இந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.

Share this page with friends

தேவபிரசன்னம் ஒரு நிதானிப்பு

இப்போது நடக்கும் சுவிசேஷ ஊழியங்கள் பெரும்பாலும் இயேசுவை எப்படியாவது மக்கள் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கிலே செயல்படுகின்றன. இயேசுகிறிஸ்துவை எப்படி ஏற்றுக்கொள்வது, ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும், பாவத்தின் வலிமை என்ன?? இரட்சிப்பின் வலிமை எப்படி இருக்கும்?, ஒரு உண்மையான கிறிஸ்தவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதுபோன்ற சத்தியங்கள் மலையேறிவிட்டன.

இரட்சிப்பின் வலிமையை வாழ்க்கையில் காணமுடிவதில்லை, ஞாயிறு ஆராதனையில்தான் காணமுடிகிறது. வாரம் முழுவதும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பெண் ஞாயிறு வந்தவுடன் தன் பெலத்தையெல்லாம் பிரயோகித்து பேய் ஆட்டம் ஆடி தன் மன ஆழுத்தங்களை போக்கிவிடுகிறாள். அவளுக்கு அப்படி ஒரு மன நிம்மதி. ஆனால் இதுதான் கிறிஸ்தவம் என்று அவளை நாம் நினைக்க வைத்திருப்பதுதான் வேதனையான நிகழ்வு.

இதுபோன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, கையை பலமாக தட்டி நடனம் ஆடும்போது ஒரு குறிப்பிட்ட சில மணிநேரம் மன அமைதி கிடைக்கும் என்பது சைக்காலஜி. அதனால்தான் இன்றும் பல பப்கள், நடன விடுதிகள் செயல்படுகின்றன.

இன்னும் சிலர் மிக மிக அமைதியான இடத்திற்கு சென்று கண்ணை மூடி அமர்ந்தால் மனம் அமைதியடைந்துவிட்டதாக உணருகிறார்கள். ஆனால் இதுவும் ஒரு வஞ்சகமே! சில ஆலயங்களின் பிரமாண்ட தோற்றமும் அதனுள் இருக்கும் அமைதியும், ஒருவித அமைதியான இசைகள், சில நறுமணங்கள் கூட ஒருவருக்கு மன அழுத்தங்களை சில மணிநேரம் போக்கிவிட முடியும், ஆனால் இவைகள் எல்லாம் சரீர பிரகாரமான குறிப்பிட்ட நேர மயக்கங்களே அல்லாமல் வேறல்ல.

பெரும்பாலானவர்கள் இந்த உணர்வைத்தான் தேவபிரசன்னம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு பிரசன்னத்தை உணரவைக்க போதகர்களும் படாதபாடுபடுகிறார்கள். இது போலியான பிரசன்னம் என்று எப்படி அறிவது??

எளிதில் இது போலி என உணரலாம்…

உதாரணமாக ஆராதனைவேளையில் ஆடிப்பாடி உச்சஸ்தாயில் தேவனை புகழும் இந்த வாய் வீட்டிற்கு வந்தவுடன் மாற்றமடைகிறது. கொஞ்சமும் சம்பந்தமில்லாத பேச்சு, கோபத்தில் கொப்பளிக்கும் வரைமுறையற்ற வார்த்தைகள், பொய், இச்சை, பொறாமை, வன்மம், பழிவாங்கும் உணர்ச்சி, பண ஆசை, இப்படி எல்லாவற்றாலும் ஆட்டுவிக்கப்படும் இந்த சரீரம் ஆராதனை வேளையில் தேவபிரசன்னத்தை உணருகிறதென்றால் அது வஞ்சகம்தானே!

நாம் தேவபிரசன்னத்தை ஆராதனை வேளையில் மட்டுமே உணரமுடியுமா??

இல்லை இல்லை இல்லவே இல்லை. அன்றாட வாழ்க்கையில்தான் தேவபிரசன்னத்தை உணரமுடியும். அடுத்தவர்களை மன்னிக்கும்போது, மன்னிப்பு கேட்கும்போது, விட்டுக்கொடுக்கும்போது, அநீதியாக குற்றம்சாட்டும்போது, அப்படியே குற்றம் சாட்டப்பட்டாலும் நியாயமாக தீர்ப்புசெய்பவரிடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாம் அமைதியாக இருக்கிறோம் அல்லவா அப்போது, மேலும் இச்சிக்கூடிய சூழலிலும் வெற்றி பெறும்போது, இந்த இடத்தில் உண்மையை சொன்னால் அவமானப்படுவோம் என தெரிந்தும் உண்மையை பேசும்போது, எல்லா தகுதிகள் இருந்தும் “நீங்கள் இதை செய்யுங்கள்” என சொல்லும்போது,

சுருங்க சொன்னால் நம்மை சாகடித்து தேவனை வெளிப்படுத்தும்போதெல்லாம் தேவபிரசன்னத்தை நாம் உணரலாம் மற்றவர்களையும் உணரவைக்கலாம்.

தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பது தேவபக்தியின் இரகசியம், தேவன் என் மாம்சத்தில் வெளிப்படுவதுதானே உண்மையான தேவபக்தியும் தேவபிரசன்னமும். ஆக இது ஆராதனை வேளையில் மட்டும் எப்படி சாத்தியமாகும்??

இனியும் வஞ்சிக்கபடாதிருங்கள், சிலர் ஆராதனை வேளையில் தேவபிரசன்னம் இறங்கி வருவதை காண்கிறேன் என்று சொன்னாலும், அதன் மூலம் சரீரபிரகாரமாக ஒரு அமைதியே வந்தாலும், அதையெல்லாம் சோதித்து உண்மையான தேவபக்தியையும் தேவபிரசன்னத்தையும் அடைய ஓடுங்கள்… இந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.


Share this page with friends