கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டியவைகள் என்னென்ன? டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

Share this page with friends

இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நமது மையமாக இருக்க வேண்டிய முதல் நபர் இயேசு என்பதை முதல் தீர்மானமாகக் கொள்வோம். அந்தத் தீர்மானம் தான் நமது அடுத்தடுத்த செயல்களைத் தீர்மானிக்கச் செய்யும். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டிவற்றின் ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

1) கிறிஸ்மஸ் ஒரு பகிர்வின் நாளாக மலரட்டும். உங்கள் குடும்பத்தில், நட்பு வட்டாரத்தில், உறவு வட்டாரத்தில் நீங்கள் வெறுக்கும் நபர் இருக்கிறாரா என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நபருடன் நிச்சயமாகப் பேசுங்கள். தொலைபேசுங்கள், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்கள். முடிந்தால் அவருடைய வீட்டுக்கே சென்று பேசுங்கள். ‘நான் ஏன் அவன் கிட்டே பேசணும் ?” எனும் ஈகோவைக் கழற்றாமல் இயேசுவை அணியவே முடியாது ! ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, உங்களையே விடுதலையாக்கும்.

2) மகிழ்ச்சியை இறைவனை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளால் உருவாக்குங்கள். குழுவாக அமர்ந்து பாடல்கள் பாடுவது, உரையாடுவது என எந்த நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீடெனில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் விழாவையும், அதன் அர்த்தத்தையும் விளக்குங்கள். அவர்களுக்குக் கதைகள் சொல்லி கிறிஸ்மஸைச் சிறப்பானதாக்குங்கள்.

3) உங்களுக்குச் சொந்தமல்லாத, பக்கத்து வீட்டு நபர் யாரோ ஒருவரை இந்த விழாநாள் மகிழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள். அவருடன் ஒரு புதிய உறவை உருவாக்குங்கள். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகப் படுத்தி வையுங்கள். அந்த நபருக்கு ஏதேனும் முக்கியமான தேவைகள் இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை அர்த்தப் படுத்துங்கள்.

4) ஏதோ ஒரு நல்ல விஷயத்தை இந்த நாளில் நிச்சயம் செய்யுங்கள். ஒரு முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் கிறிஸ்துப் பிறப்பு மகிழ்ச்சியைப் பகிர்வதாகவோ, ஒரு மருத்துவமனை சென்று நோயாளியை சந்திப்பதாகவோ, ஒரு அனாதை இல்லத்துக்கு உணவு கொடுப்பதாகவோ, உங்கள் மனதில் எழும் இது போன்ற ஏதோ ஒரு நிகழ்வை நிச்சயம் செய்யுங்கள். உங்கள் பெயரை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தாமல் இயேசுவை முன்னிலைப்படுத்தியே அவற்றைச் செய்யுங்கள்.

5) குடும்ப உறவை வலுவாக்கும் ஒரு நாளாக இதைக் கொண்டாடுங்கள். பார்க், சினிமா, பூங்கா, இத்யாதிகளைத் தவிர்த்து வீட்டில் அனைவரும் ஒன்றாய் இருந்து கொண்டாடுவதே சிறந்தது. தேவையற்ற பார்ட்டி அழைப்புகள், கொண்டாட்ட அழைப்புகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். குடும்ப உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்களிடையே வாழ்த்துக் கடிதங்கள் எழுதிப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

6) பரிசுகள் கொடுக்கிறீர்களெனில் அது ஆத்மார்த்தமானதாய் இருக்கட்டும். அதிக விலையுள்ள பொருட்கள் தான் நல்லது என்பதெல்லாம் மாயை. உங்கள் கைப்பட எழுதப்படும் ஒரு வாழ்த்து மடலை விட உயர்ந்த வாழ்த்து அட்டைகள் கிடையாது. ஒரு நபரைச் சென்று பார்த்து ஒரு அன்பான புன்னகையைக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்த பரிசு என்பதை உணர்கிறோமா ? விதவையின் காணிக்கை இரண்டு காசு தான், ஆனால் கொடுத்த மனநிலை தானே கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது !

7) கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழிகிறவர். தீர்ப்பும், முடிவும் அவர் கையில். எல்லோரிலும் இறைவனின் பிம்பத்தைக் காண்பதே ஆன்மீக வளர் நிலை. விழா நாட்கள் மதச் சண்டைகள், சச்சரவுகள், சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் கிறிஸ்மஸ் கொண்டாடுவது மாபெரும் பரிசேயத் தனம் ஆகிவிடும்.

8) உங்களை அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்வதில் பயன் இல்லை. உங்களை அன்பு செய்யாதவர்கள், உங்களை அறியாதவர்கள், உங்கள் விரோதிகள் என எல்லோருக்காகவும் ஜெபியுங்கள்.

9) அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு எனும் நல்ல விஷயங்களே கிறிஸ்மஸ் விழாவில் நிரம்பியிருக்க வேண்டியவை. அவற்றை மனதில் நிரப்புங்கள். கோபம், எரிச்சல் போன்றவற்றை அழித்து விட இந்த ஆண்டு தூய ஆவியின் துணையை நாடுங்கள்.

10) “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” எனும் வாசகங்களை உள்வாங்கி கிறிஸ்மஸ் தினத்தை வீணடிக்காதிருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் கிறிஸ்மஸ் விழா பொழிவிழக்க அது ஒன்றே போதும், எனவே அதை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா. அன்பைப் பகிர்தல் மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் விழா. அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கெவின் கோல்மென் எனும் பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூளையில் புற்று நோய். கடந்த அக்டோபர் மாதம் அவனைச் சோதித்த டாக்டர்கள் அவன் இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றார்கள்.

பெற்றோர் மௌனமாய்க் கதறினார்கள். பையனோ, தனக்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும், அதற்காகவே காத்திருக்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னான். ஊரில் உள்ள மக்கள் அதை கேள்விப்பட்டார்கள். எல்லோரும் ஒன்று பட்டார்கள். பையனுடைய ஆசையை நிறைவேற்ற ஒட்டு மொத்த ஊருமே ஒன்று சேர்ந்தது. அக்டோபர் மாதத்திலேயே ஊரை முழுதும் அலங்கரித்து, பஜனை பாடல்கள் பாடி, கிறிஸ்மஸ் மரங்கள் வைத்து, கிறிஸ்மஸ் தாத்தாவை வரவைத்து ஒரு நிஜ கிறிஸ்மஸ் சீசனையே உருவாக்கி விட்டார்கள்.

பையனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகள் கூறி, கேரல் பாடல்கள் பாட அவன் மகிழ்ந்தான். பெற்றோர் நெகிழ்ந்தனர். தனது பையனின் ஆசையை நிறைவேற்ற ஊரே ஓன்று திரண்டதில் கண்ணீர் விட்டனர். அந்தப் பையன் நிம்மதியாய் உணர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின் கடந்த மாதம் அந்தப் பையன் இறந்தான். அன்பின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தவனாக. கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா என்பதன் செயல் வடிவம் அங்கே நிகழ்ந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இயேசு பிறக்கும் அனுபவம் எழ வேண்டும், அதுவே உண்மையான கிறிஸ்மஸ். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கட்டாயமான ஆன்மீக நிகழ்வல்ல. பைபிளில் எங்கும் இயேசுவின் பிறந்த நாள் பற்றிய குறிப்பு இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடிய வரலாறு இல்லை. இயேசுவின் அன்னை மரியாள் அந்த பிறந்த தினத்தைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியதாகவும் குறிப்புகள் இல்லை. இயேசு அதை நமக்கு ஒரு கடமையாகத் தரவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, இயேசு பிறப்பு விழாவை ஒரு கட்டாயத்துக்காகக் கொண்டாடாமல் இயேசுவின் அன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு இனிய அனுபவமாகக் கொண்டாடுவதே சாலச் சிறந்தது. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

சேவியர் (நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.)


கிறிஸ்துமஸ் சார்ந்த சுவாரசியமான ஏராளமான பதிவுகளை இங்கே இலவசமாக வாசிக்கவும்



Share this page with friends