இடமுண்டு என் உள்ளத்தில் – பாடல் பிறந்த கதை 

Share this page with friends

இடமுண்டு என் உள்ளத்தில்

(Thou didst leave Thy throne)

பாடல் : எமிலி எலியட்

 1. சிங்காசனமும் ராஜ கிரீடமும்
துறந்தெனக்காய் புவி வந்தீர்;
ஆயினும் உம் தூய பிறப்பிற்கு
பெத்லகேமில் இடமில்லை.
வாரும் ஆண்டவா, இயேசுவே,
இடமுண்டு என் உள்ளத்தில்.

2. உம் ராஜ கட்டளையைக் கூறியே
தூதர் சேனையும் பாடியதே;
ஆனால் தாழ்மை மிகுந்த நீர் ஏழை மரி
மைந்தனாக இப்பூவில் வந்தீர்.
  – வாரும் ஆண்டவா

3. குழியுண்டு நரிக்கு, பறவைகட்கு
கூடுண்டு மர நிழலில்;
தேவ மைந்தனே, உம் படுக்கை எங்கே?
கலிலேய வனாந்தரத்தில்
  – வாரும் ஆண்டவா


4. விடுவிக்கும் ஜீவ வார்த்தை கொண்டு வந்தீர்
உம் மக்களை விடுவிக்கவே;
ஐயோ! ஏளனமாய் முள் கிரீடம் சூட்டி
கல்வாரிக்கனுப்பினரே.
  – வாரும் ஆண்டவா


5. பரலோகம் களித்து, விண்தூதர் பாடும்
உம் வெற்றி வருகையின் நாள்;
“இடமுண்டு, என் அருகில் வா” என்னும்
உம் வார்த்தை என் உள்ளில் தாரும்.
  – வாரும் ஆண்டவா 

பாடல் பிறந்த கதை 

குதூகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆதாரமான, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி, தூய வேதத்தில் வாசித்துக் கொண்டிருந்த எமிலி எலியட் இவ்வார்த்தைகளைக் கண்டபோது வேதனைப்பட்டாள். இந்த வசனம் அவள் உள்ளத்தில் எழுப்பிய கேள்விக் குறிக்குப் பதிலாக இப்பாடலை எழுதினாள்.

இறைமகன் இயேசு தியாக அன்பினால் இவ்வுலகில் மனு உரு எடுத்த செயலையும், அதற்கு எதிரிடையாக, இவ்வுலக மக்கள் காட்டிய அன்பற்ற பதிலையும் ஒப்பிட்டு தியானித்த எமிலி, தன் பாடலின் முதல் 4 சரணங்களையும் ஒப்பிடும் காட்சிகளாகவே எழுதினாள். ஒவ்வொரு சரணத்திலும் முதலிரு வரிகள் இயேசுவின் பிறப்பின் தியாக அன்பை எடுத்துக் கூறுகின்றன. பின்வரும் இருவரிகள் அவருக்கு நாம் அளித்த அன்பற்ற பதிலை எடுத்துக்காட்டுகின்றன. இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றி இவ்வாறு எழுதின எமிலி, 5-வது சரணத்தில், அவரது கம்பீரமான இரண்டாம் வருகையைப் பற்றி எழுதி, “இவ்வருகையில், முதல் வருகையின் வேறுபாடுகள் அனைத்தும் மாறிப்போகும்”, என்ற நல் நம்பிக்கையுடன் இப்பாடலை முடிக்கிறார்.

இப்பாடலை இயற்றிய எமிலி, 22-7-1836 அன்று இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் பிறந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் திருச்சபையின் நற்பணிக்கென்று அர்ப்பணித்து வாழ்ந்தார். தாம் இருந்த பகுதியில் செய்யப்பட்ட மீட்புப் பணிகளிலும், ஞாயிறு பள்ளி ஊழியங்களிலும் உற்சாகமாக ஈடுபட்டார். “நான் பாவி தான்” என்ற பிரபல பாடலை இயற்றிய சார்லெட் எலியட் இவருடைய மருமகளாவார். ஆறு ஆண்டுகள் “திருச்சபையின் மிஷனரி ஊழியத்தில் சிறுவர் பணி” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். நோய்வாய்ப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், மற்றும் குடும்பங்களில் பிரச்சனையோடு இருப்பவர்களின் உபயோகத்திற்கென்று 48 பாடல்களை எழுதி, “தலையணைக்கடியில்” என்ற தலைப்பில் வெளியிட்டார்.

இப்பாடலை, எமிலி தன் தந்தையின் ஆலயமாகிய தூய மாற்கு ஆலயத்தின் பாடகர், மற்றும் ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளின் உபயோகத்திற்கென எழுதினார். சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் உண்மையான நோக்கத்தை எடுத்துக்காட்டவே இப்பாடல் எழுதப்பட்டது.

அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தில் புகழ்பெற்ற ஆர்கன் இசைமேதையான போதகர் தீமோத்தேயு R. மத்தேயு இப்பாடலுக்கு “மார்கரெட்” என்ற ராகத்தை, அமைத்துக் கொடுத்தார்


Share this page with friends