ஒரு ஊரில் ஒரு அறிவாளி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கடவுள் பக்தி மிகுந்தது. தினமும் கோவிலுக்குச் சென்று கடவுளை வேண்டிக் கொண்டார். அதன் பிறகு காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்று வாழ்ந்தார். அவரது வாழ்க்கை எளிமையானதாயிருந்தாலும், ஓரளவு வருமானத் துடனும் மனநிம்மதியுடனும் சென்றுகொண்டிருந்தது.
ஒருநாள் வழக்கம் போல் காட்டுக்குச் சென்று கொண்டி ருந்த போது, அவர் ஒரு வியப்பான காட்சியை கண்டார். முன்னங்கால்களை இழந்த ஒரு நரி அங்கே இருந்தது. அதை பார்த்த அவர் ஆச்சரியமடைந்து, “இந்த நரிக்கு இரண்டு கால்களே இல்லை. இப்படியிருக்க இது எப்படி வேட்டையாடி தன் பசியை போக்கிக் கொள்ளும்?” என்று சிந்திக்கத் தொடங்கினார்.
அவரது சிந்தனை முடிவுக்கு வருவதற்குள், அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது. பயந்த அவர் உடனே ஓடி ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். அந்த புலி தன் வாயில் பிடித்துக் கொண்டிருந்த மானை தரையில் போட்டது. அது அமைதியாக அதை சாப்பிட்டு வயிறு நிறைந்ததும், மீதமிருந்த இறைச்சியை அங்கேயே விட்டுவிட்டு சென்றது.
சில நேரம் கழித்து, கால்கள் இல்லாத அந்த நரி மெதுவாக அங்கே வந்தது. புலி விட்டுச் சென்ற இறைச்சியை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது. இதை மறைந்து பார்த்திருந்த அறிவாளி மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் மனதில் நினைத்தார்: “இரண்டு கால்களும் இல்லாத ஒரு நரியையே கடவுள் இப்படிச் சாப்பாடு கொடுத்து காப்பாற்றுகிறார் என்றால், என்னை அவர் நிச்சயமாக காப்பாற் றுவார். நான் தினமும் அவரை வணங்குகிறவன் அல்லவா? இனிமேல் நான் உழைக்க வேண்டியதில்லை. கடவுள் என்னை பார்த்துக் கொள்வார்.”
அவ்வாறு எண்ணிய அவர், வேலை செய்வதை நிறுத்தி, ஆலய வளாகத்தில் அமர்ந்துகொண்டு, “கடவுள் என்னை போஷிப்பார்” என்று காத்திருக்கத் தொடங்கினார். நாட்கள் சென்றன. ஆனால் அவருக்கு உணவு எதுவும் கிடைக்க வில்லை. பசி அவரை வாடச் செய்தது. உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக மாறினார். இறுதியில் ஒரு இரவு, யாரும் இல்லாத ஆலயத்தில் அவர் துயரத்துடன் கடவுளை நோக்கி அழுதார்:
“ஆண்டவரே! என் பக்தியில் உமக்கு நம்பிக்கை இல்லையா? நான் உம்மை நம்பி இங்கே வந்தேன். காட்டில் அந்த நரிக்கு புலி மூலம் உணவு கொடுத்தீர். அதை பார்த்து தானே நான் இங்கே வந்தேன். என்னை மட்டும் ஏன் தவிக்க விடுகிறீர்? இது நியாயமா?” என்று கதறினார். அந்த நேரத்தில், ஒரு சத்தம் அவரது உள்ளத்தில் ஒலித்தது: “முட்டாளே! நீ கற்றுக் கொள்ள வேண்டியது நரியிடமிருந்து அல்ல; புலியிடமிருந்துதான்! போய் புலியைப் போல உழைத்து சாப்பிடு. உனக்குக் கிடைத்ததிலிருந்து இயலாதவர்களுக்கு பகிர்ந்து கொடு.” இந்த வார்த்தைகள் அவரை ஆழமாக சிந்திக்க வைத்தன. அவர் தன் தவறை உணர்ந்து, மீண்டும் உழைப்பைத் தொடங்கி, தனது வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொண்டார்.
இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்துரைக்கிறது. இன்று சிலர் “நான் உழைக்காமல் வாழ வேண்டும்” என்ற மனோபாவத்துடன் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான எண்ணம். தேவன் மனிதனை படைத்தபோது உழைத்து வாழ வேண்டும் என்ற அடிப்படையை ஏற்படுத்தினார். உழைப்பின்றி கிடைக்கும் வாழ்க்கை நிலையானதல்ல. செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல், தேவனை மட்டும் சார்ந்து இருப்பது சரியான விசுவாசம் அல்ல.
இறைவேதம் இவ்வாறு கூறுகிறது:“ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக” (யாத்திராகமம் 20:9)“பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடைய வேண்டும்” (2 தீமோத்தேயு 2:6) ஆகையால், நரி போல பிறர்மீது சார்ந்த வாழ்க்கையை அல்ல, புலி போல உழைத்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம். நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களை நம்மோடு மட்டுமே வைத்துக் கொள்ளாமல், தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
· உழைப்பு நம்மை உயர்த்தும்;
· பகிர்வு நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும்;
எனவே, உழைத்து வாழ்ந்து, பிறரையும் உயர்த்தும் வாழ்க்கையை நடத்துவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
– போதகர். பெ. பெவிஸ்டன்