சங்கீதம் 144:15 – இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
உண்மையான பாக்கியம் எது?
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியவானாக வாழ விரும்புகிறான்.
• சிலர் பணம் இருந்தால் பாக்கியம் என்று நினைக்கிறார்கள்.
• சிலர் சொத்து இருந்தால் பாக்கியம் என்று நினைக்கிறார்கள்.
• சிலர் நல்ல வேலை, பதவி, நல்ல குடும்பம் இருந்தால் பாக்கியம்
• சிலர் தங்கள் திறமையை, ஞானத்தை பாக்கியம் என்று நினைக்கிறார்கள்.
• சிலர் ஆள் பலம், சொல் பலம் இருந்தால் பாக்கியம் என்று நினைக்கிறார்கள்.
இவையெல்லாம் வாழ்க்கைக்கு உதவக்கூடியவை தான். ஆனால் இவையெல்லாம் இருந்தும் மனதில் சமாதானம், சந்தோஷமும் இல்லாமல் வாழ்கிறவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
• ஒருவனிடம் பெரிய வீடு இருக்கலாம்; ஆனால் அந்த வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கலாம்.
• ஒருவனிடம் ஏராளமான பணம் இருக்கலாம்; ஆனால் எதிர்காலத்தைக் குறித்த பயம் இருக்கலாம்.
• பல நண்பர்கள் இருக்கலாம்; ஆனால் தன்னுடைய வேதனையைப் மனதார பகிர்ந்துகொள்ள ஒருவர் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் வேதாகமம் நமக்கு இங்கே ஒரு வித்தியாசமான பாக்கியத்தை அறிமுகப்படுத்துகிறது. “கர்த்தரைத் தங்கள் தேவனாகக் கொண்டிருக்கிற ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்!”
கவனியுங்கள்! வேதாகமம் கர்த்தரைப் பற்றி அறிந்திருக்கிறவர்கள் என்று சொல்லவில்லை. கர்த்தரைத் தங்கள் தேவனாகக் கொண்டிருக்கிறவர்கள் என்று சொல்லுகிறது.
• தேவனைப் பற்றி அறிந்திருப்பது வேறு;
• தேவனோடு உறவு, ஐக்கியம் கொண்டிருப்பது வேறு.
இன்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி:
“நான் கர்த்தரை என் தேவன் என்று அழைக்கிறேன்; ஆனால் உண்மையாகவே அவர் என் வாழ்க்கையின் ஆண்டவராக இருக்கிறாரா?”
சங்கீதம் 33:12 -கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருப்பது மிகப்பெரிய பாக்கியம்!
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
தேவன் நம்மைத் தம்முடையவர்களாக அழைக்கிறார்
• ஏசாயா 43:1-ல் யாக்கோபே….. “நீ என்னுடையவன்” என்று கூறுகிறார்.
இந்த வார்த்தை எவ்வளவு ஆறுதலானது! நம்பிக்கையானது
மனிதர்கள் சில நேரங்களில் நம்முடைய தோல்வியைப் பார்த்துது நம்மை மதிப்பிடலாம். மனிதர்கள் நம்முடைய வெளிப்புறத்தைப் பார்க்கிறார்கள். தேவன் நம்முடைய இருதயத்தை அறிந்திருக்கிறார்.
இந்த உலகத்தில்
• எல்லோரும் நம்மைப் புரிந்துகொள்ள, பாராட்ட, தியாகத்தை அறிந்திருக்க, வேண்டிய அவசியமில்லை. நம்மைப் படைத்த தேவன் நம்மை அறிந்திருக்கிறார்.
உதாரணம்:
ஒரு குழந்தை அப்பா கையைப் பிடித்துக்கொண்டு கூட்டத்திற்குள் செல்கிறது. அங்கே யாரையும் தெரியாது. அந்த இடம்; புதிதாக இருக்கலாம். ஆனால் தன் தகப்பனின் கையைப் பிடித்திருப்பதால் அதற்குப் பாதுகாப்பான உணர்வு இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு தகப்பனுடைய பணத்தின் அளவு தெரியாது. அவருடைய சொத்து எவ்வளவு என்றும் தெரியாது. ஆனால், “இவர் என்னுடைய அப்பா” என்ற உறவு அதற்கு நிம்மதியைக் கொடுக்கிறது. அதுபோலவே, நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நம்முடைய பரலோகப் பிதாவோடு நல்ல ஐக்கியம் இருந்தாலே மனதில் நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கிறது.
எதை இழந்தாலும் தேவனை இழந்துவிடக்கூடாது
ஆபகூக் 3:17-18-ல், அத்திமரம்.. திராட்சச்செடி ஒலிவமரம் வயல்கள் ஆடு மாடு எல்லாம் இல்லாமற்போனாலும், எல்லாம் இழந்துபோனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில்
• நாம் எதிர்பார்த்த ஜெபித்த காரியங்கள் நடக்காமல் போகலாம். தாமதமாகலாம்.
• பொருளாதாரத்தில், குடும்பத்தில் நெருக்கடி சவால்கள், பிரச்சனைகள் வரலாம்.
அப்போது நம்முடைய விசுவாசம், “எல்லாம் சரியாக இருந்தால்தான் நான் தேவனைத் துதிப்பேன்” என்று சொல்லக்கூடாது. “எனக்கு என்ன இருக்கிறது என்பதைக் காட்டிலும், என் வாழ்க்கையில் யார் இருக்கிறார் என்பதுதான் முக்கியம்!”
“உலகம் உங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறது என்று எண்ணிப் பார்க்கிறீர்களா? அதைவிட, தேவன் உங்களுக்கு அளித்துள்ள இரட்சிப்பின் கிருபையை நினைத்துப் பார்த்துதிருக்கிறீர்களா?”
நம்முடைய நற்கிரியைகளினால், சுய பெலத்தால், ஞானத்தால் தேவனுடைய அன்பை, இரட்சிப்பைப் பெற முடியாது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகும் வாய்ப்பைப் பெறுகிறோம். இந்தப் பாக்கியம் தேவனுடைய கிருபையால் கிடைக்கிறது
எபேசியர் 2:8-9-ல், கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு..
• கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. அது நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்.
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருப்பது மிகப்பெரிய பாக்கியம்!
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் எப்படி இருப்பார்கள்?
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் எப்படி இருப்பார்கள்?
1. நீதிமொழிகள் 3:5-6 – கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் அவரையே முழுமையாக நம்புகிறார்கள்!
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
• கர்த்தரை நம்முடைய தேவனாகக் கொண்டிருப்பது என்பது, நம்முடைய வாழ்க்கையின் முழுமையையும் அவரிடம் ஒப்படைப்பதாகும்.
2 நாளாகமம் 20:11-13-ல் யோசபாத் ராஜா, தனக்கு எதிராக வந்த பெரிய கூட்டத்தைக் கண்டு தேவனிடம் ஜெபிக்கிறார். “எங்களுக்கு பெலனில்லை; என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை; எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன.” (யூதா கோத்திரத்தார், குழந்தைகளும், பெண்கள் அவர்கள் வாலிபர்கள் எல்லாரும் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.)
இந்த ஜெபத்தைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
யோசபாத் ராஜா இவர் ஒரு பெரிய தேசத்தின் ராஜா. அவருக்கு மக்கள் பலம், படை பலம், இதையெல்லாம் பெரிதாக பார்க்காமல் ஆண்டவரை நோக்கி பார்த்துதார் “ஆண்டவரே, என்ன செய்வது எனக்குத் தெரியவில்லை
யோசபாத் ராஜாவுக்கு ஆண்டவர் உதவினாரா? 2 நாளாகமம் 20:15-22 கர்த்தர் சொன்னார்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் யுத்தம் உங்களுடையதல்ல இது கர்த்தருடையது அவர்களுக்குள்ளே வெந்து மடிந்தார்கள்
சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரலாம். ஆனால் கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட நாம் நிகழ்கால, வருங்கால சூழ்நிலையை கண்டு பயப்படாமல் கலங்காமல் தேவனை முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தால் வெற்றியுண்டு
• சிலர் பணத்தை மட்டுமே நம்புகிறார்கள்.
• சிலர் தங்களுடைய பதவியை நம்புகிறார்கள்.
• சிலர் மனிதர்களின் செல்வாக்கை நம்புகிறார்கள்.
• சிலர் தங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே நம்புகிறார்கள்.
சங்கீதம் 20:7-ல், சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
• பணம், அறிவு, மருத்துவ உதவி, மனிதர்களின் ஆலோசனை ஆகியவை தேவையற்றவை என்று வேதாகமம் சொல்லவில்லை. அவற்றைச் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். ஆனால் நம்முடைய இறுதி முழு நம்பிக்கையும் தேவன் மேல் உரியதாக இருக்க வேண்டும்.
ஒரு சிறிய உதாரணம்:
ஒரு நோயாளி மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர் பரிசோதித்து சிகிச்சை அளிக்கிறார். அந்த நோயாளி சிகிச்சையைப் பெறுவதோடு தேவனிடமும் ஜெபிக்கிறார். இங்கே மருத்துவ உதவியைப் பெறுவது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல. ஞானமான வழிகளில் உதவியை நாடிக்கொண்டே தேவனை நம்பலாம்.
• உண்மையான விசுவாசம் என்பது பொறுப்புகளைத் தவிர்ப்பது அல்ல; தேவனை நம்பிக்கொண்டே பொறுப்புடன் செயல்படுவது.
• “எல்லாவற்றையும் நான் புரிந்துகொண்ட பிறகுதான் தேவனை நம்புவேன் என்பது விசுவாசமல்ல; புரியாத நேரத்திலும் அவரைத் தேடுவதுதான் விசுவாசம்!”
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் எப்படி இருப்பார்கள்
1 அவரையே முழுமையாக நம்புகிறார்கள்!
2 அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள்!
2 கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள்!
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
கர்த்தரை நம்முடைய தேவன் என்று சொல்வது வாயினால் செய்யும் அறிக்கை மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையில் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அந்த உறவு வெளிப்பட வேண்டும்.
சங்கீதம் 119:105 – “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (இரவில் இருண்ட பாதையில் நடக்கும்போது கையில் விளக்கு இருந்தால், அடுத்த அடியை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியும்.) அதேபோல், நம்முடைய வாழ்க்கையில் பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.
• எதைப் பேச வேண்டும்? எப்படிச் செயல்பட வேண்டும்? எந்த வழியில் செல்ல வேண்டும்? மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
இப்படிப்பட்ட நேரங்களில் நம்முடைய விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், தேவனுடைய வார்த்தையின் வழிநடத்துதலைத் தேட வேண்டும்.
உதாரணமாக,
ஒருவர் நம்மைக் காயப்படுத்தியிருக்கலாம். அவருக்குப் பதிலாக நாமும் காயப்படுத்த வேண்டும் என்று தோன்றலாம் அது இயல்பு ஆனால் ரோமர் 12:17-21 தீமைக்குத் தீமையைச் செய்யாமல், தீமையை நன்மையினால் வெல்லும்படி போதிக்கிறது.
வேதவசனம் நம்முடைய உணர்வுகளை மறுக்கச் சொல்லவில்லை; அந்த உணர்வுகளால் தவறான செயல்களைச் செய்யாமல் வாழக் கற்றுக்கொடுக்கிறது.
மத்தேயு 7:24-27-ல், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
. இந்த உவமையில் வீடு என்பது நம்முடைய வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது. புயல் வராது, (பிரச்சனை, போராட்டம், பாடுகள்) என்று இயேசு சொல்லவில்லை. புயல் வந்தாலும் நிலைத்திருக்கக்கூடிய அஸ்திபாரத்தைப் பற்றி அவர் கற்றுக்கொடுக்கிறார். அதேபோல், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதனை கைக்கொள்வது, அதன்படி வாழ்வது, அதற்கு முழுவதுமாய் கீழ்படிவது நம்முடைய வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளமாக அமைகிறது.
“வேதாகமத்தை அலமாரியிலும், தலையனையிலும், பையிலும், கையிலும் வைத்திருப்பது மட்டும் போதாது; அதன் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைக்கு வர வேண்டும்!”
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் அவருடைய வார்த்தையை நம்புவதோடு வார்த்தைக்குச் செவிகொடுக்கிறவர்களாய், கீழ்ப்படிகிறவர்களாய் இருக்க வேண்டும் வெளி 1:3 – யார் பாக்கியவான்கள்? வசனத்தை வாசிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், அதை கைக்கொள்ளுகிறவர்கள்
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் எப்படி இருப்பார்கள்
1 அவரையே முழுமையாக நம்புகிறார்கள்! 2. வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள்!
3 அடுத்த தலைமுறைக்கு ஆசீர்வாதமாக வாழ்கிறார்கள்!
3 கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் பலவித சோதனையிலும் அடுத்த தலைமுறைக்கு ஆசீர்வாதமாக வாழ்கிறார்கள்!
தானியேல் 3:17-18 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
இந்தச் சம்பவம் நமக்கு இரண்டு பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.
- இந்த மூன்று வாலிபர்களும் தேவன் தங்களை விடுவிக்க வல்லவர் என்பதை நம்பினார்கள்.
- அதே நேரத்தில், தேவன் தங்களுடைய விருப்பத்தின்படி செயல்படாவிட்டாலும் அவரை மறுக்கமாட்டோம் என்ற உறுதியையும் கொண்டிருந்தார்கள்.
இதுதான் முதிர்ச்சியான விசுவாசம்.
அவர்கள் அக்கினிச் சூளையில் இருந்தார்கள். ஆனாலும் தேவனுக்கு உண்மையாய் நிற்பதை விட்டுவிடவில்லை. அக்கினிச் சூளையில் மூன்று வாலிபர்கள்ளுடன் இன்னொருவர் இருப்பதை ராஜா காண்கிறார்
• சிலர் ஜெபித்த காரியம் நடந்தால் தேவனைத் துதிக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்துதபடி நடக்காவிட்டால் மனம் உடைந்துபோகிறார்கள்.
• தேவனிடம் நம்முடைய தேவைகளைக் கேட்பது தவறல்ல. விடுதலைக்காக ஜெபிப்பதும் தவறல்ல. ஆனால் தேவன் நம்முடைய எல்லா விருப்பங்களையும் நாம் நினைக்கும் நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியாது.
• நினைவில் கொள்ளுங்கள்: சோதனை இல்லாத வாழ்க்கையே விசுவாசத்தின் அடையாளம் அல்ல; சோதனையிலும் தேவனைச் சார்ந்து வாழ்வதே விசுவாசத்தின் அடையாளம்.
யோசுவா 24:15 – “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.”
இன்று நம்முடைய குடும்பங்களுக்கும் இப்படிப்பட்ட தீர்மானம் தேவை.
• குடும்பத்தில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குச் செல்வது மட்டுமல்ல. குடும்பத்தில்
• ஜெபத்திற்கு வேதவசனத்திற்கு இடமளிப்பது,
• ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது, மன்னிப்புக் கேட்பது,
• பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
உபாகமம் 6:6-7-ல் இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
தேவனுடைய வார்த்தைகளைப் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிக்கும்படி கட்டளையிடப்படுகிறது. உதாரணம்:
ஒரு தகப்பன் தன் பிள்ளையிடம், “மகனே, எப்போதும் உண்மை பேச வேண்டும்” என்று சொல்லுகிறார். ஒருநாள் அந்தத் தகப்பனே ஒரு தவறு செய்துவிடுகிறார். அதை மறைப்பதற்குப் பதிலாக, தன்னுடைய பிள்ளையிடம், “நான் தவறு செய்துவிட்டேன்; அதைச் சரிசெய்ய வேண்டும்” என்று ஒப்புக்கொள்கிறார். அந்தச் செயல் பிள்ளைக்கு ஒரு பெரிய பாடமாக அமையும். உண்மையாக வாழ்வது என்பது மற்றவர்களிடம் மட்டும் எதிர்பார்க்கும் விஷயம் அல்ல; நாமும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதை அது கற்றுக்கொடுக்கும்.
இவ்வாறு தேவனுடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்போது, நம்முடைய குடும்பம் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக அமைய முடியும்.
எரேமியா 17:7-8-ல், கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழை தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
கர்த்தரை நம்புகிற மனிதன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்திற்கு ஒப்பிடப்படுகிறான். அந்த மரம் வெப்பம் வரும்போது உடனடியாக வாடிப் போவதில்லை. வறட்சி ஏற்படும்போது அதன் வேர்கள் தண்ணீரைத் தேடி வளருகின்றன.
தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரம் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுப்பதைப் போல் இன்று தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு, நடந்தால் அனேகருக்கு ஆசீர்வாதமாய் கனிகொடுக்க செய்வார்
• துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
• கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
• அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் எப்படி இருப்பார்கள்
1 அவரையே முழுமையாக நம்புகிறார்கள்! 2. வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள்!
3 அடுத்த தலைமுறைக்கு ஆசீர்வாதமாக வாழ்கிறார்கள்!