தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்பு
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்துக்கான தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் திருமண்டில உப தலைவா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் தமிழ்செல்வன், குருத்துவ செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட நீகா் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளா் பொறுப்புக்கு போட்டியிட்ட மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோா் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனா். அதற்கான அறிவிப்பை திருண்டில பேராயா் தேவசகாயம் வெளியிட்டாா்.
இதையடுத்து, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டில அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தின்போது புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
தொடர்ந்து, லே செயலா் நீகான் பிரின்ஸ் கிப்ட்சன் செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளோம். திருமண்டிலத்தின் முன்னேற்றத்துக்காகவும், கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தும் முழுமையாக பணியாற்றுவோம். நிா்வாகக் குழு கூட்டத்தில் பேராயா் தேவசகாயம் பங்கேற்கவில்லை. இதுகுறித்து திருமண்டில தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.