சத்தீஸ்கர் மாநிலம், காங்கேர் மாவட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தைக் கைவிட மறுத்த கிறிஸ்தவக் குடும்பம், சுமார் 150 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 21 அன்று பண்டார்டிகி கிராமத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், 24 வயதான விகாஸ் சலாம், அவரது மாமா சோம்ஜி நுரேட்டி, உறவினர் பிரதீப் உய்கே மற்றும் 11 வயது சிறுவன் ரோஹன் உள்ளிட்டோர் கம்புகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெண்களும் வயதானவர்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிராமத்தில் இருந்த மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் ஏற்கனவே கட்டாயப்படுத்தப்பட்டு இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், கடும் மிரட்டல்களுக்கு மத்தியிலும் தங்கள் குடும்பம் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக இயேசுவின் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதாகவும் விகாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜெபக் கூட்டங்களைத் தடுத்ததுடன், கிராமப் பஞ்சாயத்துக்கு பலமுறை அழைத்து மதத்தை மாற்றும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும், அரசின் இலவச ரேஷன் பொருட்களையும் குடும்பத்தினருக்கு வழங்காமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு குடும்பத்தினரைச் சந்தித்த அதிகாரிகள், விவசாய நிலத்தையும் சொத்துகளையும் பறிமுதல் செய்துவிடுவதாக மிரட்டி, “நிலம் வேண்டுமா? இயேசு கிறிஸ்து வேண்டுமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறியதாக விகாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மத மாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில், விகாஸ் சலாம் மட்டும் தனது குடும்பத்துடன் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட மறுத்துள்ளார்.
“எங்கள் நிலம், சொத்து, வீடு, மூதாதையர் வாழ்ந்த கிராமம் என அனைத்தையும் விட்டுச் செல்லத் தயாராக இருக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் கைவிட மாட்டோம். சுதந்திரமாக தேவாலயத்திற்குச் சென்று இயேசுவை ஆராதிக்க முடியும் என்றால், வேறொரு நகரத்தில் கூலி வேலை செய்துகூட வாழத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு மிகவும் கடினமான 50 நாடுகளின் பட்டியலில், ஓபன் டோர்ஸ் அமைப்பின் 2026 உலக கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது.