மதிப்பு – சிறுகதை

Share this page with friends


மரத்தாலான கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான மரத்தால் செய்யப்பட்ட அழகான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கடை ஒரு சுற்றுலாத் தலத்தில் அமைந்திருந்ததால் தினமும் அதிக அளவில் மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். எத்தனையோ பொருட்கள் அந்தக் கடையில் இருந்தபோதிலும் , அங்கிருந்த சந்தனக் கட்டையால் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. சந்தனக் கட்டைப் பொருட்களை இரண்டு விதமாகப் பிரித்து வைத்திருந்தார்கள். ஒன்று முதல் தரம். இன்னொன்று இரண்டாம் தரம். முதல் தரம் என்பது அசல் சந்தனக் கட்டையில் செய்யப் பட்ட பொருட்கள். இரண்டாவது தரத்தைச் சேர்ந்தவை வேறு சாதாரண மரத்தில் செய்யப்பட்டு சந்தனத் தைலத்தால் வாசனை ஏற்றப்பட்டவை. அவற்றின் விலையும் குறைவுதான். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் தரத்தில் அமைந்த பொருட்கள்தான் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அன்று அந்தக் கடைக்கு , முதல் தரத்தில் செய்யப்பட்ட சந்தனக் கட்டைப் பொருட்கள் சில விற்பனைக்காகப் புதிதாக எடுத்துவந்து வைக்கப்பட்டன. புதிதாக வந்த பொருட்கள் , ஏற்கனவே இருந்த பொருட்களை ஆச்சரியமாகப் பார்த்தன. திரள் திரளாக வந்துகொண்டிருந்த மனிதர்கள் கூட்டமும் அவற்றுக்கு வியப்பினை அளித்தது.

சுற்றிலும் பார்த்து விழித்துக் கொண்டிருந்த அந்தப் பொருட்களைப் பார்த்து இரண்டாம் தரத்தைச் சேர்ந்த ஒரு கிண்ணம் சிரித்தது. புதிதாக வந்த , அசல் சந்தனக் கட்டைப் பொருளுக்கு அந்த சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. போலி சந்தனக்கட்டையால் ஆன கிண்ணம் சொன்னது, “ இந்தக் கடையில் கூடுகிற கூட்டமெல்லாம் எங்களை வாங்குவதற்காக மட்டுந்தான். உங்கள் கூட்டத்திலிருக்கிற ஒரு பொருள் விற்பனையாவதற்குள் எங்களிலிருந்து பத்து பொருட்கள் விற்பனையாகிவிடும், எங்களுக்குத்தான் அதிக மதிப்பு. நீ வேண்டும் என்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டிரேன் “ .

அசல் சந்தனப் பொருளுக்கு வருத்தமாகிவிட்டது. அந்தப் போலி சந்தனக் கிண்ணம் சொன்னதுபோலவே வந்தவர்களில் பலர் போலிகளை மட்டுமே அதிகமாய் வாங்கிக் கொண்டு சென்றார்கள். அவமானத்துடன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டது. இதைக் கவனித்துவிட்ட ஒரு தேக்கு மர நாற்காலி சொன்னது, “ நண்பா ,வருத்தப் படாதே. கொஞ்சம் பொறுமையாகக் காத்திரு. உன்னுடைய மதிப்பு உனக்குப் புரியவரும் “. நாற்காலி சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பொறுமையுடன் காத்திருக்க ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்துக்குள் பலர் போலி சந்தனப் பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றனர். ஓரிருவர் மட்டும் அசல் சந்தனப் பொருட்களை வாங்கினர். அப்போது ஒரு இளைஞனும் அவனது தந்தையும் வந்து இரண்டு இரகத்தில் இருந்த பொருட்களையும் பார்த்தார்கள்.

மகன் போலி சந்தனப் பொருட்கள் இருந்த இடத்தில் இருந்த அந்தக் கிண்ணத்தை எடுத்தான். “ அப்பா, இந்தக் கிண்ணம் அருமையான வாசனையா இருக்குப்பா. இதை வாங்கிக்கலாம்ப்பா” என்றான். அப்பா சொன்னார் , “அது வேணாம்ப்பா. முதல் தரத்தில் உள்ள பொருளை வாங்கிக்க”. மகன் அசல் சந்தனத்தால் ஆன பொருட்களை எடுத்து முகர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் அதிருப்தி. “ என்னப்பா , இதுல வாசனை ரொம்ப குறைவா இருக்கே? அந்தக் கிண்ணம் அளவுக்கு வாசம் இல்லையே “ என்றான். அப்பா உடனே, “ பைத்தியக்காரா. கும்முன்னு அடிக்கிற வாசனையை வச்சா நல்ல சந்தனத்தை முடிவு செய்றது? அது சந்தனத் தைலம் பூசுன பொருள்டா. கொஞ்ச நாளைக்கு நல்ல மணமா இருக்கும். நாளாக நாளாக ஒரு வாசனையும் இல்லாம் போயிடும். ஆனா உண்மையான சந்தனம், வாசனை குறைவா தெரிஞ்சாலும் கடைசி வரைக்கும் மணம் வீசிக்கிட்டேதான் இருக்கும். அசல் சந்தனத்தில் செஞ்ச பொருள் உடைஞ்சு போனாலும் அது சந்தனக் கட்டையா பயன்படும். அதோட கடைசி துணிக்கை வரைக்கும் வாசனை கொடுத்துட்டுதான் ஓயும் “ என்றார். இளைஞன் உடனே அசல் பிரிவில் இருந்து நிறைய பொருட்களை எடுத்துக் கொண்டான். நாற்காலி சொன்னது, “பாத்தியா? அதுங்களோட பகட்டெல்லாம் விஷயம் புரியாதவங்ககிட்ட மட்டுந்தான் . உன்னோட மதிப்பு எப்பவுமே குறையாது .

செல்லமே, போலிகளின் ஒப்பனைகளிலும், ஆரவாரங்களிலும் மயங்கி ஒரு புத்தியில்லாத கூட்டம் உன்னைப் புறந்தள்ளுகிறதே என்று வேதனைப் படுகிறாயா? பொய்யான வாசனையைப் பூசிகொண்டு ஆடுபவையெல்லாம் சீக்கிரமாய் வாசம் போய் அடுப்பில் வீசப் படும். நீயோ கடைசித் துணிக்கை வரை மணம் வீசி நீதிமான்களின் கூட்டத்தால் நேசிக்கப்படுவாய்.

யோனா 2-8 : பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.

ஜான் சரவணன்
ஆறுதலின் தேவன் ஊழியங்கள்


Share this page with friends