சீ’கேமிடம் சிக்கிவிடாதே! (புதுப்பிக்கப்பட்டது)

Share this page with friends

THE STORY OF DINAH

சீ’கேமிடம் சிக்கிவிடாதே!

வாலிபத்தின் வசந்தகாலம்
கோலியாத் போன்ற
நெடியவர்கள் வாழ்ந்த
கொடிய காலம்

துணிகரமுள்ளவர்களும்
தூஷிக்கிறவர்களும்
இணங்காதவர்களும்,
இச்சையடக்கமில்லாதவர்களும்
சுகபோகப் பிரியர்களும்
பெருகியிருந்த காலம்

இந்த பூமியின் இளவரசி
நானென்ற நினைப்பில்
வெளுத்ததெல்லாம் பால் (PAUL)
என்ற கணிப்பில்

கூச்சப் பார்வை கொண்ட
அம்மா, லேயாளையும்
கூடாரவாசியான
அப்பா, யாக்கோபையும்
அடிதடிக்குப் பேர்போன,
அண்ணன்மாரையும்
அன்புள்ள யோசேப்பையும்
பென்யமீனையும்

அலட்சியப்படுத்திவிட்டு,

தன்னி(இ)ச்சையாய்
தகப்பன் வீட்டு வாசலைத் தாண்டி
சாலேம் என்னும்
சீகேமுடைய பட்டணத்திற்குள்
சாவகாசமாய் நுழைந்து
தேசத்துப் பெண்களைச்
சுற்றிப் பார்க்க, தேனீ போல
தீனாள் என்ற பாவை
பறந்து சென்றாள்

கோணலும் மாறுபாடுமான
சந்ததியின் நடுவே
வினோதமாய்
அடியெடுத்துவைத்து,
ஒய்யாரமாய் நடந்து சென்ற
யாக்கோபின் மங்கை,
சிமியோன், லேவியின் தங்கை
முதல் நாளே, சீகேம் என்ற
சிறுத்தை
யிடம் சிக்கிக்கொண்டாள்

புதருக்குள் விழுந்த
குயிலைப் போல வீழ்ந்துவிட்டாள்
அன்றைய தினமே தீனாள்
தீட்டுப்பட்டுப்போனாள்

வலையில் தொலையும்
(இன்டர்நெட், முகநூல்,
இன்ஸ்டாகிராம்,
ட்விட்டர், மின்னஞ்சல்)
வாழ்க்கையைப் பற்றி
வாசித்திருப்பீர்கள்,

வழியில் தொலைந்த
வாழ்க்கையைப் பற்றி
வாசித்திருக்கிறீர்களா?

யாக்கோபின் வீட்டு முகவரி
தெரியாமல்,
ஏமோர் மோதிவிட்டான்
ஏதோ கேம் (GAME) விளையாடுகிறோம்
என நினைத்து சீகேம்
விளையாடிவிட்டான்

எங்கள் தங்கையை
வேசியைப் போல நடத்தலாமா?
என்று சீறிப் பாய்ந்து
சுனாமி பேரலை போலச்
சூழன்று, ஊரையே அடித்து
உலையில் போட்டுவிட்டு,
தீனாளை மீட்டுக்கொண்டு
சிமியோனும் லேவியும்
வீடு திரும்பிவிட்டார்கள்

கர்த்தருக்கு முன்பாக
பலத்த வேட்டைக்காரன்
என்று பெயரெடுத்த
நிம்ரோதையும்
மிஞ்சிவிட்டார்கள்

ஆடுகளை மேய்த்த
அண்ணன்மாரை
கொடுமையின் கருவிகளாக்கியது
தீட்டப்பட்ட தீனாளே

தீனாளின் அசட்டு
துணிச்சலினால்
அந்த ஊரே கலவர
பூமியாகிவிட்டது

எங்கும் சாவுமணி
அடிக்கப்பட்டது
பட்டணம் பாதாளமானது
எங்கும் மரண ஓலம்
கேட்கப்பட்டது.

சங்கார தூதன்
எகிப்தியரின் வீடுகளுக்குள்
நுழைந்து
தலைப்பிள்ளைகளைச்
சங்காரம்பண்ணியது
நினைவுக்கு வருகிறது

யாக்கோபின் இதயம்
நடந்து முடிந்த சம்பவங்களினால்
செய்வதறியாது
இடம் மாறித் துடித்தது

பெற்றோர் பேச்சைக்
கேட்காமல்
பெருமையுடன் நடந்தால்
வெறுமையுடன்
வீடுதிரும்ப நேரிடும்
என்ற தீர்ப்பு
அன்றையதினம்
எழுதப்பட்டது

கர்த்தரின் கட்டளையை
அவமதித்த லோத்தின் மனைவி,
திரும்பிப் பார்ப்பதெல்லாம்
பாவமாகிவிடுமா?
என்று தனக்குள் நினைத்தாள்

விட்டுவந்த பாழாய்ப்போன
பட்டணத்தைத் திரும்பிப் பார்த்தாள்
நட்டுவைத்த சிலைபோல
உப்புத் தூணாய் மாறிப்போனாள்

பரிதாபம்!

திருமதி….. இல்லை இல்லை,
மதியில்லாத லோத்தின் மனைவி
இன்னும் அடக்கம்
பண்ணப்படவில்லை!
சாபத்தின் சாட்சியாய்
ஆண்டாண்டு காலமாய்
நின்றுகொண்டிருக்கிறாள்
செத்தபின்னும் விட்டபாடில்லை

பெற்றோரை
அலட்சியப்படுத்திய
சிம்சோன் கண்டது
வெற்றியல்ல, வீழ்ச்சி,

அடைந்தது உயரம் அல்ல,
கொடுந்துயரம்!

பெரியவர் சாமுவேலுக்காகக்
காத்திருக்காமல்
அத்துமீறி, ஆசாரியப்பணியில்
தலையிட்டதால்
அரசனான சவுல் இழந்தது
பணத்தை அல்ல.
ஜனத்தை!

எந்த பாரமுமே இல்லாத சவுல்
இஸ்ரவேலின் ராஜ்யபாரத்தையே
இழந்துவிட்டான்

மலைமேல் உள்ள
பட்டணம் போல
வாழவேண்டியவன்

சகல இஸ்ரவேலரையும்விட
உயரமாய் வளர்ந்தவன்

கில்போவா மலைமேல்
மாண்டுபோனான்
காலத்திற்கு முன்னே
காலாவதியாகிப் போனான்

அழைப்பின் சத்தம் கேட்க,
ஒரு எஸ்தரைப் போல
ஜெபத்தோட்டத்திற்கு
எழும்பிவந்துள்ள எதிர்காலமே,
என் இளைய தலைமுறையே,

ஒன்றை அறிந்துகொள்
இதை புரிந்துகொள்

இவ்வுலக வேஷங்கள்
கடந்துபோகக்கூடியது
போர் செய்யும் இச்சைகள்
ஒழிந்துபோகக்கூடியது

எனவே,

அநித்தியமான
பாவசந்தோஷங்களை
அனுபவிப்பதை விட்டுவிட்டு

தேவ ஜனங்களோடே
துன்பத்தை அனுபவிப்பதைத்
தெரிந்துவிடு

இனிவரும் பலன்மேல்
நோக்கமாகிவிடு

இவ்வுலகத்திலுள்ள
பொக்கிஷங்களை
பொசுக்கிவிடு

கிறிஸ்துவின் நிமித்தம்
வரும் நிந்தையை
அதிக பாக்கியமென்று
எண்ணிவிடு

கர்த்தரின்
சுதந்திரம் நீதான்
தேவனால் கிடைத்த
பலன் நீதான்

நீ சித்திரம் தீர்த்த
அரண்மனை மூலைக்கல்

என்பதை மறந்துபோகாதே

எனவே எஸ்தரைப்
போல எழும்பிவிடு.
கிதியோனைப்போல
புறப்பட்டுவிடு

யோசேப்பைப் போல
ஆளுகைக்கு
ஆயத்தமாகிவிடு

உயரப் பறக்கப் பிறந்த நீ,
ஊர்ந்து திரியும் மினி பஸ் அல்ல!

சுற்றும் உலகைச்
சூழ்ந்திருந்தாலும்
ஒட்டாது உலாவும்
காற்றைப் போலிரு

ஓட்டுக்குள் இருந்தாலும்
ஒட்டாது இருக்கும்
விளாம்பழம் போலிரு

பயணத்தின் இறுதிவரை
கூடுதுறந்துவிடாத
நத்தையைப் போல
பரிசுத்த ஜீவியத்தைக்
கடைசிவரை காத்துக்கொள்

உன் சிருஷ்டிகர்
வரப்போகிறார்

அரட்டை வலை தளங்களை
அசட்டை செய்துவிடு

சமூக வலைத்தளங்களுக்குள்
உள்ளும் புறம்பும் சென்றுவிடாதே
காணாமல்போய்விடுவாய்
தீனாளை நினைத்துக்கொள்

இளம் மங்கையே,
தீர்க்கதரிசனம் சொன்ன
பிலிப்புவின் நாலு
குமாரத்திகளைப் போன்ற
என் தங்கையே

உன்னிடத்தில்
ஒப்புவிக்கப்பட்டதை
நீ காத்துக்கொள்

அதையும் அப்பா
வசம் விட்டுவிடாதே

நீ தான் உன்னைக்
காத்துக்கொள்ளவேண்டும்

நீ உன்னைச் சுத்தவானாய்
காத்துக்கொள் என்றுதானே
தீமோத்தேயுவுக்கு
பவுல் எழுதிவைத்தார்

ஒரேயொரு வாழ்க்கை
அதுவும் சீக்கிரமாய்
கடந்துபோகிறது

அதை உரிமையாளரிடம்
அதாவது உன்னதர் வசம்
ஒப்படைத்துவிடு

FR BERCHMANS

தகப்பனைப் போலிருக்கும்
தந்தை S. J. பெர்க்மான்ஸ்
அவர்களைப் போல,
முப்பதில் முழங்கத் தொடங்கிவிடு

விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகளைப்
பாராட்டுகிறேன்
இருப்பினும்

எல்லாவற்றிற்கும் மேலாக
உன்னை, உன் தாயின் வயிற்றில்
உருவாகும் முன்னே,
பேர் சொல்லி அழைத்து,
கண்டுபிடித்து
இரட்சித்தவரை
மறந்துவிடாதே

உன்னை நெறிப்படுத்தவும்
சரிப்படுத்தவும் கூடிய
வல்லமை உன்னத
வேதத்திற்கு உண்டு

உன் குடும்ப வாசனையைக்
கெடுக்க நினைக்கும்
குள்ளநரிக் கூட்டத்திற்கு
எச்சரிக்கையாயிரு

உன்னிடம் உள்ள
அனைத்தையும்
அழிக்க நினைக்கும்
அப்சலோம்களுக்கு
விலகியிரு

உன் எதிர்காலத்தையே
சூனியமாக்கத் துடிக்கும்

இப்படிப்பட்ட

சீ’கேமிடம் சிக்கிவிடாதே!

SHE என்ற GAME இடம் சிக்கிவிடாதே!


பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை 14

என்னை எழுத வைத்த வேதபகுதி:
ஆதியாகமம் 34 ம் அதிகாரம்

வாசிக்க வேண்டும்
வாசித்த பின் யோசிக்க வேண்டும்
யோசித்த பின் – அதை வாழ்க்கையில்
அப்பியாசிக்க வேண்டும். எதுவரை?
இந்த ஆண்டின் இறுதிவரையா?
இல்லை இல்லை மூச்சிருக்கும் வரை


குறிப்பு: 2015- ம் ஆண்டு ஜெபத்தோட்டத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்பு முகாமில் தந்தை S.J. பெர்க்மான்ஸ் அவர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்ட கவிக் கட்டுரை. வாசிக்க வாய்ப்பளித்த Pastor. Joshua J. Yestove அவர்களுக்கு நன்றி. (இக்கவிக்கட்டுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது)


நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த கவி+கட்டுரை இது.. மிக ஆழமான உட்கருத்துக்கள் இதனுள் புதைந்திருப்பதை கண்டு வியப்படைந்தேன். வாழ்க உங்கள் எழுத்து(இறை)ப்பணி.

-Pas. B. Beviston


Share this page with friends