கொழும்பு, செப்டம்பர் 24: இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பு
முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, தாக்குதல் நடைபெறவுள்ளதாக கிடைத்த உளவுத் தகவல்களைத் தொடர்ந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலக்கரத்ன பண்டார ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இதில் நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலக்கரத்ன பண்டார ஆகியோர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். எனினும், நீதிபதி விராஜ் வீரசூரிய தனது தனிப்பட்ட தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே கிடைத்த எச்சரிக்கை
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி மாலை, ஈஸ்டர் தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நாட்டின் போலீஸ் மாஅதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர, பொதுமக்களின் பாதுகாப்பையும் குற்றங்களைத் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆனால், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாக்குதலைத் தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை, கடமையை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு விசேட மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
2019 ஈஸ்டர் தாக்குதல்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் இலக்காகக் கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 268 பேர் உயிரிழந்ததுடன், 586 பேர் காயமடைந்தனர்.
எட்டு தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில் 40 வெளிநாட்டவர்களும் 45 சிறார்களும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பு தொடர்புடையதாக பின்னர் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்று
2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக 2019 ஈஸ்டர் தாக்குதல் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலைத் தடுப்பதற்கான பொறுப்பில் இருந்த முன்னாள் உயரதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் தற்போது மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.