மூன்றாம் தரிசனம்! வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends


மூன்றாம் நாளில் இயேசு
உயிர்தெழுந்துவிட்டார்
 
மூன்றரை வருடங்களாக
உயிருக்கு உயிராக
நேசித்த சீஷர்கள்
ஊருக்குள்ளே ஓடி
ஒளிந்துகொண்டார்கள்
 
உம்மோடு மரிக்கவும்
ஆயத்தம் என்ற பேதுருவை
பிலாத்துவின் அரண்மனை
அடையாளம் காட்டிவிட்டது.

 
கூரைவீட்டின் மேல் நின்று
கூவும் சேவலுக்கு,
அன்றையதினம் பிலாத்துவின்
அரண்மனையில்
கூவும் ஊழியம் கிடைத்தது


கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி
உண்மையாய் உரக்கக் கூவியது
 
தாவும் உள்ளம்  கொண்ட பேதுரு
மூன்று முறை சரியாக இயேசு
சொன்னபடியே மறுதலித்துவிட்டார்

 
மனுஷரைப் பிடிக்க
அழைக்கப்பட்ட பேதுரு
ஆறு சீஷரை தன் வலையில்
பிடித்துக்கொண்டு

மூன்றரை வருடங்களுக்கு முன்
விட்டுவந்த வலையை
எடுத்துக்கொண்டு 
சீறிப் பாய்ந்து, திபேரியா 
கடலுக்குள் சென்றுவிட்டார்


எப்போதாவது ஒருநாள்
ஏங்கிட்ட வராமலா போயிருவீங்க என்று
மூன்றரை ஆண்டுகளாக காத்திருந்த
திபேரியா கடல் அவர்களை
உடனே உள்வாங்கிக்கொண்டது

 
அழைத்தவரையும் அழைப்பையும்
உதாசீனப்படுத்தினால்
உலகம் என்கிற சமுத்திரம்
உள்வாங்கிவிடும்


உள்ள மீன்களும் ஓடி ஒளிந்துவிடும்
வலை காலியாகும்
வாழ்க்கை வீணாகும்
 
விசுவாச காற்றழுத்த தாழ்வுமண்டலம்
சீஷர்களுக்குள் மையம் கொண்டதால்
ஏழு பேரும் புயலெனப்
புறப்பட்டுப்போய்விட்டார்கள்

 
பின்மாற்றத்தில் சிக்கிய
சீஷர்கள் வீசிய வலையில்
சிறு மீன்கள்கூட
சிக்கிக்கொள்ளவில்லை

கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து
கடலுக்குள் இருந்த நண்டு நத்தை
கனவா, சாளை சகிதம்
அனைத்தும் ஓடி ஒளிந்துகொண்டன

 
அவர்தான் காற்றுக்கும் கடலுக்கும்
கழுதைக்கும் மீனுக்கும்
காகத்திற்கும பூச்சிக்கும்
கட்டளை கொடுக்கிறவராயிற்றே!
 
கடல்வாழ் மச்சங்களுக்கு  
அன்றயதினம் ஒருநாள் இரவு
144 தடையுத்தரவு
போடாமலா  இருந்திருப்பார்
?

பின்மாற்றத்தில் சிக்கிய
சீஷர்கள் வீசிய வலையில்
ஜீவராசிகள் சிக்கிக்கொள்ளவில்லை

ஆனால், பிசாசானவன் வீசிய
மாய வலையில்
ஜீவ மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்
சிக்கிக்கொள்கிறார்களே
!
 
நண்டுகளுக்குத் தெரிந்ததுகூட
மனிதர்களுக்குத் தெரியவில்லையே!
 
இயேசுவானவர் உயிர்தெழுந்தபின்
இரண்டு இடங்களில்
இலவச தரிசனம் தந்ததை
கண்ணாற கண்டபின்பும்
விட்டுவந்த தொழிலைத்
தொட்டுத் தொடர்ந்ததால்
வீணாய்ப் போனார்களே
எல்லாம் கானல் நீராய்ப் போனதே
 
சீறிப் பாய்ந்து
உடனே படவேறினாலும்
சீரும் சிறப்புமாய்
ஏலேலோ ஐலசா என்று பாடிகிட்டே  
வலையை வீசினாலும்


அந்த இரவு ஓர் அந்தகார இரவு
அழைப்பை மறந்தவர்களின்
கூட்டு முயற்சியை
ஆண்டவர் அடியோடு
வேரறுத்து இரவு

 
அழைத்த அழைப்பில்
நிலைத்திராமல்
பின்னிட்டுப் போனவர்கள்
அப்பட்டமான
தோல்வியைச் சந்தித்த இரவு
 
ஒரு முறை,
கடல் மேல் நடந்துவந்த இயேசுவை
ஆவேசம் என்று நினைத்து
சீஷர் கூட்டம் அலறியது
உங்களுக்கும் நினைவிருக்கலாம்
 
இயேசு,
நான்தான் என்றவுடன்
நீரேயானால்
கடல்மேல் நடந்துவர
உத்தரவு தாரும் 
என்ற பேதுருவின் துணிச்சலை
அரங்கேற்ற இயேசு விரும்பினார்
வா என்று அழைத்தார்
 
பதினோரு பேரும் பயந்து
நடுங்கிக்கொண்டிருந்தபோது
வா என்று அழைத்த இயேசுவின்
வார்த்தை மேல் விசுவாசம் வைத்து
கடல்மேல் நடந்துசென்ற
அதே பேதுருதான்


உயிர்த்தெழுந்த பின்
இயேசுவை சந்திக்க
தைரியம் இன்றி
பக்க (பழைய) வழியாய்ச் சென்று
பக்குவமாய் முன்னேறிவிடலாம்
என்று நினைத்துவிட்டார்

 
நினைப்புதான்
பிழைப்பைக் கெடுத்தது என்பார்கள்

பேதுரு விஷயத்தில்
அது உண்மைதான்
 
மூன்றரை வருஷம்
சேமித்த விசுவாசத்தை
ஒரே நாள் இரவில்
தொலைத்துவிட்டார்கள்

 
மூன்றாம் நாள் உயிரோடெழுந்த
இயேசுவின் முகத்தையும்
சத்தத்தையும்
அவரது அசைவுகளையும்
ஒரே நாளில் மறந்துவிட்டார்கள்

 
திரைகடல் ஓடி
திரவியம் தேட இவர்கள்
அழைக்கப்படவில்லை
 
தன்னைவிட்டு ஓடிமறைந்து
சமுத்திரத்திற்குள்
சங்கமமான சீஷர்களைத் தேடிக் கொண்டே    
கடற்கரைக்கு இயேசு வந்துவிட்டார்.

சாரமிழந்த உப்பைப்
போன்றவர்களைத் தேடி
சாரமேற்ற வந்துவிட்டார்

 
விடியப்போகிறது- ஆம்
பின்மாற்றத்திற்குப் பின்
ஒரு நாளானது  முடியப்போகிறது
 
விடியலுக்கு காத்திராமல்
இருட்டோடே எழுந்து
ஜெபித்துப் பழகிய
விண் நாயகர்
இழந்துபோன
தன்னுடையவர்களை மீட்க 
அந்தக் கடற்கரைக்கு
அப்பத்துடனும் மீனுடனும் வந்துவிட்டார்

 
பிள்ளைகளே
புசிக்கிறதற்கு ஏதாகிலும்
உங்களிடத்தில் உண்டா?
என்று கேட்ட போது
ஒன்றுமில்லை என்று
ஒத்துக்கொண்டார்கள்


பிழைப்பைத் தேடிச் சென்றது
உண்மைதான்
ஆனால் உண்மையைத்
தொலைத்துவிடவில்லை
என்பதும் உண்மைதான்.
 
பேதுருவை தமது அன்பின்
வலையில் முதலாவது
பிடித்தபோது
ஆழத்திலே
கொண்டுபோய் வலையை போடு என்றார்
இப்போது வலதுபுறமாக
வலையைப் போடுங்கள் என்கிறார்
 
ஆலோசனைகள்
அவ்வப்போது மாறும்
இயேசு மாறாதவர்

 
ஆண்டவர் சொன்னபடி
வலையைப் போட்டால்
ஆழத்தில் அதிசயம்
வலதுபுறத்தில் வல்லமை
வெளிப்படும்

வெற்றி எங்கே?
அதிசயம் எங்கே?
வல்லமை எங்கே?
என்றுதானே கேட்கிறீர்கள்


அது உங்களுக்குப்
பக்கத்தில்தான் இருக்கிறது


இயேசுதான் அதை
உங்களுக்குச் சொல்லவேண்டும்

ஆழத்திலா அல்லது வலதுபுறமா
ஏதுவாய் இருந்தாலும் 
OK Lord என்று சொன்னால்
வலையும் நிரம்பும்
படகும் நிரம்பும்
 
அக்கறையுடன்
அந்தக் கடற்கரைக்கு வந்த ஆண்டவர்
கரையில் கரி நெருப்பு போட்டு
அதின்மேல் மீன்துண்டு வைத்து
சுடச்சுட அதிகாலையில்
அசைவ உணவை
ஆயத்தம்பண்ணிவைத்திருந்தார்

 
பிலாத்துவின் அரண்மனையில்
கரி நெருப்பு போட்டு
குளிர் காய்ந்து
கொண்டிருந்தவர்களிடம்
சேர்ந்து குளிர்காயும்படி
உட்கார்ந்த பேதுருவுக்கு
சுறீர் என்று பட்டிருக்கும்.
 
153 மீன்களை இழுத்துக்கொண்டு
கரைக்கு வந்தபோது
அவனது எண்ண அலைகள்
மூன்றரை வருடங்களுக்கு முன்ஆழத்தில்
வலைபோட்டுப் பிடித்த திரளான
மீன்களை விட்டுவிட்டு
இயேசுவைப் பின்தொடர்ந்தது
நினைவுக்கு வந்திருக்கும்
 
பிடித்த மீன்களைக்
கொண்டுவாருங்கள் என்று
சொல்லிக்கொண்டே
சமைத்த மீன்களை
இயேசு எடுத்துவைத்து
அப்பங்களை அடுக்கிவைத்தார்


கடலுக்குள் போனபோது, வேகம் இருந்தது
கர்த்தருக்கு முன் வந்து அப்ப த்தை புசிக்க
அவர்களுக்கு தைரியம் இல்லாதிருந்தது
 
மீண்டும் அழைப்பு
அவர்களைத் தேடி வந்தது


வாருங்கள்
போஜனம்பண்ணுங்கள் என்றார்

தூரம்போனதைப் பற்றிப் பேசாமல்
பயந்துகொண்டிருந்த சீஷர்களின்
அருகில் எழுந்து சென்று அப்பத்தையும்
மீனையும் எடுத்து
அவர்களுக்குக் கொடுத்தாரே!
 
அந்த நேசரின் அன்பை
விவரிக்க வார்த்தைகள் ஏது?


தண்டில் சேவகம்பண்ண
வலையை விட்டுவிட்டு
ஊழியத்திற்கு
தலையைக் கொடுத்தவர்கள்
சேவகம் எழுதிகொண்டவருக்கு
ஏற்றவர்களாய் இராமல்
பிழைப்புக்கடுத்த அலுவல்களில்
சிக்கிக்கொண்டது தவறுதான்

தன்னைப் போல பிறரையும்
நேசித்த பேதுரு,  இந்த விஷயத்தில்
கூட்டணி சேர்த்து கடலுக்குள்
கூட்டிச்சென்றது தவறுதான்


மீட்புக் கப்பலைப் போல மீட்பதற்காக
மீட்பர் வந்தது உண்மைதான்

அவரிடம் வலை ஏதுமில்லை
அன்பை வலைபோலப் பிண்ணி
பின்மாற்றக் குழு தலைவனாகிய
பேதுருவைப் பிடித்துவிட்டார்
ஒப்புதல் வாங்கிவிட்டார்
ஆடுகளை மேய்க்க
அதிகாரமும் தந்துவிட்டார்


இத்துடன் இயேசுவின்
மூன்றாம் தரிசனம் முடிந்தது
.
(யோவான் 21:14)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், மதுரை -14

Share this page with friends