மைக்கேல் என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவன் பிறந்தநாள் வந்தபோது, அவன் பெற்றோர் அவனுக்கு மூன்று பரிசுகளை அளித்தார்கள். என்னவெனில் பலவிதமான சாக்லேட்டுகள், ஒரு அழகிய கைக்கடிகாரம், மேலும் ஒரு அழகான வேதபுத்தகம். சிறுவயதில் இருந்த மைக்கேல், சாக்லேட்டுகளை பார்த்ததும் பேரானந்தத்தில் மிதந்தான். கைக்கடிகாரத்தை பெருமையுடன் அணிந்தான். வேதபுத்த கத்தையும் மரியாதையுடன் வைத்துக்கொண்டான்; ஆனால் அதன் மதிப்பு அவனுக்குப் புரியவில்லை.
சில நாட்களிலேயே சாக்லேட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டன. அந்த மகிழ்ச்சி குறுகிய காலமே நீடித்தது. கைக்கடிகாரம் சில வருடங்கள் அவனுக்கு பயன்பட்டது. நண்பர்களிடம் காட்டிக்கொண்டு பெருமைப்பட்டான். ஆனால் காலப்போக்கில் அது பழுதடைந்து பயன்பாடின்றி ஓரமாக வைக்கப்பட்டது. இவ்விரண்டு பரிசுகளும் அவனுக்கு ஒரு காலத்திற்கு மகிழ்ச்சியையும் பயன்பாட்டையும் தந்தாலும், அவை நிலைத்திருக்கவில்லை.
ஆனால் வேதபுத்தகம் மட்டும் அவனுடைய வாழ்க் கையில் அமைதியாக இருந்தாலும் ஆழமான மாற்றத்தை உருவாக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் அவன் அதை வாசிக்கவில்லை. ஆனால் அவன் வளர வளர வாழ்க்கையின் சவால்கள் அவனைத் தாக்கின. சந்தேகங்கள், பயங்கள், தோல்விகள், மனஅழுத்தங்கள் அவனை சுற்றிக் கொண்டன. அந்த நேரங்களில் தான் அவன் வேதத்தைத் திறந்து வாசிக்கத் தொடங்கினான். அதில் காணப்பட்ட வார்த்தைகள் அவன் இதயத்தை தொடின. அவனுக்கு ஆறுதல் அளித்தது. வழிகாட்டியது. அவன் எண்ணங்களையும் செயல்களையும் மாற்றத் தொடங்கியது. தினமும் வேதத்தை வாசித்து தியானிக்கும் பழக்கம் அவனுக்குள் உருவானது. அதன் விளைவாக அவன் வாழ்க்கை மெதுவாக மாற்றமடைந்தது.
ஆண்டுகள் கடந்தபோது, மைக்கேல் ஒரு வாலிபனாக வளர்ந்தான். ஒருநாள் ஒரு நற்செய்தி கூட்டத்தில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்டான். “என் வாழ்க் கையில் பெற்ற மூன்று பரிசுகளிலும் நிலைத்தது வேத புத்தகம் மட்டுமே. சாக்லேட்டுகள் எனக்கு தற்காலிக மகிழ்ச்சி தந்தது. கைக்கடிகாரம் சில வருடங்கள் பயன்பட்டது. ஆனால் வேதம் என் வாழ்க்கையை மாற்றியது. அது என்னை வழி நடத்துகிறது. நான் பேசும் வார்த்தைகளிலும், நான் நடக்கும் பாதையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. அது என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் உண்மையான பொக்கிஷம்” என்று அவன் சாட்சியமளித்தான்.
அவன் வேதத்தின்படி வாழத்தொடங்கியபோது, அவன் வாழ்க்கை பலருக்கு ஆசீர்வாதமாக மாறியது. அவன் பிறருக்கு நம்பிக்கை அளித்தான். தேவனுடைய அன்பை பகிர்ந்தான். இறுதியில் அவன் பலரை தேவனுடைய பாதைக்கு நடத்தும் ஒரு சேவகராக உயர்ந்தான்.
இக்கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது. உலகத்தில் நாம் தேடும் பெரும்பாலான விஷயங்கள் தற்காலிகமானவை. பணம், பொருள், சுகம், புகழ் இவை ஒருநாள் அழிந்துவிடும். ஆனால் தேவனுடைய வார்த்தை மட்டும் நித்தியமானது. அது காலத்தால் மாறாது. அது மனிதனை உள்ளிருந்து மாற்றும் சக்தி கொண்டது. பல நேரங்களில் நாம் வெளிப்புற மகிழ்ச்சிகளைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் உண்மையான சமாதானமும் சந்தோஷமும் தேவனுடைய வார்த்தையில் தான் இருக்கிறது. அது நமக்கு வழிகாட்டும் ஒளி. அது இருளில் வழி காட்டும் தீபம். அது நம்மை தவறான பாதையிலிருந்து காக்கும் பாதுகாப்பு.
அன்பானவர்களே, நாம் வேதத்தை வெறும் புத்தகமாக பார்க்காமல், வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை தினமும் வாசிக்க வேண்டும். அதில் தியானிக்க வேண்டும். அதன்படி வாழ வேண்டும். அப்பொழுது தான் அதன் பலனை நம் வாழ்க்கையில் காண முடியும்.
“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தருகிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங்கீதம் 1:2,3).
எனவே, நிலையற்ற உலக விஷயங்களை விட, நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்களை உயர்த்தும். உங்களுக்கு நித்திய நம்பிக்கை யையும் அமைதியையும் அளிக்கும்.
– போதகர். பெ. பெவிஸ்டன்