தூத்துக்குடி, அக்டோபர் 1, 2026: திருச்செந்தூர் அருகே உள்ள புன்னக்காயலில் 14 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மணமகளுக்கும் ஒரு சவரன் தங்கத் தாலி மற்றும் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில், பொதுமக்கள் இணைந்து புன்னக்காயல் ஊர் நலக் கமிட்டி என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் சமூக சேவைகள் மற்றும் ஏழை மக்களுக்கான பல்வேறு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக திருமணம் செய்ய முடியாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பதும் இக்கமிட்டியின் வழக்கமான சமூகப் பணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள 14 குடும்பங்களைச் சேர்ந்த மணமக்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் ஆலோசித்து, பெரியவர்களின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, புன்னக்காயலில் உள்ள தூய ராஜகன்னி மாதா தேவாலயத்தில் 14 ஜோடிகளுக்கும் கூட்டுத் திருமணம் நடைபெற்றது. அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் திருமண நிகழ்வை நடத்தி வைத்தார்.
36 வகையான சீர்வரிசைப் பொருட்கள்
திருமணத்திற்குப் பிறகு புன்னக்காயல் ஊர் நலக் கமிட்டி சார்பில் ஒவ்வொரு மணமகளுக்கும் ஒரு சவரன் தங்கத் தாலி வழங்கப்பட்டது.
மேலும், புதுமணத் தம்பதிகள் தங்களது புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு தேவையான பீரோ, கட்டில், மெத்தை, மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட 36 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெறும் கூட்டுத் திருமணம்
இதுகுறித்து முன்னாள் ஊர் நலக் கமிட்டி தலைவர் சந்திரபோஸ் கூறுகையில், புன்னக்காயல் பகுதியில் பல ஆண்டுகளாக இந்த பாரம்பரிய கூட்டுத் திருமண நிகழ்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களைத் தேர்வு செய்து, ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் நலக் கமிட்டியினர் இணைந்து திருமணத்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டும் 14 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு சவரன் தங்கத் தாலியுடன் குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.