விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது?

Share this page with friends

ஊழியர்களெல்லாரும் ஓடி ஔிந்துகொண்டால் விசுவாசிகளின் பிரச்சனையில் யார் போய் நிற்பது? விசுவாசிகள் சுகமாய் இருக்கும்போது அவர்களிடம் சென்று காணிக்கை வாங்கினவர்கள், இன்று நெருக்கடியான நேரத்தில் அவர்கள் அழைக்கும்போது ஓடி ஔிந்துகொள்வது சரியா?

இந்த கேள்வியை நிதானமாக ஆராயவேண்டியது அவசியம்.

பொருளாதார தேவையுள்ள விசுவாசக்குடும்பத்தாரைவிட்டு ஊழியர்கள் ஓடி ஔிந்துகொள்ளக்கூடாது!

வெளியே வேலைக்கு செல்ல இயலாமல், போதுமான வருமானம் இல்லாமல் பொருதாரக் குறைவை சந்திக்கும் விசுவாசக் குடும்பத்தாரைவிட்டு ஊழியர்கள் இந்நாட்களில் ஓடி ஔிந்துகொள்ளமுடியாது.

இருக்கிற விசுவாசிகளிடமிருந்து நன்மைகளைப் பெற்று, இல்லாத விசுவாசிகளுக்கு பகிர்ந்துகொடுக்கவேண்டியது ஊழியர்களின் சத்தியம் சார்ந்தக் கடமையாகும். (அப்.4:32,34,35; 1தீமோத்.6:17-19)

தங்கள் சொந்த ஆஸ்தியையோ அல்லது சபையாரின் காணிக்கைகளைக்கொண்டு வாங்கியிருக்கிற ஆஸ்திகளையோ விற்றாகிலும் விசுவாசக்குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுத்து, அவர்களை இந்நாட்களில் ஊழியர்கள் பாதுகாக்கவேண்டியது வசனத்தின்படி கட்டாயமாகும்! (லூக்கா 12:33)

விசுவாசிகளின் தேவையில் நாம் ஒடி ஔிந்துகொண்டால், நமது தேவைகளில் அவர்கள் ஓடி ஔிந்துகொள்ளும் காலம் வரும்!

? வியாதியுள்ள விசுவாசிகளைவிட்டு ஊழியர்கள் ஓடி ஔியக்கூடாது!

வியாதியஸ்தராயிருக்கிற விசுவாசிகள் சிலர் ஊழியர் தங்களுக்கு நேரில் வந்து ஜெபிக்கவேண்டும் என்று விரும்புகிறபோது, அதை ஊழியர்கள் கொரோனாவை காரணம் காட்டி தவிர்க்கமுடியாது!

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்
(யாக்.5:14,15) என்று வேதம் சொல்லுகிறபடி, தங்களுக்கு எண்ணய் பூசி ஜெபிக்க அழைக்கும் வியாதிப்பட்ட விசுவாசிகளைவிட்டு ஊழியர்கள் ஓடி ஔிந்துகொள்ளமுடியாது.

வியாதிபட்ட விசுவாசக்குடும்பங்களுக்கு இன்று ஔிந்துகொள்ளும் ஊழியர்கள் , “நான் வியாதியுள்ளவனாயிருந்தேன் நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை” என்று ஆண்டவரால் குற்றஞ்சாட்டப்பட நேரிடலாம்! (மத்.25:43)

? துன்பத்திலுள்ள சபையாரைவிட்டு ஊழியர்கள் ஓடி ஔியக்கூடாது!

மரண இருளின் பள்ளத்தாக்கிலும் ஆடுகளுடன் இருந்து தேற்றுகிற ஒருவரே அருமையான மேய்ப்பர்! (சங்.23:4)

ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமுள்ளவரே நல்லமேய்ப்பன்!
(யோவான் 10:11)

விசுவாசிகள் சுகமாய் இருக்கும்போது மாதம் தவறாமல் அவர்களை சந்தித்தவர்கள், சுகவீனமாய் இருக்கும்போதும் சந்திக்க ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

சபையாரின் மகிழ்ச்சியான தருனங்களில் அவர்களுடன் பங்கெடுத்தவர்கள், அவர்களின் துன்பவேளையில் துணைநிற்கவேண்டியது அவசியம்!

கொரோனாவினால் மரித்த ஒருவரை தகுந்த பாதுகாப்புடன் கல்லரைவரை சென்று அடக்கம் செய்துவிட்டு வந்து, தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட எங்கள் ஊர் வயதான ஊழியர் ஒருவர் தேவகிருபையால் நலமாகவே இருக்கிறார்.

மரித்தவர்களை அடக்கம்பண்ணத் தங்களை அழைக்காமல், தாங்களே அடக்கம் செய்துவிட விசுவாசிகளைக் கேட்டுக்கொள்ளும்படி ஒரு ஊழியர் மற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்திய செய்தி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு காணநேர்ந்தது!

இயற்கையாக மரிப்பவரின் அடக்க ஆராதனையிலும் அதிகநேரம் செலவுபண்ணவேண்டாம் என்றும், கொரோனாவினால் மரிக்கிறவர்களின் அடக்கத்தில் நேரடியாக பங்குபெறாமல், Online வழியாக அவர்களின் குடும்பத்தாரை தாங்கும்படியும் பிரபலமான மேய்ப்பர் ஒருவர் ஊழியர்களுக்கு கொடுத்துள்ள ஆலோசனையையும் சமீபத்தில் படிக்கநேர்ந்தது!

“எங்கள் வீடுகளில் எவரேனும் இயற்கையாக மரித்தால் விசுவாசிகள் வந்து அதிகநேரம் அடக்கத்தில் பங்கெடுக்காமல், பார்த்துவிட்டு உனடியாக சென்றுவிடவேண்டும் என்றும், ஒருவேளை கொரோனாவினால் எவரேனும் மரிக்கநேர்ந்தால் விசுவாசிகளில் ஒருவரும் எங்களை நேரில் விசாரிக்க வராமல் Online வழியாக விசாரித்தால் போதும்” என்று ஊழியர்கள் கூட்டாக அறிக்கையிடமுடியுமா?

தகுந்த விழிப்புடனும் கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் விதிமுறைகளுடனும் சபையாரின் துக்கங்களில் பங்கெடுக்க ஊழியர்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்.

? தேவையுள்ள சமூகத்தைவிட்டு ஊழியர்கள் ஓடி ஔியக்கூடாது!

நம்மை சுற்றியுள்ள ஆண்டவரை அறியாத அல்லது அறிந்தும் ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கும் ஊழியர்கள் இன்று சேவைசெய்யவேண்டியிருக்கிறது.

“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்”. (கலாத்.6:9,10)

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். (ரோமர் 12:13)

அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு.
(ரோமர் 12:20)

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்.1:27)

போன்ற வசனங்களை கொள்ளைநோய்கள் பரவும் காலங்களில் கிறிஸ்தவர்கள் குறிப்பாய் ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தேவன் விதிவிலக்கு எதுவும் அளித்திருக்கவில்லை.

வெறுமனே ஜெபிக்கிறதோடில்லாமல் நம்மை சுற்றிலும் உள்ள பசியுள்ளவர்களின் பசியாற்றவும், வியாதியஸ்தரை வியாதியிலிருந்து மீட்கவும், துயருற்றோரை ஆறுதல்படுத்தவும் நம்மால் இயன்றதை திருச்சபைகள் செய்யவேண்டும்!

வெளியேவந்து உதவிசெய்ய இயலாத வயதான அல்லது பலவீனமான ஊழியர்கள் அல்லது விசுவாசிகள் தங்கள் பொருளால் களத்தில் நின்று போராடுவோரைத் தாங்கவேண்டும்!

இன்று நாம் உலகத்துக்கு நம்மை ஔித்துக்கொண்டு, நாளை அவர்களிடம் “இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று சொல்வோமானால், “இயேசு எங்களை நேசிக்கிறார், நீங்கள் நேசிக்கிறீர்களா?” என்று உலகத்தார் நம்மை பார்த்து கேட்கிறதை தவிர்க்கமுடியாது!

“ஔிந்து கொள்வது” என்பதை “ஒருவருக்கும் உதவாமல் மறைந்துகொள்வது” என்று பொருள்கொள்ளாமல், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்படாதபடிக்கு தற்காப்பு விதிகளை சரியாய் கடைபிடிப்பது” என்று கிறிஸ்தவர் குறிப்பாய் ஊழியர் பொருள்கொள்ளவேண்டும்!

– க. காட்சன் வின்சென்ட்.


Share this page with friends