யூதர்களின் திருமணங்கள் பொதுவாகக் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. யூத தேசத்து ஆண்கள் நம் நாட்டு ஆடவர்கள் போல வரதட்சணை வாங்குவதில்லை. மாறாக, மணமகளுக்கும் அவளது பெற்றோருக்கும் நகைகள், பணம், பரிசுப் பொருட்கள் அளிப்பது வழக்கம்.
நிச்சயம் செய்யப்பட்டவுடன் கணவன், மனைவி என்று கருதப்பட்டாலும், திருமண தினத்தன்றுதான் கூடி வாழத் தொடங்குவார்கள். திருமண நாள் வரைக்கும் மணமகள், மணமகன் நிச்சய அடையாளமாக அளித்த வெள்ளிக்காசுகளை மிகவும் கவனமாக வைத்திருப்பாள். அவற்றில் ஒன்று காணாமல் போனாலும் திருமணம் தடைபட வாய்ப்புண்டு.
1. மணமகனின் வீட்டில் ஆயத்தம்
திருமண நிச்சயம் நிறைவேறியவுடன், மணமகன் தனது தந்தையின் வீட்டில் தனது சொந்த உழைப்பில் மணமகளுக்கென்று ஓர் இல்லத்தை ஆயத்தம் செய்வார்.
இந்தக் கலாச்சாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டே இயேசு கிறிஸ்துவாகிய மணவாளன், சபையாகிய மணவாட்டிக்கு, பிதாவின் வீட்டில் (பரலோகத்தில்) வாசஸ்தலங்களை ஆயத்தம் செய்யப் போவதாகக் கூறினார்.
வேத வசனம்: யோவான் 14:2, 3
2. மூன்றாம் நாளில் திருமணம்
திருமண நாள் எது என்பதை மணமகளின் குடும்பத்தினருக்கு முன்கூட்டியே அறிவிக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. யூதர்கள் பொதுவாக மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமையில் திருமணத்தை ஏற்பாடு செய்வார்கள். கானாவூரில் இயேசு கலந்து கொண்ட திருமணமும் மூன்றாம் நாளில் நடைபெற்றது (யோவான் 2:1).
இங்கு செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிடுவது யூதர்களின் நாள்காட்டியின்படி ஆகும். யூதர்களுக்கு மூன்றாம் நாள் மிகவும் முக்கியமான நாளாகும். தேவன் உலகத்தைச் சிருஷ்டித்த ஒவ்வொரு நாளையும் நல்லது என்று கண்டார் என வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஆனால், மூன்றாம் நாளில் தேவன் இரண்டு முறை “நல்லது” என்று கூறியுள்ளார்.
வேத வசனம்: ஆதியாகமம் 1:9–12
எனவே, யூதர்கள் இந்த நாளை இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்ற நாளாகப் புனிதமாகக் கருதுகின்றனர்.
3. மணமகனின் வருகைக்காக ஆயத்தமாயிருத்தல்
திருமண நாளை அறியாத மணமகள், மணமகனின் வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். மணமகன் இரகசியமாகவும் திடீரெனவும் வருவார். எனவே, மணமகள் எப்பொழுதும் புத்தாடை அணிந்து தயாராக இருப்பாள். தன் தோழிகளையும் ஆயத்தமாக வைத்திருப்பாள்.
வேத வசனம்: மத்தேயு 25:1
இயேசுவாகிய மணவாளனும் மணவாட்டியாகிய நம்மைச் சந்திக்க ஒருநாள் வருவார். அவர் வரும் நேரத்தை நாம் அறியோம். ஆகவே, நம் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, நாமும் ஆயத்தப்பட வேண்டும். பிறரையும் அவருடைய வருகைக்காக ஆயத்தப்படுத்த வேண்டும்.
4. இரவில் வரும் மணமகன்
யூத மணமகன் பொதுவாக இரவில் வருவது வழக்கம். மணமகன் மணமகளின் இல்லத்திற்கு வந்து, அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வார். பின்னர், தான் ஆயத்தம் செய்த வீட்டிற்கு மணமகளை அழைத்துச் செல்வார். அவருடன் மணமகளின் தோழிகளும் ஆயத்தம் செய்யப்பட்ட விருந்து சாலைக்குச் செல்வார்கள்.
வேத வசனம்: மத்தேயு 25:5, 6
அதுபோல, மணவாளனாகிய இயேசு கிறிஸ்து வரும்போது, அந்த இரகசிய வருகையில் நாமும் அவரோடு அவர் ஆயத்தம் செய்த இடத்திற்குச் செல்லப்போகிறோம்.
நீ ஆயத்தமாக இருக்கிறாயா?
5. திருமண இணைப்பு மற்றும் விருந்து
திருமண இணைப்பு நிறைவேறியவுடன், அந்தச் செய்தியை மணமகன் தனது தோழனுக்கு அறிவிப்பார். பின்னர், விருந்து சாலையில் மகிழ்ச்சியுடன் விருந்து தொடங்கும்.
வேத வசனம்: யோவான் 3:29
அப்பொழுது அலங்கரிக்கப்பட்ட தோரணைகளுடன் மணமக்கள் வருவார்கள். அனைவருக்கும் திராட்சரசம் பரிமாறப்படும்.
அதேபோல, மணவாளனாகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபுறத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை மாற்கு 16:19 மற்றும் கொலோசெயர் 3:1 போன்ற வசனங்கள் விவரிக்கின்றன.
வேத வசனங்கள்: மாற்கு 16:19; கொலோசெயர் 3:1
மணமகனின் வலதுபுறத்தில் மணமகள் அமர்ந்திருப்பாள் என்பதைச் சங்கீதம் 45:9 குறிப்பிடுகிறது. அதுபோல, மணவாட்டிகளாகிய நாம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, வரப்போகும் உலகத்தில் அவருடைய கிருபையின் மகிமையை வெளிப்படுத்துகிறவர்களாக இருப்போம் என்பதை எபேசியர் 2:7 உறுதிப்படுத்துகிறது.
வேத வசனம்: சங்கீதம் 45:9; எபேசியர் 2:7