இதுதான் கிறிஸ்தவ அன்பு

இதுதான் கிறிஸ்தவ அன்பு
கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய மனைவி கிளாடிஸ், மகன்கள் பிலிப்ஸ் (வயது 11) மற்றும் திமோத்தி (வயது 8) ஆகியோருடன் ஒரிசா மாநிலத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். 1965 ல் இந்திவிற்கு வந்த அவர் 34 ஆண்டு காலமாக தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றி இயேசுவின் அன்பை மக்களுக்கு காண்பித்தது வந்தார். கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி 22-ல் ஸ்டெயின்ஸ் தனது இரு மகன்களுடன் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அம்மூவரையும் பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்புடன் தொடர்புடைய தாரா சிங் மற்றும் அவனது கூட்டாளிகள் பன்னிரெண்டு நபர்கள் ஜீப்புடன் தீவைத்து எரித்துக் கொன்றார்கள். ஸ்டெயின்ஸ் தப்பி விடாமல் இருப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் வழிமறித்ததாக கூறப்பட்டது.
உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில், தாரா சிங் உள்பட 13 பேரை குற்றவாளி என 2003 ஆம் ஆண்டில் கட்டாக் செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்தது. அதில், முக்கிய குற்றவாளி தாரா சிங்குக்கு தூக்கு தண்டனையும், மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ், தனது 13 வயது மகளுடன் ஒரிசாவிலே தங்கி தொழுநோயாளர் மத்தியில் தொடந்து பணியாற்ற தன்னை அர்ப்பணித்தார் அதோடு தனது கணவரையும், மகன்களையும் எரித்தவரையும் மன்னித்து அவர்கள் தான் கிறிஸ்துவின் அடிச்சுவடியை பின்பற்றுகிறவர்கள் என்று நிரூபித்தார்கள்.
கடந்த 2005-ல் தாரா சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உயர் நீதிமன்றம், மகேந்திர ஹெம்ப்ராம் என்பவரை தவிர மற்ற 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்த போதிலும் அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். தாரா சிங் மட்டும் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும், வரும் நாட்களில் குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவான். இந்த கொலைபாதக செயலில் ஈடுபட்ட பன்னிரெண்டு பேரின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாக்கப்பட்டார்களே!. கிறிஸ்துவ மிஷனரிகளை உயிருடன் கொன்றவர்கள் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். இது எவ்வளவு பெரிய அநீதி..
கணவரையும், தனது இரண்டு மகன்களையும் இழந்த கிளாடிஸ் ஸ்டெயின்ஸோ இவற்றையெல்லாம் சிந்திக்காமல், ‘இந்தியர்களை தான் மிகவும் நேசிப்பதாகவும் இந்தியா தான் தனது வீடு’ என்று கூறி தன் கணவனின் வழியில் தொழுநோயை ஒழிக்கவும், தொழுநோயிலிருந்து குணமான மக்களை சமுதாயத்தோடு ஒன்றிணைக்கவும், தொழுநோய் குறித்த அச்சத்தை மக்கள் மனத்திலிருந்து அகற்றவும் தொடர்ந்து பணியாற்றி.. கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்து வருகின்றாகள். இந்திய அரசு இவரின் சேவையை பாராட்டி 2005-ம் ஆண்டு ‘பத்மஸீரி’ விருதை இவருக்கு வழங்கியது. அப்போதைய குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்த விருதை இவருக்கு அளித்தார். மேலும் கடந்த டிசம்பர் 18,2015 அன்று திருமதி ஸ்டெயின்ஸ்க்கு அன்னை தெரேசா நினைவு விருதும் வழங்கப்பட்டது.
நாம் ஒருவேளை இரத்த சாட்சியாய் மரிக்காவிட்டாலும், உயிரோடு இருக்கும்போதே அவருக்கு சாட்சியாக, அவர் போதித்தபடி, சத்துருக்களை சிநேகித்து, உலகிற்கு இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும். காரணமின்றி உலகத்தாரால் பகைக்கப்படும்போதும், அயலகத்தாரால் அநியாயமாய் துன்புறுத்தப்படும் போதும், சினம் கொண்டு பழிக்கு பழி வாங்காமல் திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் போல அவர்களையும் நேசித்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம்