- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
கர்த்தர் தந்த கருவிகளை . . . . . .
- 0
- 157
இறைவனுடன் இடைப்படும் நேரத்தில்
இனிய ஒலியெழுப்பி
இடையூறு செய்கிறது
இரக்கமற்ற கைப்பேசி
அன்பான மனைவியுடன்
அளவளாவிடும் நேரத்தை
அளவில்லாமல் அபகரிக்கிறது
ஆபத்தான அலைபேசி
களைத்து வரும் கணவருக்கு
களைப்பு தீரும் நேரத்தை
கருணையே இல்லாமல்
களவாடுகிறது கைப்பேசி
குழந்தைகளுடன் கொஞ்சும் நேரத்தில்
குறுக்கே வந்து
குழப்பம் தருகிறது
கொலைகார தொலைபேசி
பள்ளிச் சென்றிடும் பிள்ளைகளை
பாழும்கிணற்றில் தள்ளிவிட
பாதைக் காட்டி வருகிறது
பாழாய்போன தொலைபேசி
பெற்றோர் பிள்ளை உறவுகளை
பிரித்து வைத்து
பதம் பார்த்து
பேதம்பண்ணுது தொலைபேசி
மெய்தகவலை பொய்யென்றும்
பொய்தகவலை மெய்யென்றும்
புளுகிவருகுது புரட்டி வருகுது
புண்ணாக்கு தொலைபேசி
உழைப்பை கெடுத்து
உணவை தடுத்து
உயிரை வாங்குது
உதவாக்கரை தொலைபேசி
காதல் வலையில் தள்ளுகிறது
காமப்பசிக்கு அழைக்கிறது
கயவர்கள் கையிலுள்ள
களவாடிய கைப்பேசி
கர்த்தர் தந்த கருவிகளை
கருத்தாய் பயன்படுத்தி
கர்த்தருக்கு மகிமையை
கருத்தாய் செலுத்திடுவோம்