குருத்தோலைப் பவனியில் நாம் கற்றுக் கொள்வது என்ன?

Share this page with friends

சிறு தியானம்

1.கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும்.

“தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது” (மத் 21:5) கர்த்தர் நம்மைக் குறித்து சொன்னவைகள் ஒருநாளும் வீண்போகாது. வானமும் பூமியும் ஒழிந்துப் போவது எளிது. ஆனால் நமது தகப்பனுடைய வார்த்தைகளில் சிறு உறுப்பு கூட ஒழிவது அரிது.

“கிறிஸ்துவைப்போல எவ்வேளையிலும் தேவனுடைய சித்தத்தை செய்வதையே நாடுவோம “(யோவா 4:34) அப்பொழுது தேவனால் நமக்கு சொல்லப்பட்டவைகள், தேவனால் எழுதப்பட்ட பிரகாரமாகவே நமக்கு நிறைவேறும்.

2.கழுதையின் மீது இயேசு ஏறிப்போனார்.

“அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள், அவர் அதின்மேல் ஏறிப்போனார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்” (மாற்கு 11:7,8)

இந்தக் கழுதையின் மீது இயேசு ஏறிப்போனதினால், இந்தக் கழுதைக்கு கிடைத்த மேன்மையைப் பாருங்கள். கழுதையின் மீதும் வஸ்திரங்கள். கழுதை நடக்கும் பாதையிலும் வஸ்திரங்கள். இப்படிப்பட்ட மேன்மைகள் தனக்கு கிடைக்குமென ஒருநாளும் இந்தக் கழுதை கொஞ்சம் கூட நினைத்திருக்காது. ஆச்சரியம் இந்த கழுதைக்கு.

இந்த மேன்மைக்கு காரணம் இக்கழுதையின் தகுதியோ? அல்லவே! இயேசு அதன் மீது அமர்ந்ததினாலேயே கிடைத்தது இந்த மேன்மை. நமக்கும் அப்படித்தானே!

இயேசு நம்முடைய வாழ்விலே வந்ததால், நமது மீது விழுந்திட்ட கிருபையின் வஸ்திரங்கள்தான் எத்தனை எத்தனை! எனவே, என்றும் நன்றியுடன் சேவிப்போம் நம் தேவனை. இயேசுவை ஏற்றிச் சென்று, மேன்மைகளைக் கண்ட இந்த கழுதையின் வாழ்வு அன்றோடு முடிந்தது.. நமது வாழ்வோ அப்படிப்பட்டதல்ல. அது நித்தியமானது. எனவே, இந்த பூமியிலே நாம் பெற்றுக் கொள்ளும் “கிருபையின் வஸ்திரங்கள்” அனைத்தும், நித்தியத்தில் “வெண் வஸ்திரத்தை” பெற்றுக்கொள்ளும்படி நம்மை தகுதியாக்கிட வேண்டும் என்பதை மறவாதிருப்போம். (வெளி 3:5)

3.களிகூருதல் நிறைந்திருந்த நேரத்திலும், பரிசுத்தக்குலைச்சலானது கண்டிக்கப்பட்டது.

“இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து: என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். (மத்21:12,13)

அனைவரும் பரவசமாய் தன்னை புகழ்ந்துப் பாடிக் கொண்டு வரும் வேளையிலும் கூட, பரிசுத்தக்குலைச்சலை இயேசு கிறிஸ்துவானவர் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை. பரவசமான சமயங்களிலும், பரிசுத்தக்குலைச்சலைக் கண்டால் தப்பவிடாதிருப்போம். கள்ளர்களின் குகையாய் மாற்றப்பட்டிருந்த ஆலயத்தை இயேசு சுத்திகரித்தார். “சுத்திகரிக்கப்பட்ட ஆலயத்திலே அற்புதங்கள் நடந்தது” (மத் 21:14)

4.கர்த்தரின் அங்கீகாரமே நமக்கு அவசியம்.

“தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு,
கோபமடைந்து, அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன் என்றார்” (மத் 21:15,16)

கோபமடைய வேண்டியவைகளைக் குறித்து இந்த வேதபாரகர்கள் கோபமடையவே இல்லை. “சகல ஜாதிகளாலும் விரும்பப்படத்தக்கவரை” பிள்ளைகளும் ஜனங்களும் போற்றுவதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிறிஸ்துவுக்குள்ளான உனது ஆர்வம் நிறைந்த செயலை யார் அங்கீகரிக்கிறார்களோ இல்லையோ, “ஆம், கேட்கிறேன்” என்று கிறிஸ்து சொல்வாரானால், அதுவே போதுமானது. மற்றவர்கள் “வீண் செலவு” என்றார்கள். இயேசுவோ “நற்கிரியை” என்றார். (மாற் 14:4,6,8)

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா.

RRG.


Share this page with friends