பொக்கிஷத்தை பெற, உங்கள் ஆழ்மனதில் புதைந்திருப்பது என்ன?

Share this page with friends

“அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது , அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்”.
மத்தேயு 13:44

புதைந்திருப்பது பழங்காலத்து பொருளோ (அ) புதையலோ, அதற்கு என்றும் பெரும்மதிப்பு உண்டு. ஏனெனில் விலையேறப்பெற்றவைகள் என்றும் புதையலாக புதைக்கப்பட்டிருக்கும் (அ) பார்க்க கிடைக்காத அரியபெறும் வகையானவைகளும் காலப்போக்கால் புதைந்திருக்கும், அதெல்லாம் மிகவும் விலையேறப்பெற்றதாய் இருக்கும். அது போல தங்கம், வைரம், எரிவாயுகள் என்று ஆழத்திலிருந்து வெளிவரும் எல்லாம் புதையலும், பொக்கிஷங்களுமே. அப்படிபட்ட புதையலுக்கெல்லாம் மேலான புதையலாய்; அப்படிபட்ட பொக்கிஷங்களுக்கெல்லாம் மேலான பொக்கிஷமாய் இருக்கிறது பரலோகராஜ்யம். அப்படிபட்ட புதையலை (அ) பொக்கிஷத்தை பெற நமக்குள் தேவையான பொக்கிஷம் எதுவென்று பார்ப்போம்.

நாம் மேலே வாசித்தபடி புதைந்துபோன பொக்கிஷங்கள் எப்படி விலையேறப்பெற்றதோ, அப்படியாக பரலோகம் என்ற புதையலை (அ) பொக்கிஷத்தை பெற, உங்கள் ஆழ்மனதில் புதைந்திருப்பது என்ன? எல்லோருக்கும் அவரவர் பார்வையில் அவர்கள் நல்லவர்களும், நீதிமான்களுமே. சிலர் அதையும் தாண்டி தங்கள் வெளியான நடக்கையால் மற்றவர்களிடம் நீதிமான் என்றும், நல்லவர் என்றும் பெயர் பெறுவர். ஆனால் தேவன் பார்ப்பதோ உங்கள் உள்ளான, உங்களுக்குள் புதைந்திருக்கும் பொக்கிஷங்களையே. வேதம் சொல்லுகிறது, எரேமியா 17:9,10ல் “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்”. மண்ணுக்குள் புதைந்திருப்பதெல்லாம் விலையேறப்பெற்றதாய் இருக்க, மனிதனின் இருதயத்திற்குள் புதைந்திருப்பதெல்லாம் மகாகேடுள்ளதும், ஏமாற்றும் தந்திரமுள்ளதாகவும் இருக்கிறது. ஆனால் எரே 17:10ல் தேவன் தெளிவாக சொல்லுகிறார், அவனவனுக்குரிய பலனை கர்த்தர் அவன் இருதயத்தை ஆராய்ந்து, உள்ளந்திரியங்களைச் சோதித்தும் அருளுகிறாராம். பலரின் செய்கைகள் நல்லதை போல காணப்பட்டாலும், தங்கள் இருதயங்களில் பல கெட்டதையும், பொல்லாததையும் கொண்டே நல்லவர் போல் கிரியை செய்கிறார்கள். தங்கள் செய்கைகளை அவர்கள் பெரிதாய் காட்டினாலும், அவர்கள் இருதயம் அதில் கொஞ்சம் மாறுபட்டதாய் காணப்படுமெனில், முழுமனதில்லாமல் அவர்கள் செய்கிற காரியம் எதிலும், அவர்கள் தேவனிடத்தில் இருந்து பலனை எதிர்பார்க்க முடியாது. தேவன் நம் அந்தரங்கம் அனைத்தையும் அறிவார். நாம் சொல்லும் பொய்கள், நாம் மறைக்கும் உண்மைகள், உள்ளத்தின் எண்ணங்கள், நன்மை செய்ய திராணியிருந்தும் செய்யாமல் போனது, மன்னிக்காமல் போனது, தங்கள் சுயநலத்தால் பிறரை குற்றப்படுத்துவது, தான் செய்த தவறுக்கு மற்றவர் பெறும் தண்டனையை பார்த்து கொண்டிருப்பது என்று நம் உள்ளந்திரியங்களை கர்த்தர் அறிவார். உங்களால் எல்லாரிடத்திலும் நல்லவன் என்று பெயர்பெற முடியாது, இன்று அதற்கு பலர் உடன்பட்டே போலியான ஒரு வேஷத்தை போட்டுக் கொண்டிருக்கின்றனர். காலபோக்கில் அவர்கள் உண்மைமுகத்தை இழந்து, போலியையே உண்மையென்று எண்ணி தங்களை தாங்களே நம்பி ஏமாற்றுகிறார்கள். உங்கள் உள்ளான முகமும், வெளியான முகமும் ஒன்றாய் தேவநீதியில் காணப்படுமானால், அவனே(ளே) பரலோகத்திற்கேற்ற பலனை பெறுகிறவனாய் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என் அருமை தேவஜனமே, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2). மனதின் எண்ணங்களும், சிந்தைகளும் எவருக்கு இதினால் புதிதாகுகிறதோ, அம்மனிதனே தேவனுக்கு பிரியமானது இன்னது என்றும், தேவன் நன்மை என்று எண்ணுவது இன்னதென்றும், தேவனுடைய பரிபூரண சித்தம் அவன் வாழ்வில் இன்னதென்றும் அறிபவனாய் பகுத்தறியத்தக்கவனாய் இருப்பான். அவ்வாறு அல்லாமல் இவ்வுலகத்திற்கு ஏற்ற வேஷம் தரிப்பவனாய் அவன் இருப்பானெனில், அவன் கர்த்தரிடத்தில் இருந்து எதையாவது பெறலாம் என்று எண்ணாதிருப்பானாக. இன்று நம் நிலை என்ன? நம்மை நாமே தேவனுடைய உதவியால் சோதித்தறிவோம். உள்ளான வெளியான நம் வாழ்வு, கர்த்தருடைய பார்வையில் உண்மையுள்ளதாய் காணப்படும்படி, நம் இருதய ஆழத்தின் நினைவுகளும் சிந்தனைகளும் கர்த்தர் பிரியப்படும் பொக்கிஷங்களாய் மாறட்டும். தேவஆவியானவர் தாமே நமக்கு அப்படியாக உதவிசெய்வாராக. ஆமென்!

இறைபணியில் என்றும்,

மக்னாயீம் ஊழியங்கள்,
திருநெல்வேலி.

மக்கள் அதிகம் வாசித்தவை:

வேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் என்ற பாடல் எழுதப்பட்ட பின்னணியம் தெரிஞ்சா கண்ணீீர அடக்க முடியாது
கேட்டதில் கவர்ந்தவை!
பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை
அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்
கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத்: கத்தோலிக்க பேராயர் குற்றச்சாட்டு
இயேசு சொன்ன சிறு வார்த்தைகள் (அதில் பெரிய வல்லமை உண்டு)
நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி?
கிறிஸ்தவ உலகின் தேவை!
இப்படியும் அப்படியும்! வித்யா'வின் பார்வை

Share this page with friends