ஆவியோடும், உண்மையோடும்!

Share this page with friends

ஆவியோடும், உண்மையோடும்!

“நீங்கள் தேவனுடைய ஆலமாயிருக்கீறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16).

நம் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் அவரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர். நீங்கள் அவருடைய ஆலயத்திலே உண்மையுள்ளவர்களாய் விளங்கவேண்டும் என்பதே அவருடைய பிரியமாகும்.

வேடிக்கையான கதை ஒன்றுண்டு. ஒரு முறை ஒரு சபையின் போதகர் தரிசனத்திலே பரலோகத்திற்கு சென்றாராம். அன்று ஞாயிற்றுக்கிழமையானதினால் உலகமெங்கும் சபைகளில் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தன. கர்த்தர் அவரைப் பார்த்து, “உன்னுடைய ஆலய ஆராதனையை நீ காணவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டார். போதகரும், “சரி” என்று தலையை அசைத்தார்.

பரலோகத்திலிருந்து பூமியிலே அவருடைய சபை ஆராதனையைக் கர்த்தர் காண்பித்தார். அந்த நேரம் பாடலின் நேரமாயிருந்தது. எல்லாரும் பாடிக் கொண்டிருந்தாலும், சத்தம் எதுவும் கேட்கப்படாமல் வாய் அசைவை மட்டுமே காண முடிந்தது. அத்தனை திரளான விசுவாசிகளின் மத்தியிலே ஒரேயொரு வாலிபன் பாடுகிற சத்தம் மட்டும், “கணீர்” என்று பரலோகத்தில் ஒலித்தது.

போதகர் அவரைப் பார்த்து, “எல்லாரும் பாடின போதிலும் ஒரேயொரு வாலிபன் குரல் மாத்திரம் கேட்டதற்கு என்ன காரணம்?” என்று விசாரித்தார். அதற்கு கர்த்தர், “மற்ற எல்லாரும் உதடுகளிலிருந்து கடமைக்காக பாடுகிறார்கள். சிலர் தன்னுடைய சத்தம் கேட்க வேண்டுமென்றும், ராகத்திற்காகவும், இசைக்காகவும் பாடுகிறார்கள். இவர்களது மாம்சத்திலிருந்து இப்பாடல் பாடப்படுவதால் அது பரலோகத்திற்கு எட்டுவதில்லை.

இந்த வாலிபன் என்னை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கும்படி ஆலயத்திற்கு வந்திருக்கிறான். அதனால்தான் அந்த குரல் மட்டும் பரலோகத்திலே கேட்கிறது” என்றார்.

கர்த்தருடைய எதிர்பார்ப்புகளில் ஒன்று நீங்கள் அவரைப் பாடித் துதித்து மகிமைப்படுத்த வேண்டும் என்பதாகும். நீங்கள் கர்த்தரை துதித்து ஆராதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு ஆலயத்துக்கு வருவீர்களென்றால், நிச்சயமாகவே கர்த்தர் உங்களுடைய உள்ளத்தை பரவசப்படுத்தி, ஆசீர்வதித்து அனுப்புவார். யோபு கர்த்தருடைய பிரசன்னத்திலே அவரை காணவேண்டுமென்று ஏங்கினார். அவர் சொல்லுகிறார், “…அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்” (யோபு 23:3,4).

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது, அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்கள். அவருடைய தெய்வீக பிரசன்னத்தில் அமர்ந்து, அவர் தரும் சமாதானத்தால் நிரப்பப்பட்டு சந்தோஷப்படுங்கள். கர்த்தருடைய ஆலயத்தின் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை!

நினைவிற்கு:- “கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்” (சங். 89:1)


Share this page with friends