ஒரு நாள் இரவு ஒன்பது மணி. ஒரு தகப்பன் தனது ஆறு வயது மகனை தூங்கவைத்து விட்டு அமைதியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அந்தச் சிறுவன் விழித்துக் கொண்டு, தன் தகப்பனை காணாமல் கதவின் அருகே சென்றான். கதவைத் திறந்தவுடன் வெளியே பனி பெய்துக் கொண்டிருப்பதையும், தெருவிளக்கின் வெளிச்சத்தில் மணலில் பதிந்திருந்த கால்தடங்களையும் கவனித்தான்.
அவை தன் தகப்பனுடைய கால்தடங்கள் என்பதை அவன் உடனே உணர்ந்தான். அச்சிறுவன் அவற்றை பின்தொடர முடிவு செய்தான். அவன் தனது சிறிய கால்களை அந்த பெரிய கால்தடங்களின் மேலேயே வைத்து அப்படியே நடக்கத் தொடங்கினான். அவன் எங்கு செல்கிறான் என்பதை அவன் அறியவில்லை; ஆனால் தன் தகப்பனின் அடிச்சுவடுகளை மட்டுமே பார்த்து முன்னேறினான்.
சில நேரத்தில் அவன் வந்து சேர்ந்த இடம் அந்த ஊரிலிருந்த ஒரு மதுபானக் கடை. அங்கே அவன் தகப்பன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார். இந்த காட்சி ஒரு சிறிய சம்பவமாக தோன்றினாலும், மிகப் பெரிய உண்மையை வெளிப்படுத்துகிறது.
பிள்ளைகள் நாம் சொல்லும் வார்த்தைகளை விட, நாம் நடக்கும் வாழ்க்கையைப் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோம் என்பது முக்கியம்; ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பது அதைவிட முக்கியமானது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதை போதிக்கலாம், நல்வழியை சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதை நடைமுறைப் படுத்தவில்லை என்றால், பிள்ளைகள் அந்த வார்த்தைகளை அல்ல, செயலைத் தான் பின்பற்றுவார்கள்.
ஒரு மனிதன் யாரை பின்பற்றுகிறானோ, அவன் வாழ்க்கை அந்த நபரின் திசையில் நகர்கிறது. அதனால் நாம் யாரை முன்மாதிரியாக எடுக்கிறோம் என்பது மிக முக்கியமானது. இந்த உலகத்தில் முழுமையான முன்மாதிரி ஒருவரே இருக்கிறார்; அவர் இயேசு கிறிஸ்து. அவருடைய வாழ்க்கை அன்பு, தியாகம், சுத்தம், நீதியால் நிரம்பியது. வரை பின்பற்ற வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகளை அறிந்து கொள்ள வேண்டும். வேதாகமத்தை வாசித்து, அதன்படி வாழ வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்லும்.
அன்பானவர்களே, உங்கள் பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளை மட்டும் கேட்கவில்லை; உங்கள் வாழ்க் கையைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் நடக்கும் பாதை அவர்களின் பாதையாக மாறுகிறது. எனவே, நீங்கள் நடக்கும் வழி நேரானதாகவும் நல்லதாகவும் இருக்கட்டும்.
நாம் நல்ல முன்மாதிரியாக வாழும்போது, நம்மைத் தொடர்ந்து வரும் தலைமுறையும் நல்ல வழியில் நடக்கும். இதுவே ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் மாற்றும் உண்மையான வழி.
– போதகர். பெ. பெவிஸ்டன்