கொல்கத்தா, நவம்பர் 2026: மேற்கு வங்க மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை, மிரட்டல் மற்றும் வழிபாட்டுக் கூட்டங்களுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக 32 சம்பவங்களைப் பதிவு செய்துள்ள அறிக்கையை இவாஞ்சலிக்கல் பெல்லோஷிப் ஆஃப் இந்தியா (Evangelical Fellowship of India – EFI) வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மத சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் (Restrictions on Religious Freedom and Attacks against Christian Communities in West Bengal) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. EFI அமைப்பின் மத சுதந்திர ஆணையம் (Religious Liberty Commission – EFIRLC) இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் 13 மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஜெபக் கூட்டங்களுக்குத் தடை ஏற்படுத்துதல், உடல் ரீதியான தாக்குதல்கள், மிரட்டல்கள், தேவாலயங்கள் மற்றும் மத வழிபாட்டுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், வேதாகமங்கள் மற்றும் பிற வழிபாட்டுப் பொருட்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து EFI அமைப்பின் பொதுச்செயலாளர் ரெவரண்ட் விஜயேஷ் லால் கூறுகையில், “ஜெபம் செய்வதற்காக ஒன்றுகூடுவது போன்ற ஓர் இயல்பான செயல்கூட மக்களை வன்முறை மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளாக்குகிறது என்பது மிகவும் கவலைக்குரியது. எங்களது மத சுதந்திர ஆணையம் பதிவு செய்துள்ள 32 சம்பவங்களில் கடுமையான தாக்குதல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மிரட்டல்கள், காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்த கவலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றை மேற்கு வங்க அரசு புறக்கணிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்க மாநிலத்தில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே கிறிஸ்தவர்கள்.
இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட காலகட்டம், மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற ஆரம்ப மாதங்களுடன் ஒத்துப்போகிறது. 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, பாரதிய ஜனதா கட்சி (BJP) 2026ஆம் ஆண்டு மே மாதம் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
EFI மத சுதந்திர ஆணையத்தின் அறிக்கையின்படி, ஹவுரா மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏழு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் ஐந்து சம்பவங்களும், ஹூக்ளி மாவட்டத்தில் நான்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு மூன்று சம்பவங்கள் என்ற அளவில் இருந்த தாக்குதல்கள், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாதத்திற்கு ஒன்பது சம்பவங்களாக அதிகரித்துள்ளன.
உடல் ரீதியான வன்முறை மற்றும் மிரட்டல் அல்லது துன்புறுத்தல் ஆகியவை தலா எட்டு சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன. வழிபாட்டுக் கூட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட ஐந்து சம்பவங்களும், மத வழிபாட்டுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட நான்கு சம்பவங்களும், பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான மூன்று சம்பவங்களும், கட்டாய மதமாற்றம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள நான்கு முக்கியச் சம்பவங்களில் மூன்று பெண்களுக்கு எதிரான தாக்குதல்களாகும்.
உலுபேரியாவில் ஜெபக் கூட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல்
ஹவுரா மாவட்டத்தின் உலுபேரியா பகுதியில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பட்டாச்சார்ஜி பவனில் நடைபெற்ற ஜெபக் கூட்டத்திற்குள் சுமார் 35 பேர் கொண்ட குழு நுழைந்து, பெண்கள் உட்பட பல விசுவாசிகளைத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பேலா பச்சார் என்ற பெண் குத்தப்பட்டும் கடிக்கப்பட்டும் வயிற்றுப் பகுதியில் காயமடைந்துள்ளார். மேலும், பெண்களின் சேலைகளை வலுக்கட்டாயமாக இழுத்து அவமதித்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மதமாற்றக் குற்றச்சாட்டை முன்வைத்து ஜெபக் கூட்டத்திற்குத் தடை
செப்டம்பர் 27ஆம் தேதி, பூர்பா பர்த்வான் மாவட்டத்தின் நெரோடிகி பகுதியில் உள்ள லோக் கோபால் பவனில் நடைபெற்ற ஜெபக் கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மதமாற்றம் நடைபெறுவதாக முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மாநிலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், மதத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அங்கிருந்த விசுவாசிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது ஜெபக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாக்கப்பட்டதுடன், அங்கிருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. மின்னணு சாதனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், சில பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் வலுக்கட்டாயமாக உட்கார்ந்து எழும் தண்டனைப் பயிற்சியைச் (Sit-ups) செய்யுமாறு தாக்குதல் நடத்தியவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பர்த்வான் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்லாபூர், டிங்கால் பகுதிகளில் மூன்று கிறிஸ்தவ குடும்பங்களுக்கு மிரட்டல்
பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தின் சந்திரகோனா பகுதியில் உள்ள பட்லாபூர் மற்றும் டிங்கால் கிராமங்களில் அக்டோபர் 18 முதல் 20ஆம் தேதி வரை மூன்று கிறிஸ்தவ குடும்பங்கள் தாக்குதல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாகியுள்ளன.
மதத் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அறிக்கை கூறுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டதுடன், வலுக்கட்டாயமாகப் போலியான சுத்திகரிப்பு நீராட்டுச் சடங்கிற்கும் உட்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சிறுமியின் கழுத்தை நெரித்ததுடன், பொதுமக்கள் முன்னிலையில் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் மிரட்டப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அந்தக் குடும்பத்தினரை உயிருடன் எரித்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக துர்கா பூஜை பந்தலுக்குச் சென்று, அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
துர்கா பூஜை என்பது மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய இந்துப் பண்டிகையாகும். இப்பண்டிகையின்போது துர்கா தேவிக்காக தற்காலிக வழிபாட்டுத் தலங்கள் (பந்தல்) அமைக்கப்படுகின்றன. அஞ்சலி என்பது துர்கா தேவிக்கு மலர்களைச் சமர்ப்பிக்கும் வழிபாட்டு முறையாகும்.
ராணிகஞ்சில் ஞாயிறு ஆராதனைக் கூட்டத்தில் இடையூறு
நான்காவது சம்பவம் ஜூன் 21ஆம் தேதி பஸ்சிம் பர்த்வான் மாவட்டத்தின் ராணிகஞ்ச் பகுதியில் உள்ள ராம்பாகன் பகுதியில் நடைபெற்றுள்ளது.
மதத் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலர், ஞாயிறு ஆராதனைக் கூட்டத்திற்குள் புகுந்து இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
அங்கிருந்த விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதுடன், வேதாகமங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சில முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆராதனையில் பங்கேற்ற 20 முதல் 25 பேர் வரை காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையில் கவலை
இந்தச் சம்பவங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெவ்வேறு விதமாக இருந்ததாக EFI ஆணையம் தெரிவித்துள்ளது.
சில சம்பவங்களில் காவல்துறையினர் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதுடன், முதல் தகவல் அறிக்கையையும் (FIR) பதிவு செய்துள்ளனர்.
ஆனால், வேறு சில சம்பவங்களில் புகார்களைப் பதிவு செய்வதில் தாமதம், எதிர்ப் புகார்கள் அளிக்கப்படுதல், வழிபாட்டில் பங்கேற்றவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுதல் அல்லது காவலில் வைக்கப்படுதல் மற்றும் புகார்கள் மீது உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள், மத சுதந்திர ஆணையத்தால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும், புகார் அளிக்கப்படாததால் சில சம்பவங்கள் தங்களது கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம் என்றும் EFIRLC தெரிவித்துள்ளது.
அரசுக்கும் காவல்துறைக்கும் EFI கோரிக்கை
பதிவாகியுள்ள சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விரைவாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் EFI மத சுதந்திர ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், போதகர்கள் மற்றும் தொடர்ச்சியாக மிரட்டல்களைச் சந்தித்து வரும் குடும்பங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தங்களது கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாநில அரசு, காவல்துறை, கிறிஸ்தவ பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே வழக்கமான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
அறிக்கையில், “சட்டவிரோத மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உரிய சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும். அத்தகைய குற்றச்சாட்டுகள் வன்முறை, மிரட்டல் அல்லது அமைதியான வழிபாட்டுக் கூட்டங்களுக்குத் தடையாக இருப்பதற்கு ஒருபோதும் நியாயமாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தனிநபருக்கும் தனது மதத்தைப் பின்பற்றவும், வெளிப்படுத்தவும், பரப்பவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
EFI பொதுச்செயலாளர் ரெவரண்ட் விஜயேஷ் லால் மேலும் கூறுகையில், “ஒருவர் தனது விசுவாசத்தின்படி வாழ்வதற்கான சுதந்திரம் வெறும் கொள்கை அளவில் அங்கீகரிக்கப்படுவதோடு நின்றுவிடாமல், நடைமுறையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டப்படி பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.