கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?

Share this page with friends

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்!

சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.

மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதைநாமறிவோம்! உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.

17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் ( Dutch ) இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்தியபோது புனித நிக்கோலஸ் பிஷப் ஆக யிருந்தபோது அவர்அணிந்த சிவப்பு அங்கி போன்ற டையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம் செய்தனர். அதுவே சில மாற்றங்களுடன் பின்ன ர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.

அதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் “St. A Claus,” என்று பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் யிர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ்என்பதை பல்வேறு தாரங்களோடு சுட்டுகின்றார். ” நியூயார்க்கின் வரலாறு என்ற அவரின் புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்லார்.

Night Before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான் ரெயிண்டீர், சண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும் 1860லிருந்து 1880 வரை வெளிவந்துகொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்புவெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast ) சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார். 1931ல் Coca-Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை போல வெளியிட்டது..

புனித நிக்கோலஸ் !
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் யின்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.

புனித நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப் வார்! நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்க்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டஅற்புதர் அவர்!

“உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது ” என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் ( பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரிச் சென்ற போது தங்கள் குறைகளையும் சொல்லத் துவங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா? என்றறிந்து அவர்கள் அறியாமல் உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இப்படி ஒரு சமயம் புனித நிக்கோலஸ் செய்யத் துவங்கிய உதவியே அவர் அதுபோன்ற உதவிகள் தொடரக்காரணமானது! ஒரு மனிதர் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்யவோ, ஆடை பரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனையுற்றிருந்தார்.

அந்த மனிதருக்கு மூன்று பெண் குழந்தைகள்! மூன்று பேரையும் எப்படிக் கரைசேர்ப்பேன் என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். குளிர்காலம் முடிந்ததும் வசந்த காலத்தில் மூத்தபெண்ணுக்குத் திருமணம் செய்வதென்று நிச்சயிக்கப்பட்டது. தனது இயலாமையை பாவ சங்கீர்த்தனத்திற்குச் சென்றபோது அந்த மனிதரும் எல்லோரைப் போலவே தழுதழுத்த குரலில் சொல்லி அழுது மன்றாடி வந்தார்.

கொடுக்கின்ற தெய்வம்

ஆனால் குளிர்கால விழா எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெண்களுக்குத் தந்தையான அவர் மனம் சோர்ந்துபோய் அவருடைய வீடும் எந்தவிதமான மகிழ்ச்சியுமின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்தச் சோகத்திலேயே அந்த இரவு உறங்கியும் போனார்கள். நள்ளிரவு ஏதோ ஒரு பொருள் “பொத்” தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து சென்று பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு நேர் கீழ் ஒரு பை கிடந்ததைக் கண்டார்.

அந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ பெருத்த ஆச்சரியம்! தன் மகள் திருமணத்திற்கு என்ன செய்வேன் என்று ஏங்கித் தவித்த மனிதனுக்கு விடையாகக் கிடைத்தது போல தங்க ஆபரணங்களும், பணமும் இருந்தது கண்டு திகைத்துப் போனார். “கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுத்தது” என்று சொல்வது போல தெய்வம் கொடுத்தது என்று சொல்லி மகிழ்ந்து மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.

அதே போல தனது ரெண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதும் அவருடைய பணமுடை அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் முதலில் தெய்வம் கொடுத்தது போல புகைபோக்கியை பொத்துக்கொண்டு இந்தமுறை கொடுக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது! முன்பு புகைபோக்கி வழியே கிடைத்ததைப் போலவே இந்த முறையும் கிடைத்தது. விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்று பார்த்தார். தூரத்தில் யாரோசெல்வது மட்டும் தெரிந்தது. ஆனால் உருவம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

மூன்றாம் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மனிதர் நள்ளிரவு வரை விழித்திருந்து புகைப்போக்கியையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமக்கு உதவி செய்கின்ற அந்த உருவத்தைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால் அவ்வாறு நள்ளிரவு வரை விழித்திருந்து அந்த உருவத்தின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவர் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது. நள்ளிரவில் ஒரு பை “பொத்” என்று விழுந்ததும் தயாராக திறந்து வைத்திருந்த கதவைத் தாண்டி வெளியே ஓடிப் பார்த்தபோது, சிவப்பு அங்கியணிந்திருந்த அந்த உருவம் வெள்ளைக் குதிரையொன்றில் தாவி ஏறவும் இவர் அவரை யார் என்று பார்க்கவும் சரியாக இருந்திருக்கின்றது.

அவர் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயிருந்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் புனித நிக்கோலஸ்! புனித நிக்கோலஸ் தான் உதவியது குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அந்த மனிதரை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அந்த மனிதப் புனிதர் நிக்கோலஸ் வாழ்ந்த காலம் வரை தேவையுள்ளோர் யார் என்பதறிந்து அவர்கள் வீட்டின் புகைபோக்கி வழியாக அவ்வீட்டார் அறியாமல் பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் புகை போக்கி வழியாக பரிசுகளை, வெகுமதிகளை உள்ளே போட்டுவிட்டு அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன? யார் என்று கவனிப்பதற்குள் தனது வெள்ளைக்குதிரையில் பறந்துவிடுவாராம். சிறுவர் சிறுமியருக்கு சிறுசிறுபரிசுப் பொருட்களையும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போட்டுவிட்டு பின்னர் அவர்கள் அகம் மகிழ்வதைக் கண்டுமகிழ்ந்தார்!

வழக்கம் பழக்கமானது

அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு புகை போக்கி வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ் கோமாளி போன்ற சிவப்புவண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக் கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில் தொங்கும் பரிசுப்
பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை….இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா! அது மட்டுமா? கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளைமகிழ்விக்கச் செய்வது வரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சாண்ட்ட கிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் சுவீடனில் புனித லூசியாதான் கிறிஸ்மஸ் தாத்தாவாக…ஸாரி பாட்டியாகக் கருதப்படுகிறார்.


கிறிஸ்துமஸ் சார்ந்த சுவாரசியமான ஏராளமான பதிவுகளை இங்கே இலவசமாக வாசிக்கவும்


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662