கண்டு கொள்ள மாட்டார் என்கிற எண்ணம் கொண்ட பரிசுத்தவான்கள்.

தாங்கள் தான் கஷ்டப்பட்டது போல ஒரு பிரம்மையை ஏற்படுத்தி, தங்களை ஒரு பொருட்டாக எண்ணி கொண்டே இருப்பார்கள். பிறரது கஷ்டத்தில் உதவி செய்யாமல் நாங்களும் விசுவாசத்தில் தான் வளர்ந்தோம் என்று சொல்லி நீங்களும் அப்படியே வாருங்கள் என்று விசுவாசத்தில் குறைவு உள்ளவர்களை தாங்க மாட்டார்கள்.

இதற்கு தீர்வு

இயேசு கிறிஸ்து பரிசேயரே உங்களுக்கு ஐயோ ஐயோ என்று சொன்ன அந்த மாயக்காரர்களை கொஞ்சம் வாசித்தல் வேண்டும்.

பிறருக்கும் கிருபை, இரக்கம், மற்றும் நீதி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

3. பிரபல அல்லது தலைமை ஜால்ரா/ துதிபாடிகள்

இவர்கள் அடிக்கப்பட கொண்டுபோகும் ஆட்டுக்குட்டிகள், தலையாட்டி பொம்மைகள், ஐயா வாக்கு தெய்வ வாக்கு! ஐயா சொன்னால் சரிதான் என்று சாதிக்கும் ரசிக பெருமக்கள் மற்றும் வாக்காள பெருமக்கள். ஐயாவை திருப்தி படுத்தும் ஜால்ரா கூட்டங்கள். சில தலைவர்களுக்கு இப்படி பட்டவர்கள் இல்லையெனில் தூக்கம் வராது. வசனம் என்ன சொல்கிறது என்பதில் அக்கறை இல்லை. அப்படி யாரும் நடக்க முடியாது என்று வீம்பு பேசுபவர்கள்.

ஐயாவுடைய பேச்சு மற்றும் பிரசங்கம் இவர்களுக்கு தேன் ஒழுகும் இனிப்பாக இருக்கும், உன்னிப்பாக கவனிப்பார்கள், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்று கொண்டு, அவர்கள் தப்பே பண்ணியிருந்தாலும் அதை பெலவீனம் என்று சாதிக்கும் மிக மிக நல்லவர்கள்.

ஐயாவோடு ஒரு புகைப்படம் எடுத்தாலோ, ஐயாவோடு கை குலுக்கினாலோ அதை புனிதமாக நினைத்து, வீட்டில் அவற்றை முதன்மை இடத்தில் வைத்து அங்கீகாரம் தேடும் பிறவிகள். ஐயாவை போலவே gestures மற்றும் postures ஐ மாதிரியாக கொள்பவர்கள்.

இவர்கள் தலைமை மற்றும் ஐயாவுக்கு ரொம்ப விசுவாசமாக இருந்து பிறரை குழி தோண்டி புதைக்கவும் செய்வார்கள். ஐயாவை பின்னர் திருப்தி படுத்த என்ன வேண்டுமென்றாலும் செய்து, பிறர் காண நல்லவர்கள் போல நடித்து காரியம் சாதிக்க பிறந்தவர்கள். சுயமாக தீர்மானம் செய்ய தெரியாமல், பாடுகள் வந்தால் அவைகளை மேற்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி வழியும் பத்தாம்சாலிகள்.

இதற்கு தீர்வு

ஏசாயா 6 ஆம் அதிகாரத்தை எடுத்து கொஞ்சம் வாசித்து விட்டு கர்த்தரை மகிமை படுத்த வேண்டும்.
??‍♀️ கர்த்தர் தாமே நம்மை அழைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்து, கர்த்தரை முன்வைத்து கர்த்தர் ஏற்படுத்தின தலைமைக்கு கீழ்படிந்து இருக்க கற்று கொள்ள வேண்டும்.

4. நீதி நியாயம் கேட்கும் போராட்டவாதிகள்.

தப்பை தட்டிகேட்கிரோம் என்று யாரையும் எதிர்த்து, தங்களை கரைப்படுத்தும் சுயநலமில்லாத அறிவுஜீவிகள். கொஞ்சம் ஆக்ரோசமாக பேசுவார்கள். அனேகரால் சண்டைகாரர்கள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள்.

பிறருடைய தூண்டுதல் கொண்டு பிறருக்கு நியாயம் கேட்கிறோம் என்று தங்கள் காரியத்தில் கோட்டை விடும் ரொம்ப ஓவர் நல்லவர்கள்.

தங்களுக்கு என்று ஒரு காரியம் வரும் போது, தனித்து விடப்படுபவர்கள். தங்களால் நன்மை பெற்றவர்கள் கூட, எதற்கு வம்பு என்று ஒதுங்கி கொள்வார்கள். சிலவேளைகளில் இவர்களோடு தங்களை அடையாளப்படுத்த கூட விரும்பமாட்டார்கள். இவர்கள் விரும்பபடுவார்கள் எப்போது தெரியுமா? இவர்களை வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு ஒரு அநியாயம் நடக்கும் போது!
ஏன? நம்ம அப்போஸ்தலர் யாக்கோபு கூட பவுலிடம் அப்படி தானே நடந்து கொண்டார்.

மனித தயவு கிடைக்கப் பெறாத அதே நேரத்தில் தவறான கண்ணோட்டத்தில் அதிகம் பார்க்கப்பட்ட அதே நேரத்தில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். பிறரை துணிந்து கெடுக்காதவர்கள். கூடுமானவரை பிறரது கஷ்டத்தில் துணை நிற்பவர்கள்.

இதற்கு தீர்வு

கொஞ்சம் ஞானம், பொறுமை, காரியசமர்த்தி, காரிய சித்தி போன்ற அற்புதமான குணங்களை வளர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் அநியாயத்தையும் சகிக்க கற்று கொள்ளுங்கள். பிடிவாதம் மற்றும் மோதல் போக்கை விட்டு விட கற்று கொள்ள வேண்டும். சில இடத்தில் கர்த்தரை போல கண்டுக்காமல் இருங்கள். மாம்சத்தில் யுத்தம் பண்ணுவதை விட்டு விட்டு கர்த்தர் யுத்தம் பண்ண விட்டு கொடுங்கள். அவர் உண்மை உள்ள நியாயதிபதி. அவர் நிச்சயம் சாத்தானை கடிந்து கொண்டு உங்கள் அழுக்கு வஸ்திரத்தை மாற்றுவார். கனம் மற்றும் வாழ்வு உண்டாகும். ஏனெனில் ஒரு வீட்டில் ஒரு கழிவறையில் சுத்தம் செய்யும் சுத்த காரணிகள் இல்லாவிடில் அவைகள் நாற்றம் வைக்குமே! அதே போல இப்படிப்பட்டவர்கள் உள்ளே இருப்பது சிலருக்கு நாற்றம் போன்று இருந்தாலும் இவர்களை கொண்டு சுத்தம் ஆவது ஆவிக்குரிய சபை இயக்கங்களே!

எனவே!

அவனவன் தன் அழைப்பில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த அழைப்பில் நடக்க வேண்டும். தன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் கிருபை சத்தியம் நீதி போன்றவற்றில் வளர வேண்டும்.
அழைத்தவரை நோக்கி பார்த்து அவரை மகிமை படுத்த வேண்டும். கனம் செய்ய வேண்டியவர்களை கனம் செய்து கர்த்தர் முன்னிலையில் அதை நிறைவேற்ற வேண்டும். ஊழியம் செய்பவர்கள் ஊழியம் செய்ய விட்டு கொடுத்து உற்சாகம் செய்ய வேண்டும். அதிக அதிகார போதை நம்மையே அழித்து விடும் என்பதை உணர வேண்டும். நமக்கு இனி ஒரு ராஜியம் மற்றும் ஆளுகை உண்டு என்பதையும், நியாய சிங்கானத்திற்கு முன் நிற்க வேண்டும் என்று அறிய வேண்டும். கர்த்தர் உடன் நடந்து, அவர் சித்தம் செய்து, அவரது சுபாவத்தில் பெருகி, அவரை போல மாறி, ஆத்தும அறுவடை செய்வோம்.

கர்த்தர் சீக்கிரம் வருகிறார், கர்த்தரின் சித்தம் செய்யாத எந்த இயக்கங்களும் கர்த்தரால் அங்கீகரிக்கப் படாது என்பதை உணர்ந்து செயல்பட கர்த்தர் கிருபை தருவாறாக!

செலின்


Share this page with friends