ஒரு நாள், உலகில் உள்ள பலவிதமான பழங்கள் அனைத்தும் ஒன்று கூடி ஒரு பிரமாண்டமான மாநாட்டை நடத்தின. அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு பழமும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தத் தயாராக இருந்தது. இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த ஒரு பழம், தனது தொடக்க உரையை முடிக்கும் முன் ஒரு கேள்வியை எழுப்பியது: “உலகில் உள்ள அனைத்து பழங்களிலும் எது மிகச் சுவை மிக்கதும், சிறப்புடையதும்?” இந்தக் கேள்வி எழுந்தவுடன், அங்கே இருந்த பழங்கள் அனைத்தும் உற்சாகமடைந்தன. ஒவ்வொரு பழமும் தானே சிறந்தது என்பதை நிரூபிக்க ஆர்வமாக இருந்தது.
ஆப்பிள் பழம் தன்னுடைய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பெருமையாகப் பேசத் தொடங்கியது. செர்ரிப்பழம் தனது இனிமையை எடுத்துக்காட்டியது. அன்னாசிப் பழம் தனது தனித்துவமான சுவையைப் பற்றி பேசிக் கொண்டது. கொய்யாப்பழம், மாதுளம்பழம், மாம்பழம் என ஒவ்வொன்றும் தங்களுடைய சிறப்பை உயர்த்திக் காட்டிக் கொண்டன.
அந்த இடம் முழுவதும் தன்னிலைப் புகழ்ச்சியால் நிரம்பியது. ஒவ்வொரு பழமும் தானே மிகச் சிறந்தது என்ற எண்ணத்தில் மார்தட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஒரு பழம் மட்டும் அமைதியாக இருந்தது. அது திராட்சைப்பழம். மற்ற பழங்கள் எல்லாம் தங்கள் கருத்துக் களைப் பகிர்ந்து கொண்டிருந்தபோதும், திராட்சை எந்த வார்த்தையும் பேசவில்லை. அது சாந்தமாகவும் மௌனமாகவும் நின்றது. இதைக் கவனித்த மற்ற பழங்கள், “இதற்கு சொல்ல எதுவும் இல்லை போலிருக்கிறது” என்று நினைத்து, இகழ்ச்சி யுடன் சிரிக்கத் தொடங்கின.
அந்த நேரத்தில், பலாப்பழம் மெதுவாக உருண்டு வந்து, திராட்சைப்பழத்தைக் கண்டு அன்புடன் கேட்டது: “திராட்சையே, நீ ஏன் மௌனமாக இருக்கிறாய்? உனக்குள் இருக்கும் சிறப்பை நீயே சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் உன் மதிப்பை அறிந்துகொள்ள முடியும்” என்று கூறியது.
அதற்கு திராட்சைப்பழம் அமைதியாகப் பதிலளித்தது: “அண்ணா, நீங்கள் எல்லோரும் தனித்தனியாக வளர்கிறீர்கள். தனித்தனியாக விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. நாங்கள் எப்போதும் கொத்தாக, ஒன்றிணைந்து வளர்கிறோம். ஒருவர் வளர்வதற்கு மற்றவர் இடம் கொடுக்கி றோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப்போகும் போதும், நாங்கள் பிரியாமல் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் மதிப்படைவதில்லை. எங்களைச் சாறாக்கும் போதும், நாங்கள் தனித்தனியாக அல்ல; ஒன்றாகவே அழிகிறோம். வாழ்விலும், வளர்ச்சியிலும், இறுதியிலும் கூட, நாம் இணைந்து இருப்பதுதான் எங்களுடைய சிறப்பு.” இந்த வார்த்தைகளை கேட்ட பிற பழங்கள் அனைத்தும் அமைதியாகின. தங்களது தற்பெருமை வெளிப்பட்டதை உணர்ந்து, அவை வெட்கத்துடன் தலைகுனிந்தன.
இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. உலகில் பலர் தங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் சாதனைகள், திறமைகள், புகழ் ஆகியவற்றை வெளிப்படுத்தி மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையான மகத்துவம், பெருமையாகப் பேசுவதில் அல்ல; அமைதியாக செயல்படுவதில் உள்ளது. மௌனம் என்பது பலவீனம் அல்ல; அது ஒரு வலிமை. பல நேரங்களில், உண்மையான திறமை உள்ளவர்கள் தங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.`அவர்கள் செயல்களே அவர்களைப் பற்றி பேசுகிறது.
இதனால்தான் இறைவேதம் நம்மை எச்சரிக்கிறது: “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோப மூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக்கடவோம்” (கலாத்தியர் 5:26). மேலும், “ஒருவரை யொருவர் தங்களிலும் மேன்மையுள்ளவர்களாக கருதுங்கள்” என்று இறைவேதம் அறிவுறுத்துகிறது.
இன்றைய உலகில், நம்மை விட சிறந்தவர்கள் பலர் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அவர்களின் மதிப்பு குறையாது. மௌனம் அவர்களின் பலம்; பணிவு அவர்களின் அழகு. எனவே இறைமக்களே, மற்றவர்களின் மௌனத்தை பலவீனமாக எண்ணாதீர்கள். அமைதியாக இருப்பவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். உண்மையான உயர்வு, பணிவிலும், ஒற்றுமையிலும், விட்டுக் கொடுக்கும் மனதிலும் உள்ளது. நாம் திராட்சைப்பழம் போல ஒன்றிணைந்து வாழ கற்றுக் கொள்வோம். விட்டுக் கொடுத்து வாழ்வோம். மௌனத்தின் மகத்துவத்தை உணர்வோம். அப்போதுதான் நமது வாழ்க்கை பெருமையால் அல்ல, பணிவால் உயர்ந்ததாக மாறும் என்பதை மறந்துவிடாதிருங்கள்.
– போதகர். பெ. பெவிஸ்டன்