தமிழ்நாட்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
600 பேருக்கு அரசு நிதியுதவி
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 600 கிறிஸ்தவர்கள் பயன்பெற உள்ளனர். இதில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37,000 மானியமாக வழங்கப்படும். மேலும், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருள்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 வழங்கப்படும்.
வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு
இந்த நிதியுதவி மின்னணு பணப் பரிமாற்ற முறையான ECS மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். தகுதியுள்ள பயனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் எங்கே கிடைக்கும்?
விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான ஆவணங்களுடன் 2027 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை,
கலச மஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம்,
சேப்பாக்கம், சென்னை – 600 005.
விண்ணப்பிக்கும் முன்பு தகுதி நிபந்தனைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.