இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர், இன்னும் நடைமுறைக்கு வராத சட்டத்தின் கீழ் இந்துக்களை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகக் கூறி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
புனே காவல்துறை, ஆகஸ்ட் 7ஆம் தேதி, “மகாராஷ்டிரா மதச் சுதந்திரச் சட்டம், 2026” என்ற மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால், இந்தச் சட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல்தான் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது.
தங்களது சட்டரீதியான தவறை காவல்துறை பின்னர் உணர்ந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் செயல்படும் Anglican Episcopal Church International உடன் தொடர்புடைய போதகர் பங்கஜ் தேவ்னூர் மீது வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புனே காவல்துறையின் நடவடிக்கை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
50 வயதான பங்கஜ் தேவ்னூர், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் புனே, குருவார் பேத் பகுதியில் நடைபெற்ற 10 நாள் தேவாலய ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்திருந்தார்.
ஆனால், தேவ்னூருக்கு எதிராக இந்து தேசியவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேவாலயத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன. பின்னர், மதமாற்றத் தடுப்புச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை காவல்துறை உணர்ந்ததால், தேவ்னூரை கைது செய்யவில்லை.
மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின் காலவரிசை
“மகாராஷ்டிரா மதச் சுதந்திரச் சட்டம், 2026” கட்டாயப்படுத்துதல் அல்லது மோசடி மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை குற்றமாக்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தச் சட்டம் உருவான முக்கிய கட்டங்கள்:
மார்ச் 5 — மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை மதமாற்றத் தடுப்பு மசோதாவின் வரைவை ஒப்புதல் அளித்தது.
மார்ச் 13 — மசோதா மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 16 — பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மகாராஷ்டிரா சட்டப்பேரவை குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றியது.
ஜூலை 30–31 — குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் மாநில அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 28 — சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
நடைமுறைக்கு வராத சட்டத்தின் கீழ் இங்கிலாந்தைச் சேர்ந்த தேவாலயத் தலைவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவில் மதச் சுதந்திரம் தொடர்பாக அதிகரித்து வரும் சட்டரீதியான கண்காணிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, கட்டாயப்படுத்துதல் அல்லது பணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மதமாற்றம் செய்வதாகக் கூறப்படும் செயல்களுக்கு எதிராக பல மாநிலங்கள் கடுமையான சட்டங்களை கொண்டு வருகின்றன. இத்தகைய சட்டங்களின் கீழ் நீண்டகால சிறைத் தண்டனைகள் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
இதுவரை, இத்தகைய சட்டங்களின் கீழ் ஒரு குற்றச்சாட்டுக்குக்கூட தண்டனை உறுதி செய்யப்பட்ட வழக்கு இல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் நிலவும் இந்து மேலாதிக்கக் கருத்துகளின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இதனால் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினரை அச்சுறுத்தும் வகையில் சட்ட நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மாற்று சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முயற்சி
மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டபோதிலும், புனே காவல்துறை போதகர் தேவ்னூருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
அவரது குடியேற்ற விதிமுறைகள் தொடர்பாக ஏதேனும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து காவல்துறை தற்போது விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
தேவ்னூரிடம் Overseas Citizen of India (OCI) அந்தஸ்து இருப்பதால், அவர் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதி உள்ளது. ஆனால், பொதுமக்கள் முன்னிலையில் பிரசங்கம் செய்வதற்கோ அல்லது மத உரைகளை நிகழ்த்துவதற்கோ முன்கூட்டியே அரசு அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறை கூறுகிறது.
புகார் அளித்தது யார்?
ஆகஸ்ட் 7ஆம் தேதி, தேவாலய ஆண்டு விழா நடைபெற்ற இடத்திற்குள் சில இந்து ஆண்கள் நுழைந்து, தேவ்னூர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.
அவர்களில் ஓட்டுநராக பணியாற்றும் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்து, தேவ்னூர் சட்டவிரோத மதமாற்றங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.
இதையடுத்து, காவல்துறை உடனடியாக நடைமுறைக்கு வராத மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேவ்னூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.
அந்தப் புகாரில், தேவ்னூர் இந்திய இசைக்கருவிகளையும் இந்து சமயச் சொற்களையும் பயன்படுத்தி இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு ஈர்க்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், தேவ்னூரின் குடும்பத்தினரும் சட்டக் குழுவினரும் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் “ஆதாரமற்றவை” என்று தெரிவித்தனர். அவர் ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் பிரார்த்தனைக் கூட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டதாக அவர்கள் விளக்கம் அளித்தனர்.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
வழக்கு விசாரணையின்போது, மதமாற்றத் தடுப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஜூலை 31ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தாலும், அந்தச் சட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல்தான் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
மேலும், திறந்த அனுமதியுடன் நடைபெறும் ஒரு கிறிஸ்தவக் கூட்டம் மட்டும், வெளியில் இருந்து வரும் நபர்களை மதமாற்றம் செய்யும் நோக்கம் இருப்பதை தானாகவே நிரூபிக்காது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தேவ்னூருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.
கடுமையான ஜாமீன் நிபந்தனைகளின் கீழ், நீதிமன்றத்தின் அனுமதியின்றி தேவ்னூர் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது. மேலும், அவர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகி வர வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இது மகாராஷ்டிரா மதமாற்றத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகும்.
குடும்பத்தினர் கவலை
ஊடகச் செய்திகளின்படி, இந்திய காவல்துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தேவ்னூரின் குடும்பத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
மேலும், அவரது பெயரும் புகைப்படமும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளதால், அவரது பாதுகாப்பு குறித்தும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) சார்பில் ஒருவர், இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் குடிமகனுக்கு தாங்கள் ஆதரவளித்து வருவதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.