ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தால் செய்யப்பட்ட சுவற்றை அகற்றிக் கொண்டிருந்தார். ஜப்பானில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். இரண்டு மரக்கட்டைகளுக்கு இடையில் சிறிய இடைவெளி விட்டு அமைக்கப்படும் அமைப்பு அங்குள்ள வீடுகளின் தனிச்சிறப்பாகும்.
அந்த நபர் சுவற்றை மெதுவாக அகற்றிக் கொண்டிருந்தபோது, அந்த இரு கட்டைகளுக்கிடையில் ஒரு பல்லி சிக்கியிருப்பதை கவனித்தார். அது உயிருடன் இருந்தது. அதை கண்டதும் அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். மேலும் ஆராய்ந்தபோது, வெளிப்புறத்தில் இருந்து அடிக்கப் பட்டிருந்த ஒரு ஆணி, அந்த பல்லியின் காலில் பாய்ந்து, அதை அங்கேயே சிக்கவைத்திருந்தது.
அவர் மேலும் சிந்தித்தார்: “இந்த ஆணி அடிக்கப்பட்டு குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படியிருக்க, இந்த பல்லி எப்படி இன்னும் உயிருடன் இருக்கிறது?” என்ற கேள்வி அவரை ஆழமாகக் குழப்பியது. இந்த அதிசயத்தின் பின்னாலுள்ள காரணத்தை கண்டறிய அவர் முடிவு செய்தார்.
அவர் ஒரு கேமராவை அமைத்து அந்த இடத்தை கவனிக்கத் தொடங்கினார். சில நேரம் கழித்து, இன்னொரு பல்லி அங்கே வந்தது. அது தன் வாயில் உணவை கொண்டு வந்து, சிக்கி இருந்த பல்லிக்கு உணவளிப்பதை அவர் தெளிவாகக் கண்டார். அந்த காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர் உணர்ந்த உண்மை என்னவென்றால், ஐந்து ஆண்டுகளாக அந்த பல்லி தனது சக பல்லியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து உணவளித்து காப்பாற்றி வந்தது.
இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; மிக ஆழமான வாழ்க்கைப் பாடத்தை எடுத்துரைக்கும் நிகழ்வு. ஒரு சிறிய ஜீவராசி கூட, தன் இனத்தவரை அன்புடன் காக்கும் பண்பை வெளிப்படுத்துகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தொடர்ந்து அக்கறையுடன் மற்றொருவரை பாதுகாக்கும் மனம் அதற்கு உண்டு. ஒரு பல்லியால் கூட இப்படிப் பட்ட தியாகமும் அன்பும் செய்ய முடிகிறது என்றால், மனிதராகிய நமக்கு அது முடியாதா?
நம்மை உருவாக்கியதும், பத்து மாதங்கள் சுமந்ததும், தன் உதிரத்தை பாலாக்கி நம்மை வளர்த்ததும் நம் பெற்றோர்கள் தான். ஆனால் இன்று சிலருக்கு, அதே பெற்றோர் பாரமாகத் தோன்றுகிறார்கள். இது சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். மனிதன் மற்ற எல்லா ஜீவராசிகளையும் விட உயர்ந்தவன் என்று நாம் பெருமை பேசுகிறோம். ஆனால் அன்பு, பரிவு, தியாகம் ஆகியவற்றில் நாம் உண்மையாக உயர்ந்தவர்களாக இருக்கிறோமா? என்பதை நம்மை நாமே சிந்திக்க வேண்டும்.
இறைமக்களே, அன்பு என்பது எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் செயலாக இருக்க வேண்டும். “எனக்கு என்ன லாபம்?” என்ற எண்ணம் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நிர்ணயிக்கக் கூடாது. அந்த எண்ணம் வியாபாரத்தில் இருக்கலாம்; ஆனால் உறவுகளில் இருக்கக் கூடாது.
இறைவேதம் இவ்வாறு போதிக்கிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையா னவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவை களையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது” (பிலிப்பியர் 2:3-5).
அன்பை வெளிப்படுத்துவதற்கு மதம் அவசியமில்லை; மனம் இருந்தால் போதும். பரிவோடு நடப்பதும், பிறரை மதிப்பதும், உதவியும் அக்கறையும் காட்டுவதும் மனிதனின் அடிப்படை பண்புகளாக இருக்க வேண்டும். ஆகையால், பெற்றோர்களை மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவோம். எதிர்பார்ப்பில்லாத அன்பை விதைப்போம்; அது ஒருநாள் நிச்சயமாக பலன் தரும்.
அன்பு காட்டுவது ஒரு தேர்வு அல்ல,
அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்