- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
காணாமல் போன மேய்ப்பன்….
- 0
- 298
நாதன் இயேசு சொன்ன
நல்ல மேய்ப்பனைத் தேடி
நாளும் கடந்து வந்தேன்
நல்ல தொழுவம் நாடி
அழுக்காக இருப்பதைக் கண்டு
அகன்று போ என்றார்
அற்புதங்களைச் செய்யும்
அழகிய மேய்ப்பர் ஒருவர்
படிப்பு வாசனையில்லை என்று
பழகிட மறுத்தார்-பல
பட்டங்களைப் பெற்ற
பரம்பரை மேய்ப்பர் ஒருவர்
ஒழுக்கத்தை ஓய்வுநாள் தோறும்
ஓயாமல் பிரசங்கம் செய்தார்
ஒழுக்கமில்லா பிள்ளை வளர்த்த
ஒய்யார மேய்ப்பன் ஒருவன்
எளிமையை வேடமிட்டு
ஏழைகளைக் கொள்ளையிட்டு
ஏராளமாய் சேர்த்தார்
ஏமாற்று மேய்ப்பர் ஒருவர்
பாமர ஆடுகளிடம்
பாசம் காட்ட மறுத்தார்
பங்களா ஆடுகளைத் தேடும்
பணக்கார மேய்ப்பர் ஒருவர்
பரிதபிக்கும் ஆட்டைக் கண்டு
பாச மழை பொழிந்தது
பட்சிக்கும் ஓநாய் ஒன்று
பாதிரியார் உருவத்திலே
நல்மேய்ச்சல் தருவாரென்று
நம்பிக்கையோடே நானிருந்தேன்
அமெரிக்காவே தரிசனமென்று
அதிரடியாய் பறந்துபோனார்
இயேசுவின் வார்த்தைப்படி
இனிய மேய்ப்பன் கிடைப்பானென்று
இயன்ற மட்டும் தேடினேன்
இன்று வரை கிடைக்கவில்லை
உன்னதர் இயேசு சொன்ன
உயிரைக் கொடுக்கும் மேய்ப்பன்
உங்களில் யாரும் உண்டோ?
உண்மையைச் சொல்லுங்களேன்
காணாமல் போன நல்மேய்ப்பனைக்
கண்டு பிடித்துத் தருவீரென்றால்
கடைசிவரை அடங்கியிருப்பேன்
கர்த்தரின் தொழுவத்தில்…