பிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது?

Share this page with friends

பிரபலமான தேவஊழியர்களும் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது?

கொரோனா வைரஸ் கடைசி கால அடையாளங்களில் ஒன்றே அல்லாமல், கிறிஸ்தவர்களை தண்டிக்க தேவன் அனுப்பின கொள்ளைநோய் அல்ல என்கிறதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும்!

வியாதியில் மரிப்பது சிலருக்கு தண்டனையாக இருக்கலாம். ஆனால் வியாதியில் மரிக்கிற அனைவரையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கிறது சரியல்ல!

மனிதனுக்கு பிறப்பு உறுதிசெய்யப்படும்போதே இறப்பும் உறுதிசெய்யப்படுகிறது!

ஒருவர் எவ்விதமாய் மரிக்கவேண்டும் என்கிறதை தேவனே தீர்மானிக்கிறார்.

சிலர் இயற்கையாகவும், சிலர் வியாதியினாலும், சிலர் விபத்தினாலும், சிலர் இரத்தசாட்சியாகவும் மரிப்பதை தேவனே தீர்மானிக்கிறார்!

ஊழியர்கள் வியாதியில் மரிக்கிறதை வியப்பாகப் பார்க்க வேண்டியதில்லை!

மரணத்தை எதிர்கொள்ள ஒரு சூழல் அவசியமாயிருக்கிறது. தம்முடைய ஊழியரிலும் விசுவாசிகளிலும் சிலர் கொரோனாவினால் மரிக்கவேண்டும் என்கிறது தேவனுடைய சித்தமானால், அதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டியதில்லை!

பதினான்கு அற்புதங்களை செய்தவராக பார்க்கப்படுகிற எலிசா வியாதில் மரித்ததை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடிகிறதா? ஆனால் அதை அவர் ஏற்றுக்கொண்டார்! (2இராஜா.13:14-20)

மரணம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நேரிடலாம்.

ஒரு கிறிஸ்தவருக்கு குறிப்பாக ஊழியருக்கு இப்படித்தான் மரணம் நேரிடவேண்டும் என்கிற குறிப்பிட்ட விதி எதுவும் இல்லை!

எப்படி மரணம் நேரிடுகிறதாய் இருந்தாலும் அதை சந்திக்கக் கிறிஸ்தவர் ஆயத்தமாகவே இருக்கவேண்டும்!

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். (பிலிப். 1:21) ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னதென்று அறியேன். (பிலிப்.1:22)
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். (பிலிப்.1:23) அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். (பிலிப்.1:24) என்கிற வசனங்களை இங்கு நிதானிப்புக்கு எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ரோமாபுரியில் சிறை வைக்கப்பட்டிருந்த பவுல் (பிலிப்.4:22) தனக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியாகவே இருந்தார்.

கிறிஸ்து தனக்கு ஜீவனாகிவிட்டதால் சாவு தனக்கு லாபகரமானதாகவே இருக்கும் என்று அவர் நம்பினார்.

ஆகிலும், ஆண்டவரை அறியாதவர்களுக்கு அவரை அறிவிக்கவும், அறிந்தவர்களை ஸ்திரப்படுத்தவும் தாம் பிழைத்திருக்கிறது அவர்களுக்கு அவசியம் என்கிறதையும் அவர் உணர்ந்திருந்தார்.

ஒரு ஊழியக்காரர் சரீரத்தில் பிழைத்திருக்கிறது தேவனுடைய ஜனங்களுக்கு நல்லது. சரீரத்தில் மரிக்கிறது ஊழியருக்கு அதிகம் நல்லது!

தனக்கு அதிக நன்மையான மரணத்தைத் தெரிந்துகொள்வதா அல்லது பிறருக்கு நன்மையாக இருக்க ஜீவனைத் தெரிந்துகொள்வதா என்கிற இரண்டுவிதமான சிந்தனைகளினால் பவுல் பவுல் நெருக்கப்பட்டார்!

ஆத்துமாக்களுக்குப் பிரயோஜனப்படவேண்டும் என்கிறதைவிட, இந்த பூமியில் பிழைக்க ஊழியக்காரருக்கு வேறொரு முக்கியமான காரணம் எதுவும் இல்லை!

பவுல் ரோமாபுரி சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் தலைத் துண்டிக்கப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார்.

ஜனங்களின் பிரயோஜனத்திற்காக இன்னும் சில காலம் பிழைத்திருக்கவேண்டியது அவசியம் என்று அவர் எண்ணினாலும் அவரை தம்முடைய இளைப்பாறுதலுக்குள் அழைத்துக்கொள்ளவேண்டும் என்கிறது தேவனுடைய சித்தமாக இருந்தது.

ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்துவை தன் சரீரத்தினாலே மகிமைப்படுத்தவேண்டும் என்கிற வாஞ்சையுள்ளவராக இருந்த பவுல் (பிலிப்.1:20), தன் சரீர மரணத்தின் மூலம் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

மரணம், ஜீவன் இவை இரண்டிலும் தன் சரீரத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே ஒரு ஊழியரின் இலட்சியமாக இருக்குமானால், ஜீவனையும் மரணத்தையும் அவர் சமமாகவே பாவிப்பார்!

பூமியில் நாம் ஜீவனோடு இருப்பது பிறருக்கும், மரிப்பது நமக்கும் நன்மையாய் இருக்கிறபடியினாலே, தேவன் எதை அனுமதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும்!

கிறிஸ்துவுக்குள் பிழைக்கிறது மட்டுமல்ல, கிறிஸ்துவுக்குள் மரிக்கிறதும் மிகப்பெரிய பாக்கியமே! (வெளிப்.14:12,13)

நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
(ரோமர் 14:7) நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம், ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
(ரோமர் 14:8) என்கிற பவுலின் அறிக்கை கவனிக்கத்தக்கது.

நாம் பிழைக்கிறதும் மரிக்கிறதும் தேவனுக்காகவே. தேவனுக்காக பிழைக்கிறதில் நமக்கு இருக்கும் மகிழ்ச்சி, தேவனுக்காக மரிக்கிறதிலும் இருக்கவேண்டியது அவசியம்!

ஜீவனாலாகிலும் சாவினாலாகிலும் தங்கள் சரீரத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறவர்களுக்கு, மரணம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கான வாசலைத் திறக்கிறது. (2 கொரி. 4:17)

கிறிஸ்துவை அந்த மகிமையின் நம்பிக்கையாக தங்களில் கொண்டிருக்கிறவர்கள் (கொலோ.1:27) சரீர மரணத்தை தைரியமாகவே எதிர்கொள்கிறார்கள்!

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
(ரோமர் 8:38) உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
(ரோமர் 8:39) என்கிற பவுலின் அறிக்கையையே தங்களின் அறிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள், மரணத்தைக்குறித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை!

இவர்கள் ஜீவனோடிருக்கையில் கிறிஸ்து இயேசுவின் மூலமாய் தேவனுடைய அன்புக்குரியவர்களாய் இருக்கிறதுபோலவே, மரணத்திலும் தேவனுடைய அன்புக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்!

எனவே, கிறிஸ்துவினுடையவர்கள் கொரோனாவினால் மட்டுமல்ல, (தற்கொலையைத் தவிர) வேறு எந்தவிதத்தில் மரணத்தை சந்தித்தாலும் அவர்கள் மகிமைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்!

மரிக்கிற ஊழியருக்கு மரணம் மகிழ்சியும் மகிமைக்குரியதாகவும் இருந்தாலும், அவர்களை மரிக்கக் கொடுக்கிற குடும்பத்தாருக்கும் சபையாருக்கும் அது பெரிய இழப்பு என்கிறதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை!

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. (1 தெசலோ. 4:13) என்று சொல்லுகிற பவுல்தான்:
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள், அழுகிறவர்களுடனே அழுங்கள். (ரோமர் 12:15) என்றும் சொல்லியிருக்கிறார்.

இதன் பொருள் “அழுங்கள்! ஆனால் அழுதுகொண்டே இராதீர்கள்” என்பதாகும்.

அழுகிறவர்கள் அழுதுகொண்டேயிராமல், மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கையான வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் தேற்றவேண்டும் என்கிறார் பவுல். (1தெசலோ.4:14-18)

இப்படியிருக்க கொரோனாவினால் மரிக்கும் தேவஊழியர்களைக் குறித்து எதிர்மறையான எண்ணம் கொள்ளாமல், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும், அவர்களால் நடத்தப்பட்ட சபைகளுக்காகவும் ஜெபம்பண்ணவேண்டியது நமது கடமையாகும்.

மேலும் நமக்கு எப்போது, எவ்விதம்
மரணம் நேரிடுமானாலும் தேகத்தைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனே இருக்க எப்பொழுதும் நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

வாழ்ந்தாலும் மரித்தாலும் நமது சரீரத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவோமானால், நாம் வாழ்ந்தாலும் மரித்தாலும் கிறிஸ்துவுடனேயே இருப்போம்!

இறுதியாக சில வார்த்தைகள்.. தேவ ஊழியர்கள் இந்நாட்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளை கவனமாக கையாள வேண்டும். நமது குறைவினால் ஒரு வியாதியை வரவழைத்துக்கொண்டு தேவன் மீது பழி சொல்வதும் சரியானது அல்ல. தேவன் நமக்கு ஞானத்தையம் அறிவையும் அருளியிருக்கிறார். அதை முறையாக பயன்படுத்துவோம்.


Share this page with friends