உனக்கு X Mas ஸா? அல்லது Christmas -ஸா?

Share this page with friends

அவருக்குப் பெயர் வானத்திலிருந்து வந்தது.  அவர் X  அல்ல.

உலகம் சுழல்கிறது. சுருங்கியும்விட்டது என்கிறார்கள்.  உள்ளம் மட்டுமென்ன பரந்து விரிந்தா கிடக்கிறது?  உள்ளமும் சுருங்கி, சுருண்டுதான் கிடக்கிறது.

Daddy, Dad ஆகி “D” ஆகிவிட்ட காலம்.  Mummy,  Mum ஆகி  “M” ஆகிவிட்ட காலம். கம்ப்யூட்டர் உலகமல்லவா?  Dot என்றால் புள்ளி.  ஆம். இது புள்ளி உலகம். புவி,  மனிதனுக்கு புள்ளியாகிவிட்டது.  .com  என்ற வார்த்தையை உச்சரித்தால், Calm என்ற ஆங்கில வார்த்தை நினைவுக்கு வரும். Calm என்றால் அமைதி. புள்ளியும் அமைதியும் மனிதனைக் கவர்ந்திழுக்கும் காலம்.

பெயர் தெரியாத உன்னைப் பெயர்சொல்லி அழைத்து உன் பெயரையும் பெருமைப்படுத்துகிற  தேவன்.  ஆபிரகாமை மட்டுமல்ல,  அந்தச்  சந்ததியில் வருகிற உன்னை ஜாதியாக, ஜனமாக, கோத்திரமாகப் பெருகச் செய்து உன்னதத்திற்கு நேராக உயர்த்துகிறவர்.

“கிறிஸ்து” என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.  அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில்  அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (லூக்கா 2:11 / மத்தேயு 1:21)

இடம், காலம், கணிதம், மனிதன் இப்படி யாரையும், எதையும் குறிப்பிடும் பொருளற்ற, ஆனால் மாற்றுப் பொருளுடன் அடையாளம்.  அனைத்திற்கும்  X  (எக்ஸ்) தான்.  இந்தக் குறியீடுதான்.

பாவம், சாபம், பிணி , பிரச்சனை, ஆபத்து அனைத்தும் தவறுக்கு  அடையாளம், தவறுதலுக்கும் அடையாளம்.  அதாவது இந்த எக்ஸ் X  என்பது குற்றம் புரிந்தவர்களின் கொலைக் கருவியாகக் காணப்பட்ட சிலுவை  மரமானது, ஆரம்ப காலத்தில் X  வடிவத்திலேயே உருவாக்கப்பட்டது.

பாவ உலகில் ஜெநிப்பிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பிசாசின் கிரியைகளான பாவம், சாபம் இவைகளுக்கு அடிமைகளாக இருக்கிறோம். பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறான். பாவத்தின் சம்பளம் மரணம்.  தேவ குமாரனாகிய கிறிஸ்து உன்னை விடுதலையாக்கினால்  நீ மெய்யாகவே விடுதலையாவாய்.

அறியப்படாத காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார். பெயரிடப்படாத X ஆக  இருந்த உன்னை பெயரிட்டு அழைத்தவர். அவருக்குப் பெயர் வானத்திலிருந்து வந்தது.  அவர் X  அல்ல. வானத்திற்கும் பூமிக்கும் மேலான நாமத்தை உடையவர். உன்னை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து. அவரை அறிந்து, இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் நாமத்தைத் தரித்திருக்கிற ஜனம்  X Mas கொண்டாடுவதில்லை.  Christmas (கிறிஸ்துமஸ்) கொண்டாடுகிறார்கள்.   

X Mas என்று சொல்லி வழக்கப்படுத்திவிட்ட நிலைமையை மாற்றுவோம். பொருளற்றவரோ அர்த்தமில்லாதவரோ அல்ல என் இயேசு. அவருக்கு ஏராளமான நாமங்கள் உண்டு.  X Mas என்று சொல்லுவதைத் தவிர்த்து, கிறிஸ்துவை அறிக்கைசெய்து CHRISTMAS  என்போம். அதுவே அர்த்தம் பொதிந்தது.

பண்டிகைக் கொண்டாட்டங்களில் கிறிஸ்து என்ற நாமத்தைப் பறைசாற்றுவோம்.  கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்து என்ற நாமம் எல்லா இடங்களிலும் நீக்கப்படுகிற காலமிது.  கிறிஸ்துவை விட்டுவிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தாவை முன் வைக்கிற காலம். உங்களுக்காக ஜீவனைக் கொடுத்தது தாத்தா அல்ல. கிறிஸ்து என்பதை மறந்து போகவேண்டாம்.  கிறிஸ்தவத்தின் அடையாளங்களை நீக்கி,  அஸ்திபாரங்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறான் இந்த உலகத்தின் அதிபதி.  ஒரு உண்மைக் கிறிஸ்தவன் இவைகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். 

“பரலோகத்திலும் பூலோகத்திலும் முழுக் குடும்பத்துக்கும் நாமகாரணராகிய நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடைய” ( எபேசியர் 3:14) என்று தெளிவாக ஆவியானவர் எழுதிவைத்திருக்கிறார். எனவே முழு நாமத்தையும் உச்சரித்து, தேவனை மகிமைப்படுத்தி, முழு ஆசீர்வாதத்தையும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் பெற்றுக் கொள்வீர்களாக என்று கூறி, உங்கள் அனைவருக்கும்   CHRISTMAS வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால், மதுரை -14
ஆசிரியர் : வழிப்போக்கனின் வார்த்தைகள்
தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்  


Share this page with friends