சீனா நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் எரிக் ஹென்றி. அவர் காலையில் எழுந்தவுடன் அனுதினமும் தனது கடமைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தார். எழுந்து ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, உடற்பயிற்சிகளைச் செய்வது ஆகியவை அவருடைய வழக்கமாக இருந்தன.
100 மீட்டர் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று முதல் பரிசு பெற்று, பல பட்டங்களையும் பதக்கங்களையும் வென்றார்.
இப்படிப்பட்ட நிலையில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஒலிம்பிக் குழுமத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் எரிக் ஹென்றி பங்கேற்று வெற்றி பெறுவார் என்று சீன நாடே எதிர்பார்த்திருந்தது. அவர் தனது நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் என்பதால், இந்தப் போட்டியில் பங்கேற்க அவருக்கும் ஆசை இருந்தது.
ஆனால், போட்டி நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என்று அறிந்ததும் அவர் குழப்பமடைந்தார்.
போட்டியா? ஆலயமா?
சீன நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் அவரைப் போட்டியில் பங்கேற்க உற்சாகப்படுத்தினார்கள். இப்போது ஹென்றி யாருக்குக் கீழ்ப்படிவது என்று சிந்திக்க வேண்டியிருந்தது. “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக” என்று சொன்ன ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? அல்லது பிரமுகர்களின் உற்சாக வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதா?
சிந்தித்து முடிவெடுத்த அவர், ஓட்டப்பந்தயத்தில் ஓடி கனமடைவதைவிட, ஆலயத்திற்குச் சென்று தேவனை ஆராதிப்பதையே மேலானதாகக் கருதினார்.
போட்டியில் பங்கேற்காததால் பலரும் அவரைப் பார்த்து, “பிழைக்கத் தெரியாதவன்” என்று சொல்லி நிந்தித்தனர். பலவிதமான வசைமொழிகளையும் பேசினர். ஆனால், ஹென்றி இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. ஹென்றி இப்போட்டியில் பங்கேற்கத் தனது பெயரைப் பதிவு செய்தார்.
போட்டியை நடத்துபவர்கள், “நீங்கள் 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர் எனத் தொடர்ந்து ஓடிப் பயிற்சி பெற்றிருந்தால்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியும். எனவே, உங்களுக்கு இதில் வெற்றி பெற வாய்ப்பில்லை” என்று கூறினார்கள்.
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான தொடக்கக் கோட்டில் ஹென்றி வந்து நின்றார். அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று பலரும் நினைத்தனர்.
ஆனால், ஆச்சரியம்! அவர் பந்தயத்தில் முதலாவதாக ஓடி வெற்றி பெற்றார்.
போட்டியை நடத்தியவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் அவருடைய வெற்றியின் காரணத்தை அறிய விரும்பினர். ஒரு செய்தியாளர் அவரிடம் வந்து, “மிஸ்டர் ஹென்றி, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு ஹென்றி, “200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்காக ஞாயிற்றுக்கிழமை செல்லாமல், ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இதன் ரகசியம்” என்று கூறினார்.
முடிவுரை
அருமையான தேவ ஜனமே, நாம் ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நம் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்போம். உலகத்தின் வாய்ப்புகளுக்காக தேவனை ஆராதிப்பதை ஒருபோதும் அற்பமாக எண்ணிவிட வேண்டாம்.
“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.” (உபாகமம் 5:12)
யூதர்களின் ஓய்வுநாள் சனிக்கிழமை. கிறிஸ்தவர்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் சபையாகக் கூடி ஆராதிக்கிறார்கள். எனவே, ஆராதனையை அற்பமாக எண்ணிவிடாமல், சரியான நேரத்தில் ஆலயத்திற்குச் சென்று தேவனை ஆராதிப்பதில் உண்மையாயிருப்போம்.
தேவனுக்கு முதலிடம் கொடுப்போம்; அவருடைய சித்தத்தின்படி வாழ்வோம். நம் வாழ்வில் அவர் செயல்படுவதைக் காண்போம்!
— பரமன்குறிச்சி பெ. பெவிஸ்டன்