“ஆனால் நான் மாற விரும்பவில்லை!” என்று டெபோரா அன்று பிற்பகலில் பதினைந்தாவது முறையாக மீண்டும் கூறினாள்.
பல ஆண்டுகளாக டெபோரா ஒரு ஏழையைப் போலவே வாழ்ந்து வந்தாள். திறந்த வானமே அவளுக்குக் கூரையாக இருந்தது. வழியில் செல்வோர் கொடுக்கும் உதவிகளே அவளுடைய வருமானமாக இருந்தன. இப்போது அவளுடைய தந்தை அவளுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார். அவளுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அவர் வழங்கிக்கொண்டிருந்த அதே அன்பான அழைப்பை மீண்டும் வழங்கினார். அதாவது, தன்னுடன் வந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்படி அழைத்தார்.
“ஆனால் டெபோரா, உனக்கு இந்த ஏழ்மையான வாழ்க்கையிலிருந்து விடுபட ஒரு வழியை நான் காட்டும்போது, ஏன் இன்னும் இந்த வாழ்க்கையையே பிடித்துக்கொண்டு இருக்கிறாய்?”
தன் தந்தையின் குரலில் இருந்த வேதனையை டெபோராவால் உணர முடிந்தது. இருந்தாலும், அவள் பிடிவாதமாகத் தலையை அசைத்துவிட்டு,
“எனக்கு மாற விருப்பமில்லை. இப்போது நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் பிடித்திருக்கிறது” என்று மீண்டும் கூறினாள்.
“ஆனால் கடந்த வாரம்தானே, இரவு உணவு இல்லாமல் பசியோடு படுக்கைக்குச் சென்றதை நினைத்து நீ வருத்தப்பட்டாய்? மழையில் நனைந்து தெருக்களில் வாழ்வது எவ்வளவு துன்பமானது என்பதும் உனக்கு நினைவில்லையா?”
தன் தந்தை கூறியவற்றைப் பற்றி டெபோரா சிறிது நேரம் சிந்தித்தாள்.
அவர் சொல்வது உண்மைதான். தெருக்களில் வாழ்வது சில நேரங்களில் மிகவும் துன்பமானதாக இருக்கும். ஆனால் இத்தனை ஆண்டுகளாகப் பழகிவிட்ட இந்த வாழ்க்கையை விட்டுவிடுவதா? ஓ, வேண்டவே வேண்டாம்! அவளால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று நினைத்தாள்.
தன் குறைகளுக்குத் தீர்வு தன் முன்னால் இருந்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே வாழ்வதையே அவள் விரும்பினாள்.
“என்னால் மாற முடியாது, அப்பா. நான் இந்த வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டேன். என்னுடைய பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாது. இது நம்பிக்கையற்ற ஒரு நிலைதான். சில மாதங்களுக்கு முன்பு இந்த வாழ்க்கையை விட்டுவிட முயற்சி செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால் முதல் நாளிலேயே மீண்டும் தெருவுக்குத் திரும்பிவிட்டேன்! என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை!” என்று டெபோரா வாதிட்டாள்.
“ஆனால் உன்னால் முடியும்! நான் உனக்கு உதவி செய்வேன்! நீ என்னுடன் வந்து வாழலாம். இப்படி எந்த நோக்கமும் இல்லாமல் தெருக்களில் சுற்றித் திரிவதைத் தவிர, உனக்குப் பயனுள்ள வேறு பல வேலைகளையும் நான் கொடுப்பேன். நாம் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் தெரியுமா? தயவுசெய்து என்னுடன் வந்துவிடு!” என்று கூறிய அவளுடைய தந்தை, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவளை அழைப்பதுபோலத் தனது கையை நீட்டினார்.
டெபோரா தலையை அசைத்தாள்.
“என்னால் மாறவே முடியாது” என்று மீண்டும் கூறினாள்.
“உன்னால் முடியாதா? அல்லது மாற விருப்பமில்லையா?”
மிகவும் மெதுவான குரலில் அவளுடைய தந்தை இந்தக் கேள்வியைக் கேட்டார்.
டெபோரா அதற்குப் பதிலளிக்கவில்லை. அமைதியாகத் திரும்பி, மீண்டும் தனது விருப்பத்தினால் தேர்ந்தெடுத்துக்கொண்ட துன்பமான வாழ்க்கையைத் தொடர்வதற்காகத் தெருவை நோக்கி நடந்துசென்றாள்.
தன் மகள் தன்னைவிட்டுச் செல்வதைப் பார்த்த அவளுடைய தந்தை, கண்களில் பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டார். மெதுவாகத் திரும்பி அங்கிருந்து சென்றார்.
அவர் மீண்டும் நாளை வருவார். ஒருவேளை அப்போது தன் மகள் அவருடைய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பாளோ!
வேதாகம வசனம்
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
யோவான் 3:16