நீர் என்னைக் காண்கின்றீர் (ஏரே 12:3)

Share this page with friends

ஒரு முகமதிய தளகர்த்தர் ஒரு சமயம் அரபி தேசத்து பாலைவனத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு வாலிபன் ஒரு பெரிய ஆட்டு மந்தை ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர் அந்த வாலிபனண்டை சென்று “தம்பி உனது ஆடுகளில் ஒன்று எனக்கு வேண்டும். நான் அதற்கான விலைக்கிரயத்தை உனக்கு தந்திடுவேன்” என்று கூறினார். அதற்கு அந்த வாலிபன் “ஜயா நான் இந்த ஆடுகளுக்கு சொந்தகாரன் அல்லன். நான் கூலிக்காக ஆடுகளை மேய்ப்பன். எனது எஜமானியின் அனுமதியின்றி இந்த ஆடுகளில் எதனையும் நான் தர இயலாது” என்று பணிவோடும் சாந்தத்தோடும் கூறினான்.

அந்த ஆட்டிடையனின் உண்மையை சோதிப்பதற்காக அந்த தளகர்த்தர் “தம்பி உனது எஜமானர் இங்கே இந்த வனாந்தரத்தில் இப்பொழுது இல்லை. அவர் எங்கேயோ கண் காணாத தொலை தூரத்தில் இருக்கின்றார். நீ எனக்கு ஒரு கொழுமையான ஆட்டை அதற்கான விலை விலைக்கிரயத்துக்கு தா. உனது எஜமானர் அந்த ஆட்டைக் குறித்துக் கேட்டால் அதை ஒரு ஓநாய் வந்து பட்சித்து போட்டது என்று பொய்யை சொல்லி விடு என்றார். இந்த வார்த்தையை கேட்டதும் அந்த ஆட்டிடையன் சற்று நேரம் மெளனம் ஆனான். சற்று நேர அமைதிக்குப் பின்னர் அவன் தனது வாயை திறந்து “நல்லது ஐயா, உங்கள் வார்த்தைகளின்படி நான் எனது எஜமானரை எளிதாக ஏமாற்றிவிடலாம். ஆனால் நான் வழிபடும் எனது அல்லாவை (கடவுளை) நீங்கள் சொன்ன வார்த்தைகளால் ஏமாற்ற முடியாதே, அவருடைய கண்கள் என்னை பார்த்து கொண்டிருக்கின்றனவே” என்று சொன்னான். அந்த உண்மையுள்ள ஆட்டிடையனின் வார்த்தைகளை கேட்டு மனமகிழ்ந்த அந்த தளபதி அவனுக்கு தக்க சன்மானம் கொடுத்து விட்டு சென்றான்.

ஒரு படிப்பறிவற்ற ஆட்டிடையனின் உண்மையை வார்த்தைகளை
கவனித்தீர்களா ? இந்த எளிய ஞானம் இன்று கிறிஸ்தவர்களிடம் சுத்தமாக காணப்படவில்லை.

தேவ ஜனமே விழிப்பாகி ஞானமடைந்து கொள். உனது ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாக நீ எதையும் செய்ய இயலாது, அவர் உன்னை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கிறார் (சங் 139:3) அவருடைய பரிசுத்தமான கண்கள் பூமியெங்கும் உலாவி கொண்டே இருக்கின்றது (2 நாளா 16:9)

தமிழ் நாட்டிலுள்ள ஒரு பெரிய ஊழிய ஸ்தாபனத்தில் நடக்கும் காரியங்களை பத்திரிகை, டிவி மூலம் அறிந்து இருப்பீர்கள். தேவன் நம்மை காண்கிறார் என்ற அறிவு ஒரு மனிதனிடம் இருந்தால் அவன் ஒருபோதும் பாவம் செய்யவே மாட்டான். தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.
ரோமர் 2:24

அன்று ஆகார் சொன்ன “நீர் என்னை காண்கின்ற தேவன்” (ஆதி 16:13) என்ற வார்த்தையை தேவ பிள்ளைகள் ஒரு போதும் மறக்க கூடாது.


Share this page with friends