பிலிப்பு பேசியது என்ன? வித்யா’வின் விண் பார்வை

ஒரு நல்ல வித்துவான்
என்பதற்கு என்ன
அடையாளம்?
அவனுடைய
பக்கத்துக்கு வீட்டுக்காரன்,
பாடுவதற்கு தானாகவே
கற்றுக்கொள்ளவேண்டும்.
ஒரு ஆராதனையை முடித்துவிட்டு
வீடு திரும்புகிறவர்கள்,
திருப்தியோடு திரும்புகிறார்கள்
என்பதற்கு என்ன அடையாளம்?
பாடப்பட்ட பாடல்களை
முணுமுணுத்துக்கொண்டே
சென்றால்,
அதுவே அடையாளம்!
பேசப்பட்ட தேவ செய்தியைப் பற்றியே
பேசிக்கொண்டே சென்றால்,
அதுதான் அர்த்தமுள்ள ஆராதனையில்
கலந்துகொண்டதற்கு அடையாளம்
காணிக்கைக்கு முன் கொடுக்கப்பட்ட
அரைமணி நேர அறிவிப்பைப் பற்றியோ
கொடுக்கப்பட்ட கவர்களை பற்றியோ
போடப்பட்ட காணிக்கையைப் பற்றியோ அல்ல.
இயேசுவைக் குறித்து
பேசிக்கொண்டு
செல்லவேண்டும்.
அப்படியானால்
Brother பிலிப்புவைப் போல
பிரசங்கியார்கள் பேசவேண்டும்.
யார் அந்த Evangelist பிலிப்பு?
விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்து
பந்திவிசாரிப்பு ஊழியத்தில் ஈடுபட்டிருந்த
ஏழு பேரில் ஒருவனாகிய
பிலிப்புவைப் போல… (அப். 6:5)
பிலிப்பு என்ன பேசினார்?
வேத வாக்கியங்களை முன்னிட்டு
இயேசுவைக் குறித்துப் பேசினார் (அப்.8:35)
பிலிப்புவுக்கு பேசுவதற்கு
ஏராளம் இருந்தது
சமாரியாவில் பறக்கவிட்ட
வெற்றிக் கொடியைப் பற்றி…
அசுத்த ஆவிகள் அலறிக்கொண்டு
அசுர வேகத்தில் பறந்தோடினதைப்பற்றி…(அப்.8)..
திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும்
விடுதலைப்பெற்று
வீர நடை நடந்ததை பற்றி…
சமாரியா பட்டணமே
சுவிசேஷத்தினால்
சந்தோஷப் பட்டணமானதைப்பற்றி…
மாயவித்தைக் காரனான
சீமோன் மண்டியிட்டு
மனம்திரும்பி
விசுவாசித்து
ஞானஸ்னானம் பெற்றதைப்பற்றி…
அந்தப் பட்டணத்துப்
பெருங்குடி மற்றும் சிறுகுடி மக்கள்
விசுவாசித்து
திருமுழுக்குப் பெற்றதைப்பற்றி…
பிசாசுகளைத்
திக்குமுக்காட வைத்து திசைகளை விட்டு
துரத்தியதைப் பற்றி…
தனது தன்னிகரற்ற ஊழியத்தினால்
சமாரியாவை தேவ வசனத்தால்
நிரப்பினதைப் பற்றிப் பெருமை பேசாமல்
தம்பட்டம் அடிக்காமல்
கந்தாகே என்பவளுக்கு
நிதி மந்திரியாய் இருந்தவனுக்கு,
ஓடிக்கொண்டிருந்த இரதத்தில்
வேதவாக்கியத்தை முன்னிட்டு
இயேசுவைக் குறித்து அவனுக்கு
பிரசங்கிதான் (அப். 8:35)
இன்றைக்கெல்லாம்
பிலிப்புவைப் போன்றோரைப்
பார்க்கமுடிகிறதில்லை
அதினாலே மந்திரிமார் இன்னும்
மனம்திரும்பவில்லை
மாயவித்தைக்காரரர்களும்
பட்டணத்து மக்களும்
மனம்திரும்பவில்லை
சரி, போகட்டும்…
ஒருபக்கம் பார்த்தால்
ஆராதனை முடிந்ததும்
அடுத்த வினாடியே ஜனங்கள்
அலைபேசியைப் பார்க்கிறார்கள்
சிந்திகேயாளை போல, உடனே
சிலருக்கு சிந்தை மாறுகிறது (பிலிப்பியர் 4:2)
தேமா’வைப் போல
பிரபஞ்சத்தின்மேல் சிலருக்கு ஆசை
உண்டாகிறது (2 தீமோ.4:10)
எந்நேயும் யம்பிரரேயும்
மோசேக்கு எதிர்த்து நின்றது போல
எதிர்த்து நிற்க சிலருக்கு
கால்கள் துடிக்கிறது (2 தீமோ. 3:8)
என்னமோ நடக்கிறது
ஒன்றுமட்டும் தெரிகிறது
வருகைக்கு முன் நடக்கும்
என்று சொல்லப்பட்ட காரியங்கள்
நடந்துகொண்டிருக்கிறது
விசுவாச துரோகம் (2 தெச. 2:3)
தலைவிரித்தாடுகிறது
என்பது மட்டும் புரிகிறது
பயமும் பக்தியும்
சேர்ந்ததுதான்
பயபக்தி!
அது, இப்போது
ஊதுபத்தியைப் போல
புகையைக் கக்கி,
இல்லை இல்லை
பகையைக் கக்கி
கரைந்து போகிறது
இனி காலம் செல்லாது என்று
சொல்லப்பட்டு
இரண்டாயிரத்து இருபத்திரண்டு
ஆண்டுகள் ஆகிவிட்டது
பரிசுத்த பவுலின்
அதாவது
வேதத்தை எழுத ஆவியானவர்
பயன்படுத்தின பாத்திரங்களில்
ஒருவரான பவுல் எழுதியதை
படித்துப்பாருங்கள்…
இப்படி நான் அவரையும் அவருடைய
உயிர்த்தெழுதலின் வல்லமையையும்,
அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும்
அறிகிறதற்கும்,
அவருடைய
மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,
எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து
உயிரோடெழுந்திருப்பதற்குத்
தகுதியாகும்படிக்கும்,
அவருக்காக
எல்லாவற்றையும்
நஷ்டமென்று விட்டேன்;
குப்பையுமாக எண்ணுகிறேன்.
நான் அடைந்தாயிற்று, அல்லது
முற்றிலும் தேறினவனானேன்
என்று எண்ணாமல்,
கிறிஸ்து இயேசுவினால்
நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ
அதை நான் பிடித்துக்கொள்ளும்படி
ஆசையாய்த் தொடருகிறேன்.
சகோதரரே, அதைப்
பிடித்துக்கொண்டேனென்று
நான் எண்ணுகிறதில்லை;
ஒன்று செய்கிறேன்,
பின்னானவைகளை மறந்து,
முன்னானவைகளை நாடி,
கிறிஸ்து இயேசுவுக்குள்
தேவன் அழைத்த
பரம அழைப்பின்
பந்தயப்பொருளுக்காக
இலக்கை நோக்கித்
தொடருகிறேன் (பிலிபியர் 3:10-14).
என்று சொல்லி ,
விசுவாசத்தை பிடித்துக்கொண்டு
போர் வீரனைப் போல ஓடுவோம்
இலக்கை நோக்கி

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குநர் – இலக்கியத் துறை
Tamil Christian Network