ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பணத்தை இழந்தால் மீண்டும் சம்பாதிக்க முடியும்; பொருளை இழந்தால் மீண்டும் வாங்க முடியும்; வாய்ப்பை இழந்தாலும் சில நேரங்களில் இன்னொரு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், கடந்து சென்ற நேரத்தை மட்டும் எந்த விலைக்கும் மீண்டும் வாங்க முடியாது. அதனால்தான் நேரம் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
ஒரு மாணவன் ஒரு வருடத்தை வீணாக்கி, தேர்வில் தோல்வியடைந்த போதுதான் அந்த ஒரு வருடத்தின் அருமையை உணர்கிறான். ஒரு தாய், தனது குழந்தை குறைமாதத்தில் பிறக்கும்போது, ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்கிறாள். வார இதழை வெளியிட வேண்டிய ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் மதிப்பு தெரியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க இருக்கும் ஒருவருக்காகக் காத்திருப்பவருக்கு ஒரு மணிநேரத்தின் மதிப்பு தெரியும். பேருந்து, ரயில் அல்லது விமானத்தை ஒரு நிமிடம் தவறவிட்டவரிடம் அந்த ஒரு நிமிடத்தின் அருமையைக் கேட்கலாம். விபத்தில் ஒரு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பியவரிடம் அந்த ஒரு நொடியின் மதிப்பை அறியலாம். போட்டியில் மிகச் சிறிய நேர வித்தியாசத்தில் வெற்றியையோ பதக்கத்தையோ தவறவிட்ட வீரரிடம் அந்த நேரத்தின் அருமையைக் கேட்கலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நேரம் சிறியது என்பதால் அதன் மதிப்பு சிறியதல்ல; சில நேரங்களில் ஒரு நொடியே ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் திசையை மாற்றிவிடும்.
நேரம் ஓடும் நதியைப் போன்றது; அது ஒருபோதும் பின்னோக்கி ஓடாது. கடிகாரத்தின் முள் ஒவ்வொரு நொடியையும் கடந்து செல்லும்போது, உண்மையில் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியே நம்மைவிட்டு விலகிச் செல்கிறது. இன்று நமக்குக் கிடைத்த காலை மீண்டும் நாளை கிடைக்காது; இன்று கிடைத்த வாய்ப்பும் அதே வடிவில் மீண்டும் வராது. எனவே, நேரம் வெறுமனே கழிப்பதற்காக அல்ல, வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காகப் பயன்படுத்த வேண்டும். மாணவன் படிப்பிற்கான நேரத்தைப் படிப்பிலும், தேவனோடு செலவிட வேண்டிய நேரத்தை ஜெபத்திலும், குடும்பத்திற்கான நேரத்தை அன்பிலும், ஊழியத்திற்கான நேரத்தை அர்ப்பணிப்பிலும் பயன்படுத்த வேண்டும். நேரத்தை நிர்வகிப்பவன் தனது நாளை நிர்வகிக்கிறான்; தனது நாளை நிர்வகிப் பவன் தனது வாழ்க்கையின் பாதையை அமைக்கிறான்.
இறைவேதம் கூறுகிறது: “எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதியும்; அப்பொழுது ஞான இருதயத்தைப் பெறுவோம்.” (சங்கீதம் 90:12) மேலும், “காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்; நாட்கள் பொல்லாதவைகளாயிருக்கின்றன.” (எபேசியர் 5:16) இந்த இரண்டு வசனங்களும் நேரத்தை எண்ணிக்கொண்டிருப்பதை மட்டும் அல்ல, அதை ஞானமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. ஆகவே, “நேரம் யாருக்காகவும் காத்திருக்காது; ஆனால் நேரத்தை மதிப்பவன் தனது எதிர்காலத்தை உருவாக்குகிறான்.” நேற்று நம் கையில் இல்லை; நாளை இன்னும் நம் கையில் இல்லை; ஆனால் இன்று என்ற நேரம் மட்டும் நம் கையில் இருக்கிறது. எனவே, இன்று நமக்குக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல், தேவனுக்கும், குடும்பத்திற்கும், கல்விக்கும், ஊழியத்திற்கும், நமது எதிர்காலத்திற்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம்.
“நேரம் பொன் போன்றது” என்று பலர் சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நேரம் பொன்னைப் போன்றது அல்ல; பொன்னைவிட மேலானது. காரணம், பொன்னை நாம் விலை கொடுத்து வாங்க முடியும்; இழந்த பொன்னையும் மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால், கடந்து சென்ற ஒரு நொடியைக்கூட உலகில் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மீண்டும் வாங்க முடியாது. பணத்தை இழந்தால் மீண்டும் சம்பாதிக்கலாம்; பொருளை இழந்தால் மீண்டும் வாங்கலாம்; ஆனால் இழந்த நேரத்தை மட்டும் ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.
எனவே, நமக்குக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தின் அருமையையும் அறிந்து, உணர்ந்து, செயல்படுவோம். நேரத்தை வீணாக்காமல், நேரத்தை மதித்து, நேரத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
– அருள்முனைவர் பெவிஸ்டன்.