யாரை காதலிக்கலாம்? எப்படி காதலிக்கலாம்? வேதத்தின் அடிப்படையில்

Share this page with friends

காற்று இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், காதல் இல்லாமல் வாழவே முடியாது. உன்னை பார்த்த முதல் நாளே உனக்கு நான், எனக்கு நீ” என்று காதல் பத்திரம் கொடுத்து ஜெட் வேகத்தில் திருமணம் முடிக்கும் காதல் ஜோடிகள் மலிந்து விட்டனர். முன் காலத்தில் விஷமாக கருதப்பட்ட இச்செயல் இன்று விளையாட்டாக மாறிவிட்டது. இக்காலத்தில் இளம் தலைமுறையினருக்கு காதலை எப்படி கையாள்வது என்பது புதிராகவே இருக்கிறது.

நவீன கால நாகரிகத்தில் சிலர் பார்த்தவரையெல்லாம் காதலிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்குக்காக காதலிக்கின்றனர். இன்னும் சிலர் தன்னை பெரியவனாக காட்டிக்கொள்ள காதலிக்கின்றனர். எது எப்படியோ காதல் என்பது ஒரு ஆண், பெண் இனக்கவர்ச்சியால் தங்கள் உடல் மற்றும் உள்ளத்தின் தூண்டுதலினால் உந்தப்பட்டு தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள பழகிக்கொள்வதாகும்.

பொதுவாக ஆண்கள் அழகு, கவர்ச்சியை பார்த்தும் பெண்கள் அன்புள்ளம், தைரியம் பொறுப்புணர்ச்சியையும் கண்டு காதலிக்கின்றனர். இந்த இனக்கவர்ச்சி ஆண்களுக்கு 14-16 வயதிலும் பெண்களுக்கு 12-14 வயதிலும் உதயமாகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இனக்கவர்ச்சிக்கு வயது வரம்பில்லை. ஆனால் இனக்கவர்ச்சியை சரியான கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியது தனிமனிதனின் பொறுப்பாகும்.

காதல், மூளை உள்ளவர்களை முட்டாளாக மாற்றுகிறது. படித்தவர்களை பைத்தியமாக மாற்றுகிறது. கடலில் மூழ்கியவன் முத்து எடுப்பான்; ஆனால், காதலில் மூழ்கியவன் பிச்சை எடுப்பான்’ என்றெல்லாம் காதலைப் பற்றி கேலிப்பேச்சு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்றைய இளைஞர்கள்”என்னை உண்மையாய் நேசிக்கும், என்னை முழுமையாய் புரிந்து கொள்ளும் ஒரு நபரை நான் ஏன் காதலித்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கின்றனர். இந்த கேள்வி நியாயமானதுதான். ஆனால் அந்த குறிப்பிட்ட நபர், முழுமையாய் நேசிக்கிறார் என்பது உறுதியாய் தெரியுமா? அவருடைய முழு குணாதிசயங்களும் தெரியுமா? அவருடைய பலம் பலவீனம் எல்லாம் தெரியுமா? நிச்சயமாய் அறிய வாய்ப்பில்லை. மகிழ்ச்சியாய் காதலித்து திருமணம் செய்தவர்களில் 50% குடும்பங்கள் விவாகரத்து, 40% குடும்பங்கள் சந்தேக பிரச்னை என்று சிக்கல்களில் மாட்டியிருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அப்படியானால் நாம் காதலிக்க (பிரியப்பட) கூடாதா, என்று கேட்கலாம். இதுவும் நியாயமான கேள்வியே. இக்கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமமே பதில் கொடுக்கிறது.

தேவனாகிய கர்த்தரை காதலிக்கலாம் (உபா 6:5, 10:12), திருமணத்திற்கு பின் கணவனைக் காதலிக்கலாம் (நீதி 2:4), மனைவியை காதலிக்கலாம் (ஆதி 24:67, எபே 5:25), தன் பிள்ளைகளை காதலிக்கலாம் (நீதி 2:4), இரட்சிப்பை (சங் 40:16) வேதத்தை (சங் 110:113, 119, 127), ஞானத்தை (நீதி 4:6), நன்மையை (ஆமோஸ் 5:15), சமாதானத்தை (சக 8:19) காதலிக்கலாம். வேதாகமம் கூறுகிற இவற்றையெல்லாம் விட்டு விட்டு வேதாகமம் அனுமதிக்காத ஒரு நபரை நாம் காதலிக்கலாமா? ஸ்திரீகளை சகோதரிகளை போலவே பாவிக்க வேண்டுமென்று வேதம் (1தீமோ 52) கூறுகிறது. எல்லாரையும் கிறிஸ்துவுக்குள் சகோதர, சகோதரியாய் பார்க்க பிரயாசப்படுங்கள்.

“அன்றியும் பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் நீ தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு” (11 தீமோ 2:22).

பரமன்குறிச்சி பெவிஸ்டன்


Share this page with friends