- by KIRUBAN JOSHUA
- 4 months ago
- 0
ஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்?
- 0
- 356
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன் (சங்கீதம் 5:7).
1. ஆராதனைக்கு ஆயத்தப்படுங்கள்
ஆராதனைக்கு செல்லுவதற்கு முன்பதாகவே அதற்கான ஆயத்தங்களை செய்யுங்கள். ஆராதனைகளுக்காகவும், அதை நடத்தும் ஒவ்வொருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். புதிய ஆத்துமாக்களை அழைத்துவர திட்டமிடுங்கள்.
2. தவறாமல் வாருங்கள்
தவிர்க்க முடியாத காரணத்தை தவிர, ஆராதனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வர தவறாதீர்கள். “எந்தவொரு வேலையும் அவர் ஆலயம் செல்லுவதிலிருந்து தடுத்தது இல்லை” என்று முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டனை பற்றி கூறப்படுகிறது.
3. சீக்கிரமாய் வாருங்கள்
ஆராதனைக்கு காலம் தாழ்த்தி, அவசர அவசரமாக வருவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உகந்தது அல்ல. ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு வரும்போது கர்த்தரை நீங்கள் கனம்பண்ணுகிறீர்கள்.
4. முழு குடும்பத்தையும் அழைத்து வாருங்கள்
ஆராதனை நேரம் என்பது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு கூடுகை அல்ல. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா கூறுவதை நினைவுகூருங்கள்.
5. கூடுமானவரை முன்வரிசையில் அமருங்கள்
பின்வரிசைகளை தாமதமாய் வருபவர்களுக்கும், குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு விட்டு விடுங்கள்.
6. பயபக்தியாய் இருங்கள்.
ஆராதனை ஸ்தலம் என்பது திரையரங்கமோ அல்லது பொழுதுபோக்கிற்கான இடமோ இல்லை. நீங்கள் ஆராதனைக்கு வருவது கர்த்தரை ஆராதிப்பதற்காகவே தவிர, சிரிப்பதற்கோ, மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதற்கோ அல்ல. உங்கள் போனை அணைத்து வைக்க வேண்டும் அல்லது சைலென்ட் மோடில் வையுங்கள். ஆராதனை வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் மிகவும் பயபக்திகுரியது.
7. பரிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை உள்ளே செல்லுங்கள் என்பதை தவிருங்கள். வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் வசதியான இருக்கைகள் கிடைக்க உதவுங்கள்.
8. உற்சாகமாய் பங்கு பெறுங்கள்.
ஆராதனையில் உற்சாகமாக ஈடுபடுங்கள். பிரசங்க நேரத்தில் கவனமாய் கவனியுங்கள், குறிப்பெடுங்கள். அச்சிடப்பட்ட வேதாகமத்தை கொண்டு வர மறக்காதீர்கள். நன்றாய் கைதட்டி பாடுங்கள். பார்வையாளராய் இருக்காதீர்கள். ஆராதனை செய்பவர்களாய் இருங்கள்.
9. புதிதாய் வருபவர்கள் மேல் நோக்கமாயிருங்கள்.
அவர்கள் நம்முடைய சிறப்பு விருந்தினர்கள். உங்கள் வீடுகளில் உங்கள் விருந்தினர்களை எப்படி உபசரிக்கிறீர்களோ அப்படி உபசரியுங்கள்.
10. உற்சாகமாக கொடுங்கள்.
உற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். உங்கள் காணிக்கை கர்த்தருக்குரியது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தருடைய சமூகத்திற்கு வெறும் கையாக வர வேண்டாம் என்று வேதம் கூறுகிறது.
11. முடிந்தவுடன் ஓடாதீர்கள்.
ஆராதனை முடிந்தவுடன் ஓடாதீர்கள். மற்றவர்களிடம் நட்புடன் பேசுங்கள். குறைந்தது மூன்று முதல் ஐந்து பேருக்காவது கைக்குலுக்கி செல்லுங்கள். தனிமையாக நிற்பவர்களை கவனித்து விசாரியுங்கள்.
12. தவறாமல் பங்குபெறுதல்.
சபையில் உள்ள சிறு சிறு குறைகளை பார்த்து சபைக்கு வராமல் இருப்பதை நிறுத்தாதீர்கள். பூரணமான சபை என்று ஒன்றுமில்லை. நாம் அனைவரும் பூரணத்தை நோக்கி கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். சபை என்பது ஒரு குடும்பம்.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” யோவான் 13:35. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
நன்றி
பாஸ்டர். பெவிஸ்டன்