இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர், இயேசு கிறிஸ்துவை புதிதாக அறிந்திருந்தார். தேவ கிருபையால் தாம் பெற்ற இரட்சிப்பு (புதுவாழ்வு) எவ்வளவு உயர்ந்ததும் அரியதுமென்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் அவருக்கிருந்தது. அவரிடம் அநேக வீடுகள் இருந்தன. அவற்றில் வாடகைக்கு இருந்தவர்களும், அவரிடம் கடன்பட்டிருந்தவர்களும் பலர் இருந்தனர்.
ஒருநாள் அவர் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். அது அனைவரும் காணும்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது. அந்த அறிவிப்பில், “அடுத்த நாள் காலை சரியாக 10 மணி முதல் 12 மணிக்குள், தங்கள் கடன் பத்திரங்களை என் அலுவலகத்துக்கு கொண்டு வந்தால், அவற்றை ஒப்படைக்கும் அனைவரின் கடன்களும் முழுமையாக மன்னிக்கப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை கண்ட மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சந்தேகமும் அதிகமாக இருந்தது. “இது உண்மையா? ஏமாற்றமா?” என்ற எண்ணம் பலரின் மனதையும் ஆட்கொண்டது. சிலர் இதை நம்பவில்லை; சிலர் இது ஏதோ தந்திரம் என்று எண்ணினர்.
மறுநாள் காலை, செல்வந்தரின் வீட்டின் முன்பு மக்கள் கூட்டம் திரண்டது. சிலர், “இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலிருக்கிறது” என்று பேசிக் கொண்டனர். மற்றவர்கள், “இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது” என்று எண்ணினர். பலர் கடன் பத்திரங்களை கையில் வைத்திருந்தும், முதலில் உள்ளே செல்ல தயங்கினர். “நாம் முதலில் போகமாட்டோம்; நீங்கள் போங்கள்” என்று ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டே நேரத்தை வீணடித்தனர். இவ்வாறு நேரம் மெதுவாக குறைந்துகொண்டே போனது.
அந்த நேரத்தில், ஒரு வயதான தம்பதியினர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அங்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களிடம், “இந்த வீட்டின் சொந்தக்காரர் உள்ளே இருக்கிறாரா?” என்று கேட்டனர். அப்போது ஒருவர், “ஆம், அவர் உள்ளே இருக்கிறார்; ஆனால் இன்னும் யாருடைய கடனும் மன்னிக்கப்படவில்லை” என்று பதிலளித்தார்.
அதற்கு அந்த தம்பதியினர், “நாங்கள் தொலைதூரத்தி லிருந்து இந்த அறிவிப்பை நம்பி வந்துள்ளோம். எங்களுக்கு உதவ யாரும் இல்லை. இது உண்மையா பொய்யா என்று எங்களுக்கு தெரியாது; ஆனாலும் நம்பிக்கையோடு உள்ளே செல்கிறோம்” என்று கண்ணீர் மல்க கதவைத் தட்டினர்.
அவர்களை உள்ளே அழைத்துச் சென்ற காரியதரிசி, அவர்களிடமிருந்த கடன் பத்திரங்களை பெற்றுக்கொண்டு, சற்று காத்திருக்கும்படி கூறினார். சிறிது நேரம் கழித்து, செல்வந்தரின் கையொப்பமிட்ட ஆவணத்துடன் திரும்பி வந்து, “உங்களுடைய அனைத்து கடன்களும் மன்னிக்கப்பட்டு விட்டன; நீங்கள் சுதந்திரமாக செல்லலாம்” என்று அறிவித்தார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியே வந்த அந்த தம்பதியினரை பார்த்த மக்கள், “உண்மையிலேயே உங்கள் கடன்கள் மன்னிக்கப்பட்டதா? அவர் தன் வார்த்தையை நிறைவேற்றினாரா?” என்று ஆவலுடன் கேட்டனர். அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தனர்.
அந்த சமயத்தில், அந்த செல்வந்தர் வெளியே வந்தார். உடனே அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் கடன் பத்திரங்களை உயர்த்தியபடி, கண்ணீரோடு “எங்களுடைய கடன்களையும் மன்னியுங்கள்” என்று வேண்டினர். ஆனால் அவர் அமைதியாக, “நான் உங்களுக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. நான் கொடுத்த வாய்ப்பை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை. நீங்கள் சரியான நேரத்தில் உள்ளே வந்திருந்தால், உங்கள் கடன்களும் மன்னிக்கப் பட்டிருக்கும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இறைமக்களே, இதுபோலதான் இரட்சிப்பு (புதுவாழ்வு). அது இலவசமாகக் கொடுக்கப்படுகிறது; ஆனால் அது மலிவானதல்ல. தேவன் நமக்கு அருளும் கிருபை ஒரு அரிய வாய்ப்பு. அதை நாம் உதாசீனம் செய்துவிட்டால், பின்னர் வருந்தினாலும் பயன் இல்லை. ஆகையால், கிடைக்கும் கிருபையின் காலத்தை இகழாமல், அதை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று கிடைக்கும் வாய்ப்பை நாளைக்கு தள்ளிவைக்கா தீர்கள். தேவன் தரும் கிருபையை உணர்ந்து, அதை ஏற்றுக்கொள்ளும் மனதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
– போதகர். பெ. பெவிஸ்டன்