குருவைப் பின்பற்ற, சிலுவையே ஆதாரம்! – சகரியா பூணன்

Share this page with friends

இயேசுவின் சிநேகத்தில் “பிதாவே” எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம் “அதே மனப்பான்மையோடு” நேசம் கொண்டிட இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தவுடன், பேதுருவை சபையின் மேய்ப்பனாய் நியமனம் செய்வதற்கு முன்பாக, அவன் இந்த பூமியிலுள்ள எதைக் காட்டிலும் தன்னை அதிகமாய் நேசிக்கிறானா? என்பதைக் கேட்டறிந்தார் (யோவா 21:15-17). ஆம், தன் ஆண்டவரை முதன்மையான ஸ்தானத்தில் வைத்து நேசிப்பவர்களுக்கு மாத்திரமே அவருடைய சபையில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது! எபேசு சபையின் மூப்பன் புறக்கணிக்கப்படும் அபாயத்தில் இருந்தான்! ஏனென்றால், அவன் தன் ஆண்டவர்மீது கொண்டிருந்த ஆரம்ப அன்பின் தியானத்தை இழந்த காரணமேயாகும்!! (வெளி. 2:1-5).

நாம் மெய்யாகவே சங்கீதக்காரன் கூறியதைப்போல் “பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை”
(சங்கீதம் 73:25) என நாமும் கூற முடியுமென்றால், அவர்களே குருவைப்
பின்பற்றும் மெய்யான சீஷர்கள்!

இயேசு நம்மிடம் எதிர்பார்க்கும் அன்பு உணர்ச்சிவசமான, மனம் நெகிழ்ந்து
“பரவசப் பாடலை” அவருக்குப் பாடிடும் ஓர் அன்பு அல்ல! அவர் நிச்சயம்
இவ்வித நுரைபொங்கும் மேலோட்டமான அன்பை நம்மிடம்
எதிர்பார்க்கவில்லை!!

மாறாக, நாம் அவரை மெய்யாகவே அன்புகூர்ந்தால்,அவருக்கு
கீழ்ப்படிகிறவர்களாய்இருந்திடவே நம்மில் எதிர்பார்க்கிறார்
(யோவான் 14:21).

ஒரு மெய் சீஷன் “தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையைஅனுதினமும்எடுத்து வரவேண்டும்!”
(லூக்கா 9:23) என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அதாவது, ஒருவன் தினசரி வேதம் வாசிப்பதைவிட, தினசரி ஜெபிப்பதை விட. . .
தினசரி தன்னை வெறுத்து தன் சிலுவையை எடுக்க வேண்டியதே மிக
முக்கியமானதாகும். இதுவே, இயேசுவை அன்புகூர்ந்து இந்த கட்டளைக்கு
கீழ்படிவதாகும்!

“தன்னை வெறுப்பதென்பது” ஒருவன், தான் தொன்றுதொட்டு ஆதாமிலிருந்து பெற்று
ஜீவிக்கும் “சொந்த ஜீவியத்தை” வெறுப்பதேயாகும். இந்த சுய-ஜீவியத்தை
மரணத்திற்குள் கொண்டு வருவதே சிலுவையை எடுப்பதின் பொருளாகும். நம்
சுய-ஜீவியத்தை நாம் முதலாவதாகவெறுத்துவிட்டால், பின்பு அதை நாம்
எளிதில்அழித்து விடமுடியும்!

ஆம், கிறிஸ்துவின் ஜீவனுக்கு நம் சுய-வாழ்க்கையே பிரதான எதிரியாய்
இருக்கிறது. இந்த சுய-வாழ்க்கையைத்தான் “மாம்சம்” என வேதாகமம்
அழைக்கிறது. நம்மிலுள்ள எல்லாவிதமான தீய-இச்சைகளுக்கும் இந்த மாம்சமே ஓர்
பண்டகசாலையாய் இருக்கிறது!

நமக்கானதைத் தேடுவதோ. . . நம் சுய கனத்தை நாடுவதோ. . . நம் சொந்த
மகிழ்ச்சியை விரும்புவதோ. . . நம் சுய வழிக்குச் செல்வதோ. . . போன்றநம்
சுய-சித்தங்களை நிறைவேற்றும்படிஏற்படும் சோதனைகளின் தூண்டுதல்கள் யாவும்,
இப்பண்டக சாலையிலிருந்தே புறப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோமாக!

நாம் நேர்மையுள்ளவர்களாய் இருப்போமென்றால், நாம் செயலாற்றும் நல்ல
கிரியைகள்கூட தீமையான நோக்கங்களால் கறைப்படுவதை நாம் காண முடியும்.
எல்லாம், இந்த மாசுபடிந்த இச்சைகளிலிருந்து தோன்றுவதேயாகும். ஆகவே, நாம்
இந்த “மாம்சத்தை” வெறுக்காவிட்டால், நம் ஆண்டவரை நம்மால் ஒரு போதும் பின்பற்றவே முடியாது! இதனிமித்தமே, “நம் சொந்த ஜீவனை” வெறுப்பது அல்லது
இழப்பது குறித்து இயேசு அதிகமாய் பேசியிருக்கிறார். இந்த வாக்கியம்,
சுவிசேஷங்களில் 6-முறை திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது
(மத் 10:39; 16:25;
மாற்கு 8:35;
லூக்கா 9:24; 14:26;
யோவான் 12:25).

இவ்வாறு இந்த வாக்கியம் சுவிசேஷங்களில் அடிக்கடி கூறப்பட்டிருந்த போதும்,
இன்றோ இந்த வாக்கியத்தின் செய்திதான் ‘மிகக் குறைவாய்’
புரிந்துகொள்ளப்பட்டு, மிகக் குறைவாய்
பிரசங்கிக்கப்படுகிறது!!

தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்


Share this page with friends